தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அறத்தொடு நிற்றல்

  • 3.3
    அறத்தொடு நிற்றல்

    அகப்பொருள் இலக்கணத்தில் அறத்தொடு நிற்றல் என்பது முதன்மையானதொரு மரபு ஆகும். தலைமக்களின் வாழ்வை அறவழியில் நிலைப்படுத்த விரும்பும் தோழி முதலானோர் தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் காதல் கொண்ட உண்மையை உரியவர்க்கு உரியவாறு எடுத்துரைப்பது அறத்தொடு நிற்றல் ஆகும். இதனால் தலைவன் தலைவியின் காதல் வெற்றி பெறும்; திருமண நிகழ்ச்சி நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப் பெறும்.

    தலைவன் தலைவியின் அன்பு கலந்த காதல் வாழ்க்கையை நிலைபெறச் செய்து கற்பு வாழ்வை மலரச் செய்வதே அறத்தொடு நிற்றலின் பயன் ஆகிறது. சுருங்கச் சொன்னால் களவைக் கற்பாக்கும் அருஞ்செயலே - அறச்செயலே - இது.

    ஒருவர் பிறருக்கு உண்மை உணர்த்தி நிற்கும் அறத்தொடு நிலை நிகழ்வதற்கான காரணங்களாவன :-

    • ஆற்று ஊறு அஞ்சுதல் (ஆறு = வழி ; ஊறு =துன்பம்)

    தலைவன், தலைவியைச் சந்திக்க வரும் வழியில் உள்ள இடர்ப்பாடுகளுக்குப் பிறர் அஞ்சுதல்.

    • அவன் வரைவு மறுத்தல்

    தலைவியை விரும்பும் தலைவன் அவளை மணந்து கொள்ள உறவினர் மறுத்து விடுதல்.

    • வேற்று வரைவு நேர்தல்

    தலைவியோடு களவில் சந்தித்த தலைவனை விடுத்து, வேறு ஒருவரைத் தலைவிக்கு மணம் முடிக்கும் சூழல் ஏற்படல்.

    • காப்புக் கைம்மிகுதல் (காப்பு = காவல்)

    பகற்குறியிலோ அல்லது இரவுக் குறியிலோ தலைவி தலைவனைக் காணமுடியாதபடி - களவுப் புணர்ச்சி தொடர வாய்ப்பு இன்றி - வீட்டுக் காவல் மிகுதல்.

    தலைவி, தோழி, செவிலி, நற்றாய் என்னும் நால்வரும் அறத்தொடு நிற்பார்கள். தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தை, தன் ஐயர்க்கும் அறத்தொடு நிற்பர் (தன் ஐயர் - தமையன்).

    • முறைகள்
      • களவுப் புணர்ச்சியைச் செவிலி கண்டவிடத்தும், காவல் மிகுந்த போதும் தலைவி அறத்தொடு நிற்பாள்.
      • முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி - எனும் இரு முறைகளில் தோழி அறத்தொடு நிற்பாள்.
      முன்னிலை மொழி
      -
      முன்னிற்பார்க்கு நேரே கூறுதல்.
      முன்னிலைப் புறமொழி
      -
      முன்னிற்பார்க்குக் கூற வேண்டிய செய்தியைப் பிறருக்குக் கூறுவது போலக் குறிப்பிடுவது.

    (முன்நிற்பார் = எதிரில் இருப்பவர்)

    தன் மதிப்பீடு : வினாக்கள்-I
    1.
    இருவகைக் கைகோள்கள் எவை?

    2.
    இயற்கைப் புணர்ச்சி - விளக்கம் தருக.

    3.
    பகற்குறி, இரவுக்குறி நடைபெறும் இடங்கள் யாவை?

    4.
    அறத்தொடு நிற்றல் என்றால் என்ன?

    5.
    முன்னிலைப் புறமொழி - விளக்கம் தருக.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 13:13:32(இந்திய நேரம்)