தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எண்ணக் கோட்பாடும் பிற கோட்பாடுகளும்

  • 2.3 எண்ணக் கோட்பாடும் பிறகோட்பாடும் (Ideational Theory)

    எண்ணங்களைச் சுட்டுவதற்கு மொழிக்கூறுகள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு சுட்டப்படும் எண்ணங்கள் மொழிக்கூறுகளின் பொருள் ஆகும் என்பதை எண்ணக் கோட்பாடு விளக்குகிறது.

    எண்ணக் கோட்பாடானது கீழ்க்காணுமாறு இருவகைப் படுத்தப்படுகிறது:

    (i) மனஉருக் கோட்பாடு (Mental image theory)

    கண்ணால் காணுகின்ற ஒரு பொருளை (object), பிம்பமாக (image) நிறுத்தும் தன்மை படைத்தது மனித மனம்.

    எ.கா: பறவை

    ஒரு பறவை நம் கண்ணில்படுகிறது. இது பறவைப் பிம்பமாக மனத்தில் உருவெடுக்கிறதல்லவா? இவ்வாறே எந்தப் பொருளையும் பிம்பமாக நிலைநிறுத்தும் ஆற்றல் படைத்தது மனம். இந்தப் பிம்பங்கள், மன உருக்கள் (mental images) ஆகும். ஒரு மொழிக்கூறின் பொருள் (meaning) என்பது அந்த மொழிக்கூறோடு தொடர்புபடுத்தப்படும் மனஉரு ஆகும் என்பதே மனஉருக் கோட்பாட்டின் அடிப்படை.

    இக்கோட்பாடானது, மொழிக்கூறுகளின் பொருளை மனத்தில் நிலைபெறச் செய்வதால் புறப்பொருட் கோட்பாட்டை (object theory)க் காட்டிலும் மலோனது. மொழிக் கூறுகளுக்கும் பொருள் தருவதில் மனிதனின் பங்கு இன்றியமையாதது என்றும், மொழிக் கூறுகளின் பொருளானது வெளிப்படையானது அல்ல என்றும் இக் கோட்பாடு உணர்த்துகிறது.

    இக்கோட்பாட்டிற்கு எதிரான வாதங்கள் வருமாறு:

    எ.கா:

    (அ) பூ

    இச்சொல் ஒருவர் மனத்தில் மல்லிகையின் பிம்பத்தையும் மற்றொருவரின் மனத்தில்     சாமந்தியின்     பிம்பத்தையும் உருவாக்கலாம். இரண்டு மன உருக்களைச் சுட்டுவதால் பூ என்ற சொல்லைப் பலபொருள் ஒருமொழி எனக் கொள்வதில்லை.

    (ஆ) அத்தான், ஆதவன், அக்காள் கணவன்

    இம்மூன்று மொழிக்கூறுகளும் ஒருவர் மனத்தில் ஒரே மன உருவைத் தோற்றுவிக்கலாம். ஆனாலும், அக்கூறுகள் ஒரே பொருளைக் குறிப்பனவாகக் கருதுவதற்கில்லை.

    மேற்குறிப்பிட்டவற்றால் பொருளும் மன உருக்களும் வெவ்வேறானவை என்பது புலனாகிறது.

    (ii) எண்ணக் கோட்பாடு

    நாம் பல நாய்களைக் காண்கிறோம். நிறம், இனம், உடலமைப்பு முதலாயவற்றில் அவை வேறுபட்டிருக்கலாம். அவற்றின் பிம்பங்கள் நமது மனத்தில் உருப்பெறுகின்றன. இந்தப் பல்வேறு பிம்பங்களிலும் சில ஒற்றுமைகளைக் காண்கிறோம். இத்தகைய ஒற்றுமைக் கூறுகளை இணைத்து ஒரு பொது எண்ணம் உருவாக்கப்படுகிறது.     அது நாய் எனும் சொல்லுடன் இணைக்கப்படுகிறது. பிறகு அதுவே அச் சொல்லின் பொருளாக மாறுகிறது. இதுதான் எண்ணக் கோட்பாட்டின் கருத்தாகும்.

    சொற்கள் சுட்டுகின்ற எண்ணங்களில் அவற்றின் பொருள் படிந்து கிடப்பதாகவும், அனுபவத்தின் வாயிலாக எண்ணங்கள் பெறப்படுவதாகவும் தத்துவவியலாளர் கூறுவர்.

    2.3.1 பிற கூறு சுட்டல் பொருட் கோட்பாடு    

    ஒருமொழி பேசும் மக்களிடம் பொதுவாகவே மொழி பற்றிய அறிவு (பொருளறிவு உட்பட) இடம் பெற்றிருக்கும். இதனால்தான் மொழிபேசுவோர்,

    (i) பொருள் உடைய வாக்கியங்கள் எவை என்று பொருளற்ற      வாக்கியங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடிகிறது.

    எ.கா:

    அவள் தயிரைக் குடித்தாள் : அவள் தயிரைக்      கசக்கினாள்.

    அவன் மழையில் நனைந்தான் : அவன் மழையில்      காய்ந்தான்.

    (ii) தெளிவில்லாத,     குழப்பம்     உண்டாக்கும்     மயக்க      வாக்கியங்களைக் கண்டறிய முடிகிறது.

    எ.கா:

    அது பழைய மாணவியர் விடுதி

    இறந்த இளங்கோவனின் தந்தை நல்லவர்.

    (iii) இலக்கணச் செம்மையான வாக்கியங்களைக் கூட      பொருளடிப்படையில் தவறு என்று அறிய முடிகிறது.      அதாவது இலக்கண அமைப்பில் முழுவதும் சரியான      வாக்கியங்கள்கூட     பொருளடிப்படையில்     தவறாகி      விடுகின்றன.

    (எ.கா.)

    (அ) நிறமற்ற பச்சைக் கருத்துக்கள் சினமுற்றுத் துயில்கின்றன. Colourless green ideas sleep furiously (Chomsky)

    (ஆ) வெள்ளைக் காகிதத்தின் மனத்தில் சிகப்பு எண்ணங்கள் நீரைக் குடித்தன. (செ. சண்முகம்)

    தவிர, மொழி பேசுவோர், ஒன்றின் பொருளை உணர்த்த இன்னொன்றைச் சுட்டிக்காட்டுவதை இயல்பாகக் கொண்டுள்ளனர்.

    பெற்றம் = பசு

    தமக்கை = அக்காள்

    இல்லம் = வீடு

    இவ்வாறு சுட்டுவதைப் பிற குறி சுட்டல் முறை என்று கூறுகின்றனர். இதையே இக்கால மொழியியலாளர் பிற கூறு சுட்டல் பொருட் கோட்பாடு என்கின்றனர்.

    ஒரு கூறின் பொருளைச் சுட்டிக்காட்ட ஒருதனிச் சொல்லையோ, இரு சொற் கூட்டத்தையோ, பலசொற்களின் கூட்டத்தையோ பயன்படுத்தலாம்.

    எ.கா:

    அம்மா = தாய்

    சகோதரன் = உடன் பிறந்த ஆண்

    ஒட்டகம் = பாலைவனத்தில் (வாழும்)
                         பாக்குவரத்துக்குப் பயன்படும் விலங்கு.

    ஒரு சொல்லின் பொருளை உணர்த்த அதற்கு ஈடான வேறொரு சொல்லை அகராதி பயன்படுத்துவதுண்டு. அவை ஒரே மொழிச் சொற்களாக இருக்கலாம்.

    எ.கா:

    பெண்கள் - மகளிர்

    கடல் - ஆழி

    பிறமொழிச் சொற்களாக இருக்கலாம்.

    எ.கா:

    காலதர் - window

    திண்ணம் - strength

    ஒரு சொல்லின் பொருளைக் குறிக்க, சில சொற்றொடர்கள் நிகர்கூறுகளாகப் பயன்படுத்தப்படலாம்.

    எ.கா:

    பச்சை - ஒருவகை நிறம்

    கம்மல் - காதில் அணியும் ஒருவகை அணிகலன்

    இவ்வாறாக, ஒரு சொல்லின் பொருளை உணர்த்த மற்றொரு சொல்லையும், ஒரு தொடரின் பொருளை உணர்த்த மற்றொரு தொடரையும் பயன்படுத்த இயலும்.

    2.3.2 கட்ஸ் கோட்பாடு (Katz’s theory)

    அமைப்பு மொழியியலாளர் (Structural Linguists), சொற் பொருளைக் (meaning) கருத்தில் கொள்ளாமல் வாக்கியத்தில் சொற்கள் இடம்பெற்றுள்ள அமைப்பு முறையை மட்டும் கருத்தில் கொண்டு விளக்க முற்பட்டனர். இதன் காரணமாக மொழியிலுள்ள எல்லா வாக்கியங்களையும் அவர்களால் விளக்கிக் கூறமுடியாமல் தோல்வி கண்டனர்.

    இந்நிலையில் ஹேரிஸ் (Harris) என்பார், மாற்று முறையினால் (transformation) ஒரு வாக்கிய அமைப்பு மற்றொரு வாக்கிய அமைப்பாக மாறுகிறது என் கருத் வெளியிட்டார். இவரது மாணவரான நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) தொடரியல் அமைப்பு (Syntactic Structure) எனும் நூலை 1957-இல் வெளியிட்டுப் புதியதொரு கோட்பாட்டினை முன்வைத்தார். ஆனால் ஹேரிஸ் போன்றே இவரும் வாக்கியத்தின் புற அமைப்பிற்கு (surface structure) மட்டுமே சிறப்பளித்து, அக அமைப்பு (deep structure) உள்ளடக்கியிருக்கும் பொருள் (பொருண்மை) பற்றி ஏதும் கருதவில்லை என்பது குறையாகவே கருதப்படுகிறது.

    நோம் சாம்ஸ்கியின் தொடரியல் கொள்கையைப் பின்பற்றி கட்ஸ் (Katz). போடோர் (Fodor) எனும் இருவரும் இணைந்து ‘சொற்பொருட் கோட்பாட்டின் அமைப்பு’ (The Structure of a Semantic theory) என்பதை 1963-இல் வெளியிட்டனர். வாக்கியத்தின் அக அமைப்பானது தொடரியல் அமைப்பு மற்றும் பொருண்மை பற்றிய செய்திகளை உள்ளடக்கியிருக்கும் என்பது இக்கோட்பாட்டின் சிறப்பாகும்.

    2.3.3 உருவாக்கச் சொற்பொருளியல்

    தொடரியல் கொள்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளைக் காணுவதற்காக உருவானது இது. ஜார்ஜ் லேக்காப் (George Lakoff), ஜான் ராபர்ட் ராஸ் (Ross J.R), ஜேம்ஸ் மக்காவ்லே (James E. Mecawley) ஆகியோர் இப்புதிய கோட்பாட்டின் உருவாக்கத்திற்கு முதன்மையானவர்கள் ஆவர்.

    ஒரு வாக்கியத்தின் முழுப் பொருளையும் தெளிவுபடுத்த இது முயல்கிறது.

    லேக்கப் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

    Do you beat you wife enthusiastically?

    You don’t beat your wife enthusiastically.

    முதலாவதாகக் காட்டப்பட்ட வினா வாக்கியமும் அடுத்துக் காட்டப்பட்ட எதிர்மறை வாக்கியமும் இதுவரை மனைவியை அடித்து வந்த செயல் நிகழ்ந்தது என்பதை உணர்த்துகின்றன. பொதுக் கோட்பாட்டின்படி (Standard theory) மேற்குறிப்பிட்ட வினாவாக்கியத்தின் அக (புதை) வடிவம் (deep structure) பின்வருமாறு அமைகிறது.

    அடுத்து, ஜேகண்டப் (Jackendoff) என்பாரின் கருத்தை நோக்குவோம்.

    எ.கா:

    Many of the arrows didn’t hit the target.

    The target was not hit by many of the      arrows.

    தொடரியல் கோட்பாட்டின்படி இவ்விரு வாக்கியங்களும் ஒரே அக (புதை) வடிவம் பெறும் எனினும் பொருளில் அவை வேறுபடுகின்றன. இத்தகைய பொருள் வேறுபாட்டினை விளக்க முற்படுவதற்குத் திருத்திய பொதுக் கோட்பாடு (Extended Standard Theory)     என்பது உருப்பெறலாயிற்று. அக வடிவத்தையும் புறவடிவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருளை எடுத்துரைக்க வேண்டும் என்கிறது இக்கோட்பாடு.

    எ.கா : இளங்கோவன் பல நூல்களை எழுதவில்லை.

    இளங்கோவனால் பல நூல்கள் எழுதப்படவில்லை.

    எனும் இவ் வாக்கியங்கள் பொருளில், வேறுபட்டாலும் புறவடிவத்தில் பல எனும் எண்ணடை ((quantifier) பயனிலையாக வருமிடம் வேறுபடவில்லை. எனவே இத்தகைய பொருள் வேறுபாட்டினைத் தொடரியல் அக வடிவத்தால் விளக்க இயலாது என்று சொற்பொருளியலாளர் கருதுகின்றனர்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    ஒலிச் சூழ்நிலை பலகை என்ற சொல்லை எவ்வாறு விளக்கும்?
    2.
    ஒரு மொழிக்கூறின் பொருளை உணர்த்தப் பின்பற்றப்படும் உத்திகளுள் இரண்டனைக் குறிப்பிடுக?
    3.
    ‘பாரி நேற்று வந்துவிட்டான்’-இத்தொடர் பொருள் உடையதா?
    4.
    மயக்க வாக்கியத்திற்குச் சான்று ஒன்று தருக?
புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 11:50:26(இந்திய நேரம்)