Primary tabs
-
3.2வரைவு பற்றிய இலக்கணம்
களவுப்புணர்ச்சி தொடர்ந்து நிகழும்போது பகற்குறியிலோ அல்லது இரவுக் குறியிலோ அதனைப் பிறர் அறியக் கூடிய சூழல்கள் ஏற்படும். அதன் பின்னரோ அல்லது அவ்வாறு களவு வெளிப்படுவதற்கு முன்னரோ தலைமக்கள் மேற்கொள்ளும் திருமண நிகழ்ச்சிக்கு வரைவு என்று பெயர். (வரைதல் - மணந்து கொள்ளுதல்)
3.2.1வரைவு இரு வகைப்படும். அவையாவன:-
- களவு வெளிப்படும் முன் வரைதல்
- களவு வெளிப்பட்ட பின் வரைதல்
- களவு வெளிப்படும் முன் வரைதல்
இயற்கைப் புணர்ச்சி முதலான நான்கு வகைப் புணர்ச்சிகளிலும் தலைவன் தலைவியோடு மகிழ்வான். இவ்வாறு மகிழ்ந்த தலைவன் இதன்பின் களவை நீட்டிக்க விரும்பாது, தலைவியைத் திருமணம் செய்து கொள்ள முயல்வான். அல்லது பாங்கனாலோ பாங்கியாலோ அறிவுறுத்தப்பட்டுத் தெளிவு பெற்று வரைவு மேற்கொள்வான். இதுவே களவு வெளிப்படும் முன் வரைதல் எனப்படும்.
- களவு வெளிப்பட்ட பின் வரைதல்
தலைமக்கள் பிறர் அறியாதவாறு மறைந்து ஒழுகிய களவு என்னும் காதல் வாழ்க்கை பலருக்கும் தெரியவரும். அச்சூழலில் வரைவு நிச்சயம் நிகழும். அதுவும் மூன்று நிலைகளில் நிகழும். அவையாவன:-
-
தலைவனும், தலைவியும் சேர்ந்து ஊரைவிட்டுப் புறப்பட்டுச் சென்று வேற்று ஊரில் திருமணம் செய்து கொள்ளுதல்.
-
ஊரைவிட்டு, உடன்போக்காகச் சென்றவர்கள் மீண்டும் வந்து தலைவன் ஊரிலோ தலைவி ஊரிலோ வரைவு மேற்கொள்ளுதல்.
-
உடன்போக்கின் இடையே தலைவியை அவளது தமர் (உறவினர் - பெற்றோர்) அழைத்துச் செல்ல, தலைவன் அவர்களை வழிபட்டு உடன்படச் செய்து வரைதல்.
இதனை,
உடன்போய் வரைதலும் மீண்டு வரைதலும்
உடன்போக்கு இடையீடுற்று வரைதலும்
களவு வெளிப்பட்டபின் வரைதல் ஆகும் (44)என்ற நூற்பா விளக்குகிறது.