தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெண்பால் கூற்று - II

  • 6.2 பெண்பால் கூற்று - II

    தலைவன் மீது கொண்ட மிகுந்த காதல் காரணமாக, அவன் மீது உரிமை கொண்டாடும் பரத்தையரை ஏசுதல், பிற பெண்களுடன் தலைவன் கொண்ட தொடர்பை அறிந்து சினத்தல், தலைவனைத் தழுவி மகிழ்தல், அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்லுதல், அவனொடு கொள்ளும் புணர்ச்சியில் நெகிழ்தல், ஆசையின் காரணமாக ஊடலில் தளர்தல், தலைவனின் குரலைக் கேட்டே மகிழ்தல், அவன் தன் கால்களில் விழுந்து வணங்கிய பின்பே அவனை ஏற்றல், தலைவனைப் படுக்கையில் கட்டிவைத்தல், பரத்தையிடம் போக விரும்புபவனைத் தடுக்காமல் போகுமாறு கூறுதல் முதலான செயல்கள் பெண் தலைவனோடு கொள்ளும் உறவால் உருவானவை. இவற்றை இப்பகுதி விளக்குகிறது. பரத்தையை ஏசல், கண்டு கண் சிவத்தல், காதலில் களித்தல், கொண்டு அகம் புகுதல், கூட்டத்துக் குழைதல், ஊடலுள் நெகிழ்தல், உரைகேட்டு நயத்தல், பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல், பள்ளிமிசைத் தொடர்தல், செல்க என விடுத்தல் ஆகிய துறைகள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.

    6.2.1 பரத்தையை ஏசல்

    (தலைவி) பரத்தையை வைதல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    அணிவயல் ஊரனொடு அப்புவிழவு அமரும்
    பணிமொழி அரிவை பரத்தையை ஏசின்று

    என்பது. ‘அழகிய வயல்களையுடைய ஊரில் தலைவனுடன் நீர் விளையாட்டினை விரும்பும் தலைவி பரத்தையை ஏசுதல்’ என்பது இதன்பொருள். தலைவி கூற்றாக வெண்பா விளக்குகிறது. ‘புதுவருவாயினை உடைய கழனிகள் சூழ்ந்த தலைவனின் மாலை அணிந்த மார்பை என் கொங்கைகளால் தழுவி நீர் விளையாடுதற்குப் பரத்தையரின் சேரிகளில் இரவுநேரத்தில் எழும் ஆரவாரம் தடையாக இருக்கிறது’ என வெண்பா விளக்குகிறது. பரத்தையர் தனது இன்பத்திற்குத் தடையாக இருப்பதைத் தலைவி கடிகிறாள்.

    6.2.2 கண்டு கண் சிவத்தல்

    கண்டு சினத்தால் கண் சிவத்தல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    உறுவரை மார்பன் ஒள்இணர் நறுந்தார்
    கறுவொடு மயங்கிக் கண்சிவந்து அன்று

    என்பது. ‘பெரிய மலை போன்ற மார்பினை உடையவனது மாலையைக் கண்டு சினத்துடன் தலைவியின் கண் சிவத்தல்’ என்பது இதன் பொருள். தலைவன் தலைவியை அணுகினான்; அவன் மாலையில் உள்ள குவளைப் பூ, கொடிபோன்ற பெண்ணைத் தழுவியதால் அவள் மார்பில் பூசின சந்தனத்துடன் காணப்பட்டதால் தலைவியின் (கண்களாகிய) குவளை பொறுக்க இயலாமல் சினத்தைக் காட்டியது’ என்று வெண்பா நயமுற விளக்குகிறது.

    கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பின்
    ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து - வாடிய
    தார்க்குவளை கண்டு தரியா இவள்முகத்த
    கார்க்குவளை காலும் கனல்

    என்பது வெண்பா.

    6.2.3 காதலில் களித்தல்

    அன்பினால் மகிழ்தல் என்பது இதன் பொருள். கொளு,

    மைவரை நாடன் மார்பகம் பொருந்திக்
    கைவிடல் அறியாக் காதலில் களித்தன்று

    என்பது. ‘மலைநாடனுடைய மார்பைத் தழுவி அன்பினால் தலைவி மகிழ்தல்’ என்பது பொருள். அவள் மகிழ்ச்சியின் தன்மையை வெண்பா காட்டுகிறது : ‘காதல் மிகுதியால் மகிழ்ந்து அவன் மாலையும் இவள் கோதையும் வாட அப்பெண் தழுவினாள்; தழுவியிருக்கும் போதே விடிந்துவிட, போய்விட்ட அந்த இரவின் மீது சினம் கொண்டாள்’.

    6.2.4 கொண்டு அகம் புகுதல்

    தலைவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்லுதல் என்பது பொருள். கொளு,

    காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக்
    கோதையால் பிணித்துக் கொண்டுஅகம் புக்கன்று

    என்பது. ‘அன்புமிகக் கொழுநனைக் கண்டு தன் மாலையால் அவனைக் கட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : ‘மலைநாடனான தலைவனைக் கண்டு மகிழ்ந்து மை பூசிய கயற்கண்களில் கண்ணீர் முட்டத் தன் மாலையாலே அவன் மார்பைக் கட்டி வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்’.

    6.2.5 கூட்டத்துக் குழைதல்

    புணர்ச்சியில் நெகிழ்தல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    பெய்தார் அகலம் பிரிதல் ஆற்றாக்
    கொய்தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று

    என்பது. ‘தலைவனது மாலையணிந்த மார்பினை விட்டு விலகுதலைப் பொறுக்காத அன்புடைய தலைவி புணர்ச்சியில் உள்ளம் நெகிழ்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : தலைவனது பெரிய மலை போன்ற மார்பினைத் தழுவிக் களிப்படைந்தும், பிரிவு அச்சத்தால் பூங்கொம்பு போலத் தளர்ந்து ‘நான் தனிமைப்பட நீ பிரிகின்றாயோ’ என்று தலைவி கூறுதல்’.

    6.2.6 ஊடலுள் நெகிழ்தல்

    (தலைவன் மீது கொண்ட) ஊடலில் தளர்தல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    நள்ளிருள் மாலை நடுங்குஅஞர் நலிய
    வெள்வளைத் தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று

    இருள் செறிந்த மாலைக்காலத்தில் காதல் துயரம் நெருக்க, தொடியணிந்த தோளினை உடையாள் ஊடலில் குழைதல்’ என்பது பொருள். இதற்கு வெண்பா தரும் விளக்கம் தலைவி தன் நெஞ்சிடம் கூறுவதாக அமைந்துள்ளது : ‘நெஞ்சே! தலைவனது தவறு பற்றி ஆராயாது நாம் ஊடினோம் ; இருப்பினும் அவன் விளக்கம் தந்து நம்மை நெருங்கினும் நீ விரும்பவில்லை ; அப்படி விரும்பாத நீயே இரவிலே நாங்கள் உறங்கமாட்டோம் என்று மாறுபடச் சொல்கிறாயே’. ஒரே நேரத்தில் ஊடலையும் கூடல் விருப்பத்தால் தளர்ச்சியையும் நெஞ்சம் காட்டுவதாகத் தலைவி கூறுகிறாள்.

    6.2.7 உரை கேட்டு நயத்தல்

    (தலைவனது) பேச்சைக் கேட்டு மகிழ்தல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி
    உயர்வரை நாடன் உரைகேட்டு நயந்தன்று

    என்பது. ‘துன்பத்தோடு இருந்த தொடியணிந்த தோளினாள் உயர்ந்த மலைநாடனின் சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைதல்’ என்பது இதன் பொருள். வெண்பா, தலைவி கூற்றாக அமைந்துள்ளது : ‘முற்றிய கதிர்களால் வளைந்த தினைத்தாளில் நூழில் என்னும் கொடி சுற்றும் மலைநாடனுடைய சொற்களைக் கேட்பதால் இனி என் உயிர் துயரத்தில் ஆழாது தளிர்க்கும்’.

    6.2.8 பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்

    (தலைவன்) சிலம்பு அணிந்த காலடிகளில் வணங்கிய பின் (அவனுக்குத் தலைவி) இரங்குதல் என்பது இதன் பொருள். இதன் கொளு,

    கோடுஉயர் வெற்பன் கூப்பிய கையொடு
    பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கின்று

    என்பது. ‘உயர்ந்த குவடுகளைக் கொண்ட மலைநாடன் கூப்பிய கைகெளாடு சிலம்பு அணிந்த தலைவியின் அழகிய காலடிகளில் வணங்கிய பின்பு மனம் நெகிழ்தல்’ என்பது இதன் பொருள். தலைவி தன் நெஞ்சிடம் கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது : ‘அழகிய சிறந்த சிலம்புகள் ஒலிக்கும் காலடிகளில், அழகிய மலை போன்ற மார்பினையுடைய தலைவன் வணங்கியும், வன் நெஞ்சே நீ இன்னும் சிறிது நேரம் ஊடியிருப்பேன் என்கிறாயா! நீ வாழ்க’ வாழ்க என்பது தலைவி தலைவனுக்காக இரங்கிப் பிடிவாதமாக இருக்கும் தன் நெஞ்சிடம் சினம் காட்டுவதைக் குறிக்கும் கேலிச் சொல்.

    6.2.9 பள்ளிமிசைத் தொடர்தல்

    (தலைவனை) உறக்கத்தில் கட்டிவைத்தல் என்பது இதன் பொருள். இதற்கான கொளு,

    மாயிரும் கங்குல் மாமலை நாடனைப்
    பாயல் நீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று

    என்பது. ‘இரவு நேரத்தில் உறக்கத்தை விட்டு உறங்கும் மலைநாடனைக் கட்டிவைத்தல்’ என்பது இதன் பொருள். தலைவி கட்டிவைத்த செயலை வெண்பா உணர்த்துகிறது. தலைவி தலைவனிடம் கூறுவதுபோல் வெண்பா அமைந்துள்ளது : ‘யானையைக் கொடியால் கட்டியது போல நான் என் முன்தானையால் உன்னைக் கட்டியிருக்கவும் இரவிலே. மானையும் மயக்கும் செவ்வரி பரந்த கண்களைக் கொண்ட பெண்ணைத் தேடிச் சோலைக்குப் போகின்றாயோ !’

    6.2.10 செல்க என விடுத்தல்

    போவாய் எனச் சொல்லுதல் என்பது பொருள். இதன் கொளு,

    பாயிருள் கணவனைப் படர்ச்சி நோக்கிச்
    சேயிழை அரிவை செல்கஎன விடுத்தன்று

    என்பது. ‘பரந்த இருளில் கணவன் செல்வதைப் பார்த்துத் தலைவி போவாயாக என அவனை விடுத்தல்’ என்பது பொருள். தன்னை விட்டு வேறொரு பெண்ணைத் தேடிச் செல்லும் அவனைச் செல்க என்று தலைவி அனுப்புவதை வெண்பா காட்டுகிறது : ‘உன்னைத் தடுப்பவர் இங்கு யாரும் இல்லை ; செல்வாயாக ; குறியிடத்தில் உன்னைக் காணாமல் ஆபரமணிந்த பெண்ணாள் மயங்கிக் காத்திருப்பாள் ; அவள் வருந்தாத வண்ணம் நீ விரைந்து செல்ல நிலா உன் வழியில் வெளிச்சமிடட்டும்.’

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    ‘பின்நிலை முயறல்’ என்ற துறையில் கொளுவின் பொருள் யாது?
    2.
    வாராமைக்கு அழிதல் என்பதனை விளக்கும் வெண்பாவின் பொருள் யாது?
    3.
    இரவுத் தலைச்சேறல் என்ற துறைக்குரிய கொளு யாது?
    4.
    பரத்தையை ஏசுதல் என்ற துறையின் பொருள் யாது?
    5.
    கண்டு கண் சிவத்தல் என்ற துறைக்குரிய வெண்பா எது?
புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 10:42:05(இந்திய நேரம்)