தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தண்டியலங்காரமும் காப்பிய இலக்கணமும்

  • 3.6 தண்டியலங்காரமும் காப்பிய இலக்கணமும்

    தண்டியலங்காரப் பொதுவணியியல், காப்பிய இலக்கணங்களை வரையறுத்துரைக்கின்றது. இவ்விலக்கணங்கள், காவியாதரிசம் போன்ற வடமொழி இலக்கண நூல்களின் தாக்கத்தால் தோன்றியவை.

    காப்பியம் தன்னிகரற்ற தலைவனைப் பெற்றிருத்தல், வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் ஆகியவற்றுள் ஒன்றைக் கொண்டிருத்தல், நாற்பொருள் பயத்தல், இயற்கை வருணனை, அகப்பொருள் மற்றும் புறப்பொருள் நிகழ்வுகளைக் கொண்டிருத்தல், உட்பிரிவுகளும் எண்வகைச் சுவைகளும் பெற்றிருத்தல் ஆகிய இலக்கணங்களை உடையது. இவற்றை,

    பெருங்காப் பியநிலை பேசுங் காலை
    வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று
    ஏற்புடைத் தாகி முன்வர இயன்று
    நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
    தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்,
    மலைகடல் நாடு வளநகர் பருவம் .................

    எனத் தண்டியலங்காரம் விளக்குகிறது.

    பெருங் காப்பியத்திற்குரிய இவ்விலக்கணங்களுள் நாற்பொருள் பயத்தல் என்னும் இலக்கணம் மிக இன்றியமையாதது ; ஏனையவற்றுள் ஒருசில குறைந்து வரினும் குற்றமில்லை.

    கூறிய உறுப்பில் சிலகுறைந்து இயலினும்
    வேறுபாடு இன்றுஎன விளம்பினர் புலவர்
    (தண்டியலங்காரம்-9)

    என்பது நூற்பா.

    (இயலினும் = வந்தாலும்
    இன்று = இல்லை)

    இவை தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணமாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 16:58:14(இந்திய நேரம்)