தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

  • 6.2 ஜெயகாந்தனின் சிறுகதைகள்

    ஜெயகாந்தன் சிறுகதை எழுதிய காலக் கட்டத்தை இலக்கிய விமர்கர்கள் மூன்றாகப் பகுத்துக் காண்கின்றனர். ஜெயகாந்தனின் முதல் காலக் கட்டம் வசந்தம், மனிதன், சமரன், தமிழன் இதழ்களில் எழுதிய பத்தாண்டுக் காலமாகும். இரண்டாம் காலக் கட்டம் 1956 முதல் 1960 வரை சரஸ்வதியில் எழுதிய காலமாகும். மூன்றாவது காலக் கட்டம் ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன இதழ்களுக்கு எழுதிய காலமாகும். முதல் காலக் கட்டம் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் தோற்றம் பெற்ற காலமாகும். அக்காலக் கட்டத்து எழுத்துகளில் ஏழை எளிய மக்கள் கதைப்பாத்திரங்களாகத் திகழ்கின்றனர். இரண்டாவது காலக் கட்டத்தில் தத்துவ நோக்கு மிகுந்துள்ள கதைகளையும், பரிசோதனை முயற்சிகளாக அமைந்த கதைகளையும் எழுதியுள்ளார். இக்காலக் கட்டத்தில் பாலுணர்ச்சி அவருடைய கதைகளில் முக்கியமாக இடம்பெற்றிருந்தது. மூன்றாவது காலக் கட்டத்தில் ஜனரஞ்சகக் கதைகள் தோற்றம் பெற்றன. அவை ஜெயகாந்தனின் வாழ்வியல் கண்ணோட்டத்தையும், சித்தாந்தத்தையும் விளக்கி நிற்கின்றன. இக்காலக் கட்டத்தில் பெரும்பாலும் நடுத்தர மக்களின் வாழ்வியலை அக்கதைகள் கூறியுள்ளன.

    6.2.1 கதைக் கருக்கள்

    ஜெயகாந்தன் கதைகளுள் காணப்படும் கருக்கள் போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசிப் பார்க்கும் நிகழ்வுகளை, சமுதாயத்தின் புற்றுநோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம்புது முறைகளை, மனித உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது தங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் விதத்தில் அமைந்துள்ளன. ஜெயகாந்தன், ‘எனது கதைகள் பொதுவாகப் பிரச்சினைகளின் பிரச்சினைகளைப் பேசுகின்றன’ என்கிறார். மேலும் ‘வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள ஆன்மாவைக் கண்டறிந்து அதைக் கருப்பொருளாக்கிக் கொண்டுள்ளேன்’ என்கிறார்.

    முன்பே சுட்டியபடி, அவருடைய கதைகள், பெரும்பாலும் ஏழை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையையே கருப்பொருளாகக் கொண்டிருந்தன. ஓர் ஆப்பக்காரிக்கு அவளுடைய மகனால் ஏற்படும் தொல்லைகளை விளக்குவதாகப் பொறுக்கி என்ற கதை அமைந்துள்ளது. பிச்சைக்காரியின் தன்மானத்தைக் கருவாகக் கொண்டது வேலை கொடுத்தவர் என்ற கதையாகும். ரிக்சாக்கார பாலன், டிரெடில் - என்ற கதைகள் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வியல் போராட்டங்களைக் கருவாகக் கொண்டிருந்தன. அடுத்து வந்த கதைகள் அதாவது சரஸ்வதி இதழில் வந்த கதைகளான தாம்பத்தியம், திரஸ்காரம், பௌருஷம், பால்பேதம் என்பன பாலியல் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்ட கதைகளாகும். எனவே அவை எழுதப்பட்ட காலங்கள் தொட்டுக் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகின. அடுத்த நிலையில் ஜெயகாந்தன் எழுதிய கதைகளுக்கு மத்திய தரப் பிராமணக் குடும்பத்தில் காணப்படும் சிக்கல்கள் கதைப்பொருளான. கற்பு, விதவை நிலை, மறுமணம், விவாகரத்து என்ற சமுதாயச் சிக்கல்களையும், ஒருபிடி சோறு, உண்மை சுடும் போன்ற கதைத் தொகுதிகளில் உள்ள கதைகள் மார்க்சிய அரசியல் சித்தாந்தங்களைக் கதைக் கருக்களாகக் கொண்டுள்ளன. அதற்கு அடுத்து வந்த கதைகளில் தனிமனித வாழ்வியல் சிக்கல்கள் கருவாக அமைந்துள்ளன. இவ்வாறு ஜெயகாந்தனின் சிறுகதைக் கருக்கள் காலந்தோறும் மாறுபட்டனவாகத் திகழ்கின்றன.

    பல்லாண்டுக் காலமாக விழுது விட்டு வளர்ந்து விட்ட சாதியத்தை அசைத்துப் பார்க்கும் ஒரு பெரும் புரட்சிக் கருவினைக் கொண்டது ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் என்ற கதை. கீழ்க் குலத்திலே பிறந்த அம்மாசிக் கிழவனிடத்திலே ஒரு பிராமண மாது தன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு இறந்து விடுவதாகவும், அம்மாசியே அவளுக்கு ஈமக் கடன்கள் செய்துவிட்டுக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் கதை அமைகிறது. ‘மனிதத்துவ உணர்வுகளுக்கு முன்னால் ஜாதி நிற்காது’ என்பதே இக்கதையின் கருவாகும். ஜெயகாந்தன், மாறிவரும் சமுதாயப் போக்கிலும், கால வேகத்திலும் சாதியப் பிரிவுகள் அழிய வேண்டும் என்ற நோக்கோடு இக்கதையைப் படைத்துள்ளார்.

    ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் கதைக் கருவும், அதன் முடிவும் தமிழகமெங்கும் பலத்த சர்ச்சைக்குரியதாக அமைந்தன. இக்கதை, 1966இல் ஆனந்தவிகடனில் வெளியானது. இக்கதையின் கரு புரட்சிகரமானது என்று மக்கள் மத்தியில் எண்ணம் நிலவியிருந்தது. ஆனால், அக்கரு யதார்த்தமான உண்மையைப் பேசுவது என்கிறார் ஜெயகாந்தன். அக்கதையின் நாயகி, ‘அவள்’ (பெயர் சூட்டப்படவில்லை) ஒரு கல்லூரி மாணவி. 

    உலகியல் அறிவு இல்லாத அவள். கல்லூரி முடிந்த மாலை நேரத்தில், மழை பெய்யும் சூழலில், தோழிகள் அனைவரும் சென்று விட்ட நிலையில், வேறு வழியில்லாது தன்னைக் காரில் அழைத்துச் செல்ல அழைக்கும் ‘அவன்’ காரில் ஏறுகிறாள். காரில் அவனால் அவள் சீர்குலைக்கப்படுகிறாள். வீட்டிற்கு அலங்கோலமாக,

    தான் ஒருவனால் கெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத அப்பாவியாக வரும் மகளிடம், தாய் முதலில் கோபம் கொண்டாலும், பின்பு அவளின் கள்ளமற்ற மனத்தைப் புரிந்து கொண்டு, அவளை நீராட்டித் தூய்மைப்படுத்துகிறாள். ‘உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமாக இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு... நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம். நீ சுத்தமாயிட்டே. ஆமா- தெருவிலே நடந்து வரும் போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டுப் பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார்? எல்லாம் மனசுதான்டி - மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாததூளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா, ஆனா அவமனசாலே கெட்டுப் போகலை. அதனாலே தான் ராமரோட பாததூளி அவமேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன்மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு...கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு... உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே...’ என்று தேற்றுகிறாள். மறுபடியும் அவள் எதுவும் நடக்காதது போல் கல்லூரிக்குச் செல்கிறாள் என்பதோடு கதை முடிகிறது.

    இக்கதை, சமுதாயத்தில் எதிர்ப்பு அலைகளை எழுப்பிய போது ஜெயகாந்தன், ‘நான் தீர்க்கமாகச் சொல்கிறேன் அவள் கெட்டுப் போனவள் அல்லள்; அவள் மனதிலே களங்கமில்லை. மனம் என்பது முதிர்ந்து எது சரி எது தப்பு என்று இதுபோன்ற காரியங்களில் தீர்மானிக்க முடியாத போது, அவளை இந்த மூடச் சமூகம் காலில் போட்டு மிதித்து விட அனுமதிக்க மாட்டேன். அறிவும் மனமும் முதிராத நிலையில், உடல் மட்டும் முழு வளர்ச்சியுற்ற நிலையில் நேர்ந்து விட்ட விபத்துக்கு ஓர் ஆத்மாவை நிரந்தரமாகத் தண்டிப்பது நியாயமாகாது, நாகரிகமாகாது’ என்று தான் படைத்த பாத்திரத்திற்காக வாதாடுகிறார். ‘பாத்திரங்களைப் படைப்பது பெரிதல்ல. அவற்றின் மீது பாசமும் வைத்து வதைபட வேண்டும். அந்தப் பரிவு உணர்ச்சி இருப்பதால் காகிதத்தில்தானே கிறுக்குகிறோம் என்று பொறுப்பில்லாமல் படைக்க இயலாது. செய்யாத குற்றத்திற்குத் தண்டனையாக ஒரு பாத்திரத்தை எரித்து விட முடியாது’ என்று ஜெயகாந்தன் கூறுவதிலிருந்து, அவர் தன் பாத்திரங்களை எத்தனை பொறுப்புணர்ச்சியுடன் படைத்துள்ளார் என்பதையும் உடன் விளங்கிக் கொள்ள முடிகிறது.

    இக்கதையை விமர்சித்த பலர், ‘அவளுக்கு’ மரணம்தான் தீர்வு. அதை விடுத்து ஜெயகாந்தன் அவளைத் தூய்மைப்படுத்துவதாகப் பேசுவது சரியல்ல என்று கருத்துரைத்த போது, ‘பிரச்சினைகளுக்கெல்லாம் மரணம்தான், தற்கொலைதான் அல்லது கொலைதான் தீர்வு என்றால், பேனாவை, இலக்கியத்தை, அறிவை, சட்ட திட்டங்களை, சமூக நெறிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவர்கள் அரிவாளைத் தூக்கிக் கொள்ளட்டும். அதை மறுத்து ஒரு பெண்ணைப் பெற்றவள் அவளுக்குப் புதிய ஞானம் தந்து, புதிய வலிமையும் தந்து அவளை வாழ வைக்கிறாள் என்று நான் எழுதியது மனிதாபிமானத்தையும், சமூக வளர்ச்சியையும் சார்ந்ததுதான்’ என்கிறார்.

    6.2.2 கதை மாந்தர்கள்

    ஜெயகாந்தன் கதைகளில் கூலிக்காரர்கள், ஆலைத் தொழிலாளிகள், சேரி மக்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரிகள், சிறு வியாபாரிகள் என்று பெரும்பாலும் வாழ்வு மறுக்கப்பட்ட சமூகத்தினரே கதை மாந்தர்களாக அறிமுகப்படுத்தப் படுகின்றனர். சோற்றுக் கூடைக்காரி ஆண்டாளு, முறைவாசல் செய்யும் பொன்னம்மாள், ஆயா வேலை செய்யும் முத்தாயி, பிச்சைக்காரி ருக்கு, ஹோட்டல் சர்வர் பாண்டியன், ரிக்சாக்கார ஆறுமுகம், குமாஸ்தா சடாட்சரம், கம்பாசிட்டர் ஏழுமலை, டிரெடில்மேன் விநாயக மூர்த்தி, தலைச்சுமைக்காரர் மருதமுத்து கருமான் கந்தன் போன்ற மிகச் சாதாரண மக்களே பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தில் கேட்பார் அற்றுக் கிடக்கும் இவர்களை ஜெயகாந்தன் உண்மையான அனுதாபத்தோடு அணுகுகின்றார்.

    ‘நான் எப்படித் தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்’ என்கிறார் ஜெயகாந்தன். ஏழைகள் என்றவுடன் செல்வர்களின் கையை எதிர்பார்க்கும் பாத்திரங்களை அவர் படைக்கவில்லை. அதே சமயம் அவருடைய ஏழை மக்கள் ஆசா பாசமற்ற அப்பாவிகள் அல்லர். விருப்பும் வெறுப்பும், வேதனையும் ஆத்திரமும், வெட்கமும் தன்மதிப்பும் உள்ள மக்கள் அவர்கள். ஜெயகாந்தனின் அத்தனைப் பாத்திரங்களும் உயிர்ச் சித்திரங்கள். நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களை ஜெயகாந்தன் தன் பேனா முனையால் அழுத்தமாகப் படைத்துக் காட்டுகிறார். இதுவரைக்கும் அலட்சியமாக அவர்களை நோக்கிய நம் கண்கள் இப்பொழுது அகல விரிந்து காண்கின்றன. தாம் கதைகள் எழுதுகிறபோது கூடு விட்டுக் கூடு பாய்ந்து அக்கதைப் பாத்திரங்களாகவே தாம் ஆசிவிடுவதாகவும், தாம் அனுபவிக்கும் உணர்ச்சிகளை அப்படியே அவர்கள் மூலம் வெளிக்கொணர்வதாகவும் கூறுகிறார். (சரஸ்வதி இதழ், அக்டோபர் (1957) ஏழைத் தொழிலாளிகள் மட்டுமன்றி நடுத்தரப் பிராமணக் குடும்பத்தினரும், பங்களாக்களில் வாழும் மேல்தட்டு மக்களும் கூடப் பாத்திரங்களாக இவருடைய பிற்காலக் கதைகளில் இடம் பெறுகின்றனர். ஜெயகாந்தனின் கதைப் பாத்திரங்கள் அதிகமாகப் பேசுகின்றன. அதாவது, பாத்திரங்கள் மூலம் ஆசிரியரே வாழ்வியலை விமர்சனம் செய்கிறார். இது சில சமயம் கதையின் கலைத் தன்மையைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. சமூகப் பொருந்தாமையால் மனச்சிக்கலுக்கு ஆளாகித் தவிப்போரும், வாழ்க்கையில் போராடித் தோற்பவர்களும் என்று மேலும் பல குணச்சித்திரங்களை இவருடைய படைப்புகளில் காண முடியும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    ஜெயகாந்தனின் முதல் கதை வெளியான இதழ் எது?
    2.

    ஜெயகாந்தன் பாலுணர்ச்சி பேசும் கதைகளை எந்தக் காலக் கட்டத்தில் எழுதினார்?
    3.
    ஜெயகாந்தன் பணியாற்றிய இதழ்கள் யாவை?

    4.

    ஜெயகாந்தன் சமீபத்தில் பெற்ற மிகப்பெரிய விருதினைச் சுட்டுக.
    5.
    ஜெயகாந்தன் சிறுகதை எழுதிய காலக் கட்டங்களை இலக்கிய விமர்சகர்கள் எவ்வாறு வகைப்படுத்துகின்றனர்?
புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 12:25:42(இந்திய நேரம்)