தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D04124- தற்காலத்தில் கால இடைநிலைகள்

  • 4.4 தற்காலத்தில் கால இடைநிலைகள்

        தற்காலத்தில் மூன்று விதமான காலம் காட்டும் இடைநிலைகளைக் காணமுடிகிறது. தற்காலத்தில் பல மொழியியல் அறிஞர்கள் வினைச்சொல்லின் இறந்தகால இடைநிலைகளைப் பாகுபடுத்தி அவரவர்களுக்கு என்று ஒரு தனிக்கோட்பாடு வைத்துக் கொண்டு பிரித்தாளுகின்றனர். இருப்பினும் சான்றாக ஒன்றினை எடுத்துக் கொண்டு விளக்கலாம்.

        கிரால் (Graul)     என்னும்     மேல்நாட்டு அறிஞர் இறந்தகாலத்தை ஐந்து வகையான மாற்றுருபுகளை வைத்துப் பிரித்துள்ளார். இதுவே பெரும்பாலோரால் இன்றைய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது எனலாம்.

    4.4.1 இறந்தகாலம்

        இறந்தகாலத்திற்கான கால இடைநிலையின் மாற்றுருபுகள் -த்-, -த்த்-, -ந்த்-, -இன்-, -ட்- என்னும் ஐந்தாகும்.

        சான்று:

        அழு + த் + ஆன்     = அழுதான்

        பார் + த்த் + ஆன்     = பார்த்தான்

        விழு + ந்த் + ஆன்     = விழுந்தான்

        விழுங்கு + இன் + ஆன் = விழுங்கினான்

        காண் + ட் + ஆன்     = கண்டான்

    4.4.2 நிகழ்காலம்

        நிகழ்காலத்திற்கான கால இடைநிலையின் மாற்றுருபுகள் -கிறு- , -கின்று- என்பனவாகும்.

        சான்று:

        அழு + கிறு + ஆன் = அழுகிறான்

        அழு + கின்று + ஆன் = அழுகின்றான்

        இந்நிகழ்கால     இடைநிலைகள்     சில     சொற்களில் வேறுவிதமாகவும் வருவதுண்டு. அவை: -க்கிறு-, -க்கின்று- என்பனவாகும்.

        சான்று:

        படி + க்கிறு + ஆன் = படிக்கிறான்

        படி + க்கின்று + ஆன் = படிக்கின்றான்

        எனவே     தற்காலத்தில் நிகழ்கால இடைநிலையின் மாற்றுருபுகளாக -கிறு-, -கின்று-,-க்கிறு-, -க்கின்று- என்னும் நான்கும் வழங்கி வருகின்றன எனலாம்.

    4.4.3 எதிர்காலம்

        எதிர்காலம் காட்டும் கால இடைநிலைகளின் மாற்றுருபுகள் - வ்-, -ப்-, -ப்ப்- என்பனவாகும்.

        சான்று:

        அழு + வ் + ஆன் = அழுவான்

        கேள் + ப் + ஆன் = கேட்பான்

        படி + ப்ப் + ஆன் = படிப்பான்

        போன்றவையாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 13:27:47(இந்திய நேரம்)