தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒருசொல் பலபொருள், ஒருபொருள் பலசொல் ஆகியன குறித்த விளக்கங்கள்

  • 4.1 ஒருசொல் பலபொருள், ஒருபொருள் பலசொல் ஆகியன குறித்த விளக்கங்கள்

    தொல்காப்பியத்தில் சொல்லதிகார உரியியலில், உரிச்சொல்லின் பொது இயல்பையும், பொருள் உணர்த்தும் முறையையும் குறிப்பிடும்போது ஒருசொல் பலபொருள் குறித்தும், ஒருபொருள் பலசொல் குறித்தும் விளக்கமாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    “உரிச்சொற் கிளவி..........
    ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்
    பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்”
                 (தொல்.சொல் - 297)

    என இசை, குறிப்பு, பண்பு எனும் பொருட்கண் பெயர், வினை போலவும், அவற்றின் பகுதியாகவும் தடுமாறி, ஒருசொல் ஒருபொருளுக்கு உரியதாய் வருவதோடு, ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரியனவாய் வருவன உரிச்சொற்களாகும் என்கிறார் தொல்காப்பியர்.

    உரிச்சொல்லின் இலக்கணத்தைக் கூறும் நன்னூலோ,

    “பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
    ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
    ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்”
                 (நன்னூல் : உரியியல் : 442)

    என்று கூறும்போது ஒருகுணம் மற்றும் பலகுணம் தழுவிய சொற்களைப் பற்றியும் பேசுகின்றது. (குணம் = பொருள்) இவற்றிற்குரிய சான்றுகளைப் பின்வரும் தலைப்புகளில் காணலாம்.

    4.1.1 ஒரு சொல் ஒருபொருள் குறித்துத் தொல்காப்பியம் தரும் விளக்கம்

    நாம் வழங்கும் தமிழ் மொழியில் ஒருசொல் ஒரேயொரு பொருளையும் குறிக்கும். அத்தகைய சொற்களைத் தொல்காப்பியரும் உரியியலில் விளக்கியுள்ளதைச் சில சான்றுகளுடன் காணலாம்.

    வ. எண்

    சொல்
    பொருள்
    சான்று
    1.
    உரு
    அச்சம்
    உருகெழு கடவுள்
    2.
    புரை
    உயர்வு
    புரைய மன்ற புரையோர் கேண்மை
    3.
    உகப்பு
    உயர்வு
    விசும்புகத் தாடாது
    4.
    உவப்பு
    உவகை
    உவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇ
    5.
    மல்லல்
    வளமை
    மல்லல் மால்வரை
    6.
    பயப்பு
    பயன்
    பயவாக் களரனையர் கல்லா தவர்
    7.
    பசப்பு
    நிறம்
    மையில் வாண்முகம் பசப்பூரும்மே
    8.
    இயைபு
    புணர்ச்சி
    இயைந் தொழுகும்
    9.
    சீர்த்தி
    மிக்கபுகழ்
    வயக்கஞ்சால் சீர்த்தி
    10.
    பழுது
    பயனின்மை
    பழுதுகழி வாழ்நாள்
    11.
    சாயல்
    மென்மை (பண்பு)
    சாயன் மார்பு
    12.
    முழுது
    எஞ்சாமை
    மண்முழு தாண்ட
    13.
    வம்பு
    நிலையின்மை
    வம்பு மாரி
    14.
    மாதர்
    காதல்
    மாதர் நோக்கு
    15.
    புலம்பு
    தனிமை
    புலிப்பற் கோத்த புலம்பு மணித்தாலி
    16.
    துவன்று
    நிறைவு
    ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்
    17.
    முரஞ்சல்
    முதிர்வு
    சூன்முரஞ் செழிலி வெங்காமம்
    18.
    வெம்மை
    விரும்பு
    வெங்காமம்
    19.
    பொற்பு
    பொலிவு
    பெருவரையடுக்கம் பொற்ப
    20.
    வறிது
    சிறிது
    வறிதுவடக் கிறைஞ்சிய
    21.
    எய்யாமை
    அறியாமை
    எய்யா மையலை நீயும் வருந்துதி
    22.
    தெவ்
    பகை
    தெவ்வுப் பலம்
    23.
    கருவி
    தொகுதி
    கருவி வானம்
    24.
    கமம்
    நிறைவு
    கமஞ்சூல் மாமழை
    25.
    கவர்பு
    விருப்பம்
    கவர் நடைப் புரவி
    26.
    வியல்
    அகலம்
    வியலுலகம்
    27.
    வய
    வலிமை
    துன்னருந் துப்பின் வயமான்
    28.
    வாள்
    ஒளி
    வாண்முகம்
    29.
    உயா
    உயங்கல (வருந்தல்)
    பருத்திருந் துயாவிளி
    30.
    உசா
    சூழ்
    உசாத் துணை
    31.
    புனிறு
    ஈன்றணிமை
    புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி
    32.
    வயா
    வேட்கை
    வயவுறு மகளிர்
    33.
    யாணர்
    புதிதுபடல்
    மீனொரு பெயரும் யாணரூர
    34.
    அமர்தல்
    மேவல் (விரும்பல்)
    அகனமர்ந்து செய்யாளுறையும்
    35.
    வியப்பு
    ஐதே காமம்
    36.
    முனைவு
    முனிவு (வெறுப்பு)
    சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
    37.
    வை
    கூர்மை
    வை நுனைப் பகழி
    38.
    எறுழ்
    வலிமை
    பேரெறுழ்த் திணிதோள்

    4.1.2 ஒருசொல் பலபொருள் குறித்துத் தொல்காப்பியம் தரும் விளக்கம்

    மேற்கூறப்பட்ட சொற்களுக்குக் காலப்போக்கில் வேறு பொருட்களும் உருவாகி அவை ஒருசொல் பலபொருள் தரும் சொற்களாக மாறியுள்ளதைக் காணமுடியும். பழந்தமிழ் இலக்கண நூலார் தொல்காப்பியரே, ஒருசொல் பலபொருள் குறித்துத் தெளிவாக விளக்கியுள்ளதைச் சில சான்றுகளின் மூலம் காணலாம்.

    வ. எண்
    சொல்
    பொருள்
    சான்று
    1.

    தட
    (i) பெருமை
    வலிதுஞ்சு தடக்கை
    (ii) வளைவு
    தடமருப் பெருமை
    2.
    சுய
    (i) பெருமை
    கயவாய்ப் பெருங்கை யானை
    (ii) மென்மை
    கயந்தலை மடப்பிடி
    3.
    நளி
    (i) பெருமை
    நளிமலை நாடன்
    (ii) செறிவு
    நளியிருள்
    4.
    ஏற்றம்
    (i) நினைவு
    கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி
    (ii) துணிவு
    எற்றேற்றமில்லாருள் யானேற்ற மில்லாதேன்
    5.
    பணை
    (i) பிழைத்தல்
    பணைத்துவீழ் பகழி
    (ii) பெருத்தல்
    வேய்மருள் பணைத்தோள்
    6.
    படர்
    (i) உள்ளல் (நினைத்தல்)
    வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
    (ii) செல்லுதல்
    கறவை கன்றுவயிற் படர
    7.
    தா
    (i) வலிமை
    தாவி என்பொன் றைஇய பாவை
    (ii) வருத்தம்
    கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென.
    8.
    அழுங்கல்
    (i) அரவம் (ஆரவாரஒலி)
    உயவு புணர்ந்தன்றிவ் வழுங் கலூரே
    (ii) இரக்கம்
    பழங்கணோட்டமு நலிய வழுங்கின னல்லனோ
    (iii) கெடுதல்
    குணனழுங்கக் குற்ற முழை நின்று கூறுஞ் சிறியவர்கட்கு
    9.
    செழுமை
    (i) வளமை
    செழும்பல் குன்றம்
    (ii) கொழுப்பு
    செழுந்தடி தின்ற நாய்
    10.
    விழுமம்
    (i) சீர்மை
    விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு
    (ii) சிறப்பு
    வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
    (iii) இடும்பை (துன்பம்)
    நின்னுறு விழுமங் களைந்தோன்
    11.
    இரங்கல்
    (i) இசை
    ஏறிரங் கிருளிடை
    (ii) கழித்தற்கிரங்கும்
    செய்திரங்கா வினை.
    12.
    கறுப்பு
    (i) வெகுளி
    நிற்கறுப்பதோ ரருங்கடி முனையள்
    (ii) நிறப் பொருள்
    கறுத்த காயா
    13.
    சிவப்பு
    (i) வெகுளி
    நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
    (ii) நிறப் பொருள்
    சிவந்த காந்தள்
    14.
    நனவு
    (i) களப் பொருள் (ஆடுகளப் பொருள்)
    நனவுப்பகு விறலியிற் றோன்றும் நாடன்
    (ii) அகலப் பொருள்
    நனந்தலை யுலகம்
    15.
    மதவு

    (i) மடன் (அறியாமை)
    பதவு மேய்ந்த மதவுநடை நல்லான்
    (ii) வலிமை
    கயிறிடு கதச்சேப்போல மதமிக்கு
    (iii) மிகுதி
    மதவிடை
    (iv) வனப்பு
    மாதர் வாண்முக மதைஇய நோக்கே
    16.
    கடி
    (i) வரைவு (நீக்கற்பொருள்)
    கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு
    (ii) கூர்மை
    கடிநுனைப் பகழி
    (iii) காவற் பொருள்
    கடிகா
    (iv) புதுமைப் பொருள்
    கடிமலர்
    (v) விரைவு
    கடுமான்
    (vi)விளக்கப்பொருள்
    அருங்கடிப் பெருங்கால்
    (vii) மிகுதி
    கடிமுரசியம்ப
    (viii) சிறப்புப் பொருள்
    அருங்கடி மாமலை
    (ix) அச்சப்பொருள்
    கடியையா னெடுந்தகை செருவத்தானே
    (x) ஐயப்பொருள்
    கடுத்தன ளல்லளோ வன்னை
    (xi) கரிப்பு (காரப்பொருள்)
    கடிமிளகு தின்ற கல்லா மந்தி

    4.1.3 ஒருசொல் பலபொருள் குறித்து நன்னூல் தரும் விளக்கம்

    ‘கடி’ என்ற உரிச்சொல் காவல், கூர்மை, மணம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஒலித்தல், நீக்கல், கலியாணம், கரிப்பு ஆகிய பதின்மூன்று குணங்களில் வரும் என்பதை,

    “கடிஎன் கிளவி காப்பே கூர்மை
    விரையே விளக்கம் அச்சம் சிறப்பே
    விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்
    வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்”

                 (நன்னூல்: உரியியல் :457)

    என நன்னூல் விளக்குகின்றது.

    வ. எண்
    பொருள்
    சான்று
    1.
    காவல்
    கடிநகர்
    2.
    கூர்மை
    கடிநுனைப் பகழி
    3.
    மணம்
    கடிமாலை
    4.
    விளக்கம்
    கடிமார்பன்
    5.
    அச்சம்
    கடியரமகளிர்
    6.
    சிறப்பு
    அம்பு துஞ்சும் கடியரண்.
    7.
    விரவு
    எம் அம்பு கடிவிடுதும்
    8.
    மிகுதி
    கடியுண்கடவுட்குஇட்ட செழுங்குரல்
    9.
    புதுமை
    கடிமணச்சாலை
    10.
    ஆர்த்தல் (ஒலித்தல்)
    கடிமுரசு
    11.
    வரவு (விலக்குதல்)
    கடிமது
    12.
    மன்றல்
    கடிவினை முடிகென எண்ணி
    13.
    கரிப்பு
    கடி மிளகு
புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 15:20:06(இந்திய நேரம்)