Primary tabs
-
5.5 புதிய எண்ணங்களினால் ஏற்படும் மாற்றங்கள்
விகுதி சேர்ந்து வினைச்சொல் பல வகையாய்ப் பெருகுதலே அன்றி இரு, விடு, கொள், படு, உண், நில், வா, போ முதலிய துணைவினைகள் வினைச்சொல்லுடன் சேர்ந்து புதிய புதிய பொருள் வேறுபாடுகளை உணர்த்திப் பலவாய் வளர்தலும் உண்டு.
சான்றாக, எழு என்பது தன்னினும் தாழ்ந்தவர்க்கும் ஒத்தவர் சிலர்க்கும் உரிய ஏவலாக வழங்க, எழுந்திரு என்பது மற்றவருக்கு உரியதாய் வேண்டுகோள் உணர்த்துவதாய் வழங்குகின்றது. எழுது என்பதில் இல்லாத துணிவுப்பொருள் அல்லது முடிவுப்பொருள் எழுதிவிடு என்பதில் உள்ளது. பார் என்பது பொதுவாய் விளங்க, பார்த்துக்கொள் என்பது தன்நோக்கு உடையதாய் வழங்குகின்றது. இவ்வாறே பல துணைவினைகள் பொருள் வேறுபாடுகளை உணர்த்தி வினைச்சொற்கள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன.
அதுபோன்றே சில வினைகள் புதிய எண்ணங்களைக் கொண்டு வருவனவாக உள்ளன.
சான்று :
அச்சடி அச்சிடு
தந்தியடி தந்திகொடு
போன்செய் போன்போடு
போன்றவையாகும். வினைச்சொல்லை அப்படியே எடுக்காது அதோடு சம்பந்தப்பட்ட பெயர்களுடன் பொருத்தமான வினைகளை இணைத்து இத்தகைய வினைகளை ஆக்கிவிடுதல் காண்கிறோம். அச்சு என்பது கட்டளைக்கருவி (mould) எனப் பொருள்படும். இத்துடன் அடி என்ற சொல்லை இணைத்து அச்சடி என்ற சொல் உருவாகி உள்ளது எனலாம்.
புதிய பொருள் உருவாகும்போது சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உருவாகின்றன. பொருத்தமான சொற்கள் என்று சில சொற்கள் கருதப்படுகின்ற நிலையில்தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் ஒன்று நிலைபெற்று மற்றவை வழக்கற்றுவிடக் காண்கிறோம். இப்பண்பை எல்லாவகைச் சொற்களிலும் காணலாம். universityஎன்ற சொல்லுக்கு இணையாகச் சர்வகலாசாலை, பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் உருவாயின. பின்னர்ப் பல்கலைக்கழகம் என்ற சொல் மட்டும் நிலைத்துவிட்டது இங்கு நினைவுகூரத் தக்கது. இதைப் போன்றே துணைவினைகளிலும் இந்நிலையைக் காணமுடிகிறது.
சான்று :
செய்ய வல்லேன்
செய்ய ஒல்லேன்
செய்ய முடியும்
செய்ய இயலும்
செய்ய வரும்போன்ற சொற்கள் செய்யமுடியும் என்ற ஒரே பொருளைத் தருவனவாக அமைந்து வழங்கி வந்தன. ஆனால் தற்காலத்தில் செய்ய முடியும் என்பது மட்டுமே நிலைத்துவிட்டமையையும் ஏனைய சொற்கள் வழக்கு இழந்து விட்டமையையும் இங்குக் காணலாம்.