தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொற்பொருளியலின் பல்வேறு அணுகுமுறைகள்

  • 2.1 சொற்பொருளியலின் பல்வேறு அணுகுமுறைகள்

    சொற்பொருளியலில்     பொருளை     விளக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளின் விளைவாக உண்டாகிய பல்வேறு     கோட்பாடுகளை மொழியியலறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அவை:

    (i) சூழ்நிலைக்கோட்பாடு

    (ii) பயன்பாட்டுக் கோட்பாடு

    (iii) சரிபார்த்தல் கோட்பாடு

    (iv) (அ) உண்மை நிபந்தனைக் கோட்பாடு

    (ஆ) பேச்சுசெயல் கோட்பாடு

    (v) (அ) கிரைஸ் கோட்பாடு

         (ஆ) புறப்பொருட் கோட்பாடு

    இவ்வாறு வேறுசிலகோட்பாடுகளும் உள்ளன. இவற்றின் விளக்கங்களை.

    2.1.1 சூழ்நிலைக் கோட்பாடு (Contextual Theory)

    பல்துறை அறிஞர் பெருமக்கள் சொல்லுக்குரிய பொருள் இதுவென விளக்குவதில் வெவ்வேறு வகையினைக் கடைப்பிடித்தனர். அவ்வகையில் சூழ்நிலைக் கோட்பாடு விளக்கப்பட்டுள்ளது.

    பழங்குடி மக்களின் மொழிக்குறிப்புத் தொடர்பான ஆராய்ச்சியில் அறிஞர் ஈடுபட்டனர். அப்போது, அம்மொழிக் குறிப்புகளைப் பெற்ற சூழ் நிலைகளை உணராத நிலையில் மொழிபெயர்ப்பில் ஈடுபட முடியாது என உணர்ந்தனர். பழங்குடி மக்களுக்கான சொல்லகராதி ஏதும் இல்லை என்பது மற்றொரு இடையூறு. எனவே சூழ்நிலையின் முக்கியத்துவத்தை அறிஞர்கள் உணரலாயினர். இதன் விளைவாக, பொருளை     விளக்க     மொழிக்கூறு     தோன்றும் சூழல்களை விளக்கவேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

    ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் போது சமுதாயச் சூழல் முக்கியத்துவம் பெறுகிறது. இதை விளக்க இயலாது போனால் மொழிபெயர்ப்பு இடையூறுக்கு உள்ளாகலாம். ஒரு மொழியில் உள்ள சொற்கள், வாக்கியங்கள் ஆகியவை சூழ்நிலை தழுவியவையே. எனினும் சில சொற்களும் வாக்கியங்களும் சமுதாயச் சூழல்களைப் பெரிதும் சார்ந்திருப்பதால் அவற்றின் பொருளைச் சூழ்நிலையுடன் இணைத்தால்தான் உணர முடியும்.

    சூழ்நிலைத் தொடர்புகளின் மூலமாகப் பொருளை விளக்க முடியும் என்பதை விளக்குவதே இக்கோட்பாடு. தொடரமைப்புச் சூழல், தொகுப்பமைப்புச் சூழல், பேச்சுச் சூழல் என்பனவற்றைப் பற்றி பிரித் என்பவர் குறிப்பிடுகிறார். பொருளோடு தொடர்புடையது சூழ்நிலை எனக் கருதுவோர் சூழ்நிலைக் கொள்கையாளர் (contextulalists)     எனப்பட்டனர். பொருள் மாறுபடுவதற்குச் சூழ்நிலை காரணமாகலாம் எனக் கூறுவோர் தனித்துவக் கொள்கையாளர் (autonomists) என்றழைக்கப்பட்டனர். சொற்களின் தனிப் பொருள்கள்தான் முதன்மையானவை;     சூழ்நிலையின் காரணமாகத் தனிப்பொருள்களிலிருந்து சூழ்நிலைப் பொருள்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என்பதே இவர்களின் கருத்தாகும்.

    சொற்களின் தொடர்பற்ற பல பொருள்களைத் தெளிவாக உணர்வதற்குச் சூழ்நிலை பெரிதும் துணை புரிகிறது.

    எ.கா :

    (அ) ஒலிச் சூழ்நிலை
    பலகை: பலகை ; பல கை
    (wooden plank)(many arms)
    (ஆ) உருபன் இணைப்புச்      சூழ்நிலை
    ஆறு : ஆற்றை ; ஆறை
        (ஆறு+ற்+ஐ) (ஆறு+ஐ)
         (river)     (six)
    (இ) இலக்கணச் சூழ்நிலை
    ஆடு: ஆடு ; ஆடு
        (sheep)     (dance)
    (ஈ) சொல் இணைப்புச்      சூழ்நிலை
    சவுக்கு: சவுக்கு மரம்; சவுக்கடி
         (atree)     (a whip)
    (உ) பேச்சுச் சூழ்நிலை





    பொருள்களைத் தனித்தனியே பிரித்துணர (அன்புள்ள நண்பர்க்கு, மனமார்ந்த நன்றி); பேச்சு நடைகளை (கதை நடை, ஏச்சு நடை) விளக்க - வகைப்படுத்த.

    சூழ்நிலையைக்     கொண்டே குறைமொழியை நிறைவுசெய்து உணர்ந்து கொள்ள முடியும்.

    எ.கா: நான் வேலூர்

    இத்தொடர்

      1. நான் வேலூரைச் சார்ந்தவன்

      2. நான் வேலூருக்குப் போகிறவன்

      3. நான் வேலூரிலிருந்து வருபவன்.

    எனப் பல பொருள்களைத் தரவல்லது.

    அதாவது, பயணி பேருந்து நடத்துநரிடம் தான் போகவேண்டிய இடத்தைச் சுட்டவும், எங்கிருந்து வருகிறேன் என்பதைச் சுட்டவும், பக்கத்தில்     உட்கார்ந்திருப்பவரிடம் தன்சொந்த ஊர் இன்னதென்பதைக் குறிக்கவும், ‘நான் வேலூர்’ எனும் தொடர் பயன்படுகிறது.

    ஒரு வாக்கியத்தில் சொல் அமைந்துள்ள நிலையை விளக்குவது சொற்சூழல் ஆகும். ‘சொற்சூழ்நிலை’ (word context)யின் அடிப்படையில் லையன்ஸ் (Lyons) என்பார் சுட்டும் கொள்கையைக் காண்போம். ஒரு மொழி பேசுபவரிடம் சொற்களின் பொருள் பற்றிய உணர்வு எவ்வாறு பொதிந்து கிடக்கிறது என்பதை விளக்குவதற்கு அவர் சொற்சூழ்நிலையை அடிப்படையாகக் கொள்கிறார். ஒரு சொல்லின் பொருள் என்பது தொடர்புடைய சில சொற்களின் கலவை என்கிறார். மொழி பேசுவோரிடம் பொருள் உணர்வு (semantic intuition) காணப்படுவதாக அவர் கருதுகிறார். ஒரு சொல்லோடு பொருளில் ஒத்த வேறு சில சொற்களையும், எதிர்ப்பொருள் கொண்ட வேறு சில சொற்களையும், பொருள் பரப்பில் (semantic range) விரிந்த அல்லது முக்கிய சில சொற்களையும் சுட்டிக்காட்ட இயலும்.

    2.1.2 பயன்பாட்டுக் கோட்பாடு (use theory)

    பொருளை உணர்ந்து கொள்வதற்கு மொழிக்கூறின் பயன்பாட்டை உணர வேண்டும் என்பதுதான் பயன்பாட்டுக் கோட்பாட்டின் அடிப்படை.

    ஒரு மொழிக்கூறின் பொருளை மற்றவர்க்கு உணர்த்துவதற்குப் பின்வரும் உத்திகள் கையாளப்படுகின்றன:

    (அ) மொழிபெயர்ப்பு முறை

    (ஆ) சுட்டல் முறை

    (இ) சூழ்நிலைகாட்டு முறை

    (ஈ) எடுத்துக்காட்டு விளக்க முறை

    ஒருமொழிக்கூறு வெவ்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய, ‘பெயர்ச்சிச் சோதனை’ பயன்படலாம். ஆங்கிலத்தில் ‘is’ எனும் சொல் இரண்டு வகையில் பயன்படுவதற்கு உல்மன் காட்டும் எடுத்துக்காட்டு இதோ.

    Twice two is four = Twice two equals four ஃ is =                      equals.

    Rose is red Rose equals red ஃ is equals.

    மொழிக்கும் மொழிக்கூறுகளுக்கும் அக அமைப்பு, புற அமைப்பு என இரண்டு அமைப்புகள் காணப்படும். இவற்றில் அக அமைப்பு முக்கியமானது. அக அமைப்பில் இரண்டு கூறுகள் வேறுபடுமேயானால் அவை வேறுபட்டவை ஆகும். இதை மொழிக் கூறுகளிலிருந்து பெறப்படும் தர்க்க முடிவுகளின் (logical implication) மூலம் அறியலாம். ஆங்கிலத்தில் grey, little என்ற சொற்கள் பெயரடைகள்; அவை அக இலக்கண அமைப்பில் வேறுபடுவதை, அச்சொற்கள் இடம்பெறும் வாக்கியங்கள் புலப்படுத்தும் தர்க்க முடிவிலிருந்து அறிந்து கொள்ளலாம் என்கிறார் வெல்ஸ் (Wells). அவர் தரும் சான்றை நோக்குவோம்.

    எ.கா:

    An elephant is an animal A grey elephant is a grey animal

    An elephant is an animal A little elephant is a little animal

    மொழிக்கூறின் பயன்பாட்டை இலக்கணம், தர்க்கம், பெயர்ச்சி, சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். இவற்றில் சூழ்நிலைப்பயன்பாடு மிக முக்கியமானது. ஒரு மொழிக்கூறு பயன்படுத்தப்படும் போது, எந்தச் சூழலில் அது இடம்பெறுகிறது என்பதைக் காணவேண்டும். வெல்ஸ் என்பார் ‘numerous’ எனும் பெயரடையின் பயன்பாட்டைப் பின்வருமாறு விளக்குகிறார்:

    (அ) numerous என்ற பெயரடை big எனும் பெயரடையை ஒத்துள்ளது.

    எ.கா:

    Enemies of the people are numerous.

    Enemies of the people are big.

    என்று பெயர்ச்சிச் சோதனை மூலம் இது தெரிய வருகிறது.

    (ஆ) இவ்விரு சொற் பயன்பாடுகளும் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஏற்றன எனக் கொள்ள முடியாது.

    எ.கா:

    Enemies of the people are big Some enemies of the people are big.

    Enemies of the people are numerous Some enemies of the people are numerous.

    (இ) ஒன்றினை நிலை நாட்டுவதற்காகவே வாக்கியத்தில் numerous என்ற சொல் பயன்படுத்தப்படுகிறதே தவிர சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

    Enemies of the people are numerous.

    (ஈ) பகைவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தாலும் தெளிவற்றிருப்பது உணர முடிகிறது.

    ஆதலின், numerous என்னும் சொல் சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் பயன்படுவதை உணர முடிகிறது. நான்கு பக்கக் கட்டுரையில் 40 அச்சுப்பிழை இருந்தால் அது numerous, நானூறு பக்க நூலில் 40 அச்சுப்பிழை இருந்தால் அதை numerous என்று கூறுவதில்லை அல்லவா? சுருங்கக் கூறின், பொருள் என்பது சொல்லின் பயன்பாட்டில் வெளிப்படும். அந்தப் பயன்பாடு இலக்கண (அக, புற), தர்க்க, பெயர்ச்சி, சூழ்நிலை முதலான நிலைகளில் எல்லாம் வெளிப்படும் என்று கூறலாம்.

    2.1.3 சரிபார்த்தல் கோட்பாடு (Verification Theory)

    மோரிஸ் (Morris.C) என்பார் வெளியிட்ட கோட்பாடு இது. பயன்பாட்டுக்     கோட்பாடு     வெளியிடப்படுவதற்கு     முன்பு வெளியிடப்பட்ட கோட்பாடு இது.

    ஒரு வாக்கியத்தின் பொருளை விளக் அந்த வாக்கியம் உண்மையா பொய்யா என்பதைச் சரிபார்ப்பதற்கு (நிரூபிப்பதற்கு) உரிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்பது இக்கோட்பாடு.

    இவ்வாறு நிரூபிக்க இரண்டு முறைகள் பயன்படுகின்றன.

    (1) தர்க்க ரீதியிலானது (logical method of verification)

    (2) செயல் முறையிலானது (empirical method of verification)

    (1) தர்க்க ரீதியிலான வழிமுறை

    மொழிக்கென அமைந்த தர்க்க விதிகளின் அடிப்படையில் நிரூபிப்பது இது. தர்க்க அமைப்பு விதிக்கு உட்பட்டிருந்தால் அந்த வாக்கியத்தில் பொருள் உண்டு. இல்லையெனில் பொருளற்றது.

    எ.கா:

    பாரி நாளை வந்து விட்டான்

    இது பொருளற்றது, தர்க்க ரீதியில் முரண்பட்டது.

    பாரி நேற்று வந்து விட்டான்

    பாரி நாளை வருவான்

    என்றிருந்தால் சரியானவை என நிரூபிக்கப்படும்.

    (2) செயல்முறை நிரூபண வழிமுறை

    இம்முறை அனுபவத்தின் அடிப்படையிலானது.

    எ.கா:

    (1) நான் மிதிவண்டியைத் தூக்கினேன் - மெய்யானது

    (2) ‘நான் ஸ்கூட்டரைத் தூக்கின் - லிப்டின் (lift) உதவியால்’ என்ற நிபந்தனையுடன் மெய்யானது!

    (3) நான் வீட்டைத் தூக்கினேன் - நிபந்தனையின் துணையுடனும் மெய் என நிரூபிக்க இயலாது என்பதால் பொருளற்ற வாக்கியமாகிறது.

    கட்ஸ் என்பார் குறிப்பிடும் பொருளடிப்படை முரண்பாட்டு வாக்கியங்கள் பற்றி இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

    எ.கா:

    * என் தங்கையின் கணவர் இன்னும் திருமணமாகாதவர்.

    இவ்வாக்கியத்தின் ஒரு பகுதி ஒருவரை (என் தங்கையின் கணவர்) திருமணமானவர் என்கிறது. இரண்டாம் பகுதி அவரைத் திருமணமாகாதவர் என்கிறது. எனவே பொருளடிப்படையில் இவ்வாக்கியம் முரண்பட்டுக் காணப்படுகிறதல்லவா?

    மோரிசின்     சரிபார்த்தல்     கோட்பாடு (பயன் நிரூபணக் கோட்பாடு), சோதனை     முறைப்     பொருட் கோட்பாடு (Experimental theory of meaning), அனுபவ அறிவுசார் பொருள் கோட்பாடு (Experiential theory of meaning) எனவும் வழங்கப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 12:25:21(இந்திய நேரம்)