தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-தற்காலத்தில் துணைவினைகள்

  • 5.4 தற்காலத்தில் துணைவினைகள்

    சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் தமிழ்மொழி இலக்கியங்கள், இலக்கணங்கள், உரைகள் என்ற அளவிலேயே வளர்ச்சி பெற்றிருந்தது. எனவே அந்நூல்களைக் கொண்டு அவ்விரண்டு காலகட்டங்களிலும் வழங்கிய துணைவினைகளைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்ட அளவிற்குள்ளேயே அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் தற்காலத்தில் தமிழ்மொழியானது கவிதை, நாடகம், உரைநடை, சிறுகதை, புதினம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்வேறு ஊடகங்களில் மாபெரும் வளர்ச்சி பெற்று விளங்குகிறது. நாடகம், சிறுகதை, புதினம், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் மக்களின் பேச்சுவழக்குக்கும் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. மக்கள் பேச்சுவழக்கில், பேசுவோர் தங்கள மனவுணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும்     எண்ணங்களைத்     தெரிவிப்பதற்கும் ஏற்றவகையில் பலவகையான பொருள்களை உணர்த்துவதற்குத் துணைவினைகளை மிக அதிகமாகப் பயன்படுத்தக் காணலாம். இத்துணைவினைகள் மேலே குறிப்பிட்ட ஊடகங்களில் அதிக அளவில் கையாளப்பட்டன. எனவே தற்காலத் தமிழில் துணைவினைகளின் எண்ணிக்கையும் அவற்றின்     ஆட்சியும் அதிக அளவில் காணப்படுகின்றன.

    தற்காலத் தமிழில் அடி, அருள், அழு, ஆயிற்று, இடு, இரு, எடு, ஒழி, கட்டு, கிட, கிழி, கூடு, கொடு, கொள், தள்ளு, தீர், தொலை, நில், படு, பண்ணு, பார், பிடி, போ, போக, போடு, மாட்டு, முடி, வா, வாங்கு, விடு, வேண்டு, வை போன்ற நாற்பதிற்கும் மேற்பட்ட வினைகள் துணைவினைகளாக வழங்குகின்றன.

    இத்துணைவினைகள் முயற்சி, பலன் அளிக்காமை, உறுதி, துணிவு, முடிவு, மிகுதி, காரணம், கண்டிப்பு, வெறுப்பு, கோபம், சிறப்பு போன்ற பல்வேறு பொருள்களை உணர்த்துவனவாக அமைந்துள்ளன.

    இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களை உணர்த்தும் வகையிலும் சில துணைவினைகள் அமைந்துள்ளன.

    இனித் தற்காலத் தமிழில் துணைவினைகள் தரும் பொருள்களைச் சான்றுகளுடன் காண்போம்.

    • விடு

    இத்துணைவினை உறுதிப்பொருளைத் தருகிறது.

    சான்று :

    எழுதி விடு

    இதற்குப் பொருள் எழுது என்பதாகும். ஆனால் எழுது என்பதில் இல்லாத உறுதிப்பொருள் எழுதிவிடு என்பதில் உள்ளது. விடு என்ற துணைவினையே அப்பொருளைத் தருகிறது. அதேபோல எழுதினேன், எழுதுகிறேன், எழுதுவேன் என்ற வினைச்சொற்களில் இல்லாத உறுதிப்பொருள், அவ்வினைச்சொற்களோடு விடு     என்ற துணைவினையைச்     சேர்த்து     முறையே     எழுதிவிட்டேன், எழுதிவிடுகிறேன், எழுதிவிடுவேன் என்று கூறும்போது இருப்பதைக் காணலாம்.

    விடு என்னும் துணைவினை கட்டாயம் அல்லது கண்டிப்பு என்ற பொருளைத் தருவதாகவும் வழங்குகிறது.

    சான்று :

    வந்து விடு

    போய் விடு

    சொல்லி விடு

    • பார்

    பார் என்பது ஒரு வினைச்சொல். இதற்குப் பார்த்தல் அல்லது காணுதல் என்ற தனிப்பொருள் உள்ளது. ‘இராமன் தன்முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான்’ என்னும் தொடரில் வரும்போது அப்பொருளில் வழங்குகிறது. ஆனால்இதே பார் என்பது வேறு வினைச்சொற்களோடு சேர்ந்து துணைவினையாக வரும்பொழுது அப்பொருளை இழந்து வேறொரு புதிய பொருளைத் தருகிறது.

    சான்று :

    லஞ்சம் கொடுத்துப் பார்த்தான்

    இதில் கொடுத்து என்னும் வினையெச்சத்தோடு வரும்பொழுது பார்த்தான் என்பது, லஞ்சம் கொடுத்து ஒருவரைக் கண்டான் என்னும்     பொருளில்     வழங்காமல்,     முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என்ற புதிய பொருளில் வழங்குவதைக் காணலாம்.

    • ஆயிற்று

    இத் துணைவினை முடிவுப்பொருளைத் தருகிறது.

    சான்று :

    வீட்டு வாடகை கொடுத்தாயிற்று

    தீபாவளிக்குத் துணி எடுத்தாயிற்று

    • தொலை, தள்ளு, ஒழி, அழு

         இத்துணைவினைகள் வெறுப்பு, விருப்பமின்மை, கோபம் முதலிய பொருள்களைத் தருவனவாக வருகின்றன.

    சான்று :

    நீயும் வந்து தொலை (விருப்பமின்மை)

    அவன் எங்கே போய்த் தொலைந்தான்? (வெறுப்பு)

    விட்டுத் தள்ளு (வெறுப்பு)

    செததொழிந்தான், போயொழிந்தான (வெறுப்பு)

    அவனுக்குப் பத்து ரூபாய் கொடுத்தழுதேன (விருப்பமின்மை)

    தள்ளு என்னும் துணைவினை மிகுதிப்பொருளிலும் வருகிறது.

         சிகரெட்டை ஊதித் தள்ளினான்.

         கால்பந்தாட்டத்தில் கோல்களை அடித்துத் தள்ளினான்

    • செய், பண்ணு, வை

    இத்துணைவினைகள்      செய என்னும்     வாய்பாட்டு வினையெச்சங்களோடு சேர்ந்து காரணப்பொருளில் வருகின்றன. மேலும் இவை பிறவினைப் பொருளை உணர்த்தவும் பயன்படுகின்றன.

    சான்று :

    ஆடச் செய், உண்ணச் செய், உறங்கச் செய்,

    ஆடப் பண்ணு, உண்ணப் பண்ணு, உறங்கப் பண்ணு

    ஆட வை, உண்ண வை, உறங்க வை

    ஆடு, உண், உறங்கு என்னும் வினைகள் தன்வினைகள். இவற்றைப் பிறவினைகள் ஆக்குவதற்கு அவற்றோடு செய், பண்ணு, வை ஆகிய துணைவினைகள் சேர்க்கப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.

    • கட்டு

    இத்துணைவினை சிறப்பு, வசவு என்னும் பொருள்களைத் தருகின்றது.

    சான்று :

    மேடையில் ஏறி வெளுத்துக் கட்டினான(சிறப்பு)

    நன்றாக வாங்கிக்கட்டு (வசவு)

    • மாட்டு

    இத்துணைவினை எதிர்மறைப்பொருளைத் தருகின்றது. இது செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களை அடுத்தே வரும்.

    சான்று :

    வர மாட்டேன்

    போக மாட்டேன்

    உண்ண மாட்டேன்

    • வேண்டும்

    இத்துணைவினை கட்டாயம் அல்லது கண்டிப்பு என்ற பொருளில் வருகின்றது. சங்க காலத்தில் இத்துணைவினை வரல் வேண்டும், தரல் வேண்டும் என்பனபோலத் தொழிற்பெயர்களுடனே மிகுதியாக வந்தது. ஆனால் தற்காலத்தில் இது தொழிற்பெயருடன் வருவது பெரும்பாலும் இல்லை. செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களோடு மட்டுமே சேர்ந்து வருகிறது.

    சான்று :

    வர வேண்டும்

    உண்ண வேண்டும்

    தர வேண்டும்

    கொடுக்க வேண்டும்

    • அருள்

    இத்துணைவினை கருணை காட்டுதல் அல்லது அருள் செய்தல் என்ற தன் பொருளில் வழங்காமல் மரியாதைப்பொருளில் வழங்குகிறது.

    சான்று :

    தலைவரே ! எம்வீட்டிற்கு வந்தருளுங்கள்

    இதுகாறும் துணைவினைகள் தற்காலத் தமிழில் என்னென்ன பொருளில் வருகின்றன என்பதைச் சான்றுகள் கொண்டு விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம்.

    • ஒரே துணைவினை பல்வேறு பொருளில் வருதல்

    தற்காலத் தமிழில் துணைவினைகளின் ஆட்சி அதிகமாக இருப்பதால், ஒரு சில துணைவினைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள்களை உணர்த்த வருவதையும் காணமுடிகிறது.

    சான்றாக இரு என்ற வினைச்சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லுக்கு இருத்தல் என்ற பொருள் இருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். இந்த இரு என்னும் சொல் வந்திருந்தான் என்னும் சொற்றொடரில் வா (வந்து) என்ற தலைமை வினையுடன் (Main verb) இணைந்து வந்துள்ளது. இங்கு இரு என்பது துணைவினையாக நின்று தன்பொருளை உணர்த்தாது, இலக்கணப் பொருளை உணர்த்துகிறது. தற்காலத்தில் இரு     என்ற இத்துணைவினை வெவ்வேறு சொற்றொடர்களில் வரும்போது, ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஏற்றாற்போல்     தன்னுடைய பொருளை மாற்றிக்கொண்டு பல்வேறு பொருள்களை உணர்த்தி வருவதைக் காணலாம்.

    சான்று- 1

    குமார் மதுரைக்குப் போய் இருக்கிறான்.

    இச்சொற்றொடரில் இரு என்ற துணைவினை, செயல்முடிவு (perfect) என்னும் பொருளைக் காட்ட வருகிறது.

    சான்று-2

    குமார் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தான்

    இச்சொற்றொடரில் தொடர்செயல (progressive aspect) என்னும் பொருளை உணர்த்த வருகிறது.

    சான்று-3

    நேற்று இரவு மழைபெய்து இருக்கும்

    இச்சொற்றொடரில், எதிர்பார்ப்பு (Supposition) என்னும் பொருளைக் காட்ட வருகிறது.

    • கூட்டுவினை துணைவினையாக வருதல்

    பொதுவாக ஒரு தலைமை வினையுடன் ஒரு துணைவினை சேர்ந்து வருவதே கூட்டுவினை (compound verb) என்று கூறப்படும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

    (எ-டு) வந்திருந்தான், மோதிப் பார்த்தான்.

    ஆனால் தற்காலத் தமிழில் கூட்டுவினைகள் கூட, துணைவினைகள் போல வருகின்ற முறை காணப்படுகின்றது.

    சான்று :

    அவன் தன் அதிகாரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்

    இச்சொற்றொடரில் கட்டிக்கொண்டான் என்ற கூட்டுவினை, வாங்கி என்ற வினையெச்சத்தோடு சேர்ந்து துணைவினையாக வந்து மிகுதியான வசவு என்ற பொருளில் வருவதைக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 12:35:03(இந்திய நேரம்)