தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மேலை இலக்கியத் தாக்கம்

  • 2.2 மேலை இலக்கியத் தாக்கம்

    மேலை நாடுகளில் துப்பறியும் புதினங்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தன. அதைப் பின்பற்றித் தமிழிலும் 1910 முதல் 1940 வரையிலான காலக்கட்டத்தில் துப்பறியும் புதினங்கள் மிகுதியாகத் தோன்றின. இக்காலகட்ட நாவல்களைப் பொழுதுபோக்கு நாவல்கள் எனச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் பொழுது போக்கிற்காகவும் புதினங்கள் எழுதப்பட்டன. இக்காலக்கட்ட நாவல்கள் வாசகரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

    2.2.1 துப்பறியும் புதினங்கள்

    மேலை நாட்டில் செல்வாக்குப்பெற்ற, ரெயினால்ட்ஸ், ஆர்தர் கானன்டாயில் போன்றோரின் நாவல்களைப் பின்பற்றிப் பல துப்பறியும் புதினங்கள் எழுதப்பட்டன. துப்பறியும் புதினம் எழுதுபவர்களில் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகியோர் சிறப்புடையவர்கள்.

    ஆரணி குப்புசாமி முதலியார்

    இவர், 1935 வரையில் 43 நாவல்கள் எழுதியுள்ளார். மேல்நாட்டுப் பொழுதுபோக்கு நாவலாசிரியர்களான ரெயினால்ட்ஸ், கானன்டாயில், லின்ச் போன்றோரின் நாவல்களைத் தழுவித் தமிழில் துப்பறியும் நாவல்கள் பலவற்றை எழுதிய பெருமை இவருக்குண்டு.

    இரத்தினபுரி இரகசியம் நாவலின் இறுதி வரையிலும், வியப்பும் திகைப்பும் நிறைந்த மர்மங்களும், சிக்கல்களும், எதிர்பாராத திருப்பங்களும் பொழுதுபோக்கு அம்சங்களாக நிறைந்துள்ளன. இந்நாவலில் கிருஷ்ணாசிங் துப்பறியும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான்.

    கடற் கொள்ளைக்காரன், கற்பகச் சோலையில் அற்புதக் கொலை, மஞ்சளறையின் மர்மம் போன்றவை இவர் எழுதிய புதினங்கள்.

    வடுவூர். கே. துரைசாமி ஐயங்கார்

    இவரது மருங்காபுரி மாயக் கொலை நாவல் மிகவும் பிரபலமான ஒன்று. மருங்காபுரி ஜமீன்தார்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர். இதற்கான காரணத்தை அறிய இயலவில்லை. உண்மையை அறியச் சென்னையிலிருந்து திவான்பகதூர் அமரசிம்ஹர் என்ற துப்பறியும் நிபுணர் வருகிறார். அவர் துப்புத் துலக்கும் நிகழ்ச்சிகளே கதை முழுவதும் இடம் பெற்றுள்ளன. இவரின் கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்ற நாவலில் வழக்கறிஞர் ஒருவரும், நீதிபதி ஒருவரும் சேர்ந்து செய்யும் தில்லுமுல்லுகளும், திகம்பர சாமியார் என்பவர் அவைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நிறைந்துள்ளன.

    ஜே.ஆர். ரங்கராஜு

    இவர் படைத்த புதினங்கள் இராஜாம்பாள், சந்திரகாந்தா, மோஹன சுந்தரம், ஆனந்த கிருஷ்ணன், இராஜேந்திரன் முதலியன. சந்திரகாந்தா என்ற இவரது நாவல் சவுக்கடி சந்திரகாந்தா என்ற பெயரில் நாடகமாகவும், திரைப்படமாகவும் பின்னர் வந்து மிகவும் பிரபலமடைந்தது.

    2.2.2 பொழுதுபோக்குப் புதினங்கள்

    வானொலியும், தொலைக்காட்சியும் இல்லாத காலக்கட்டத்தில் பொழுதுபோக்கப் பயன்படும் வகையிலும் புதினங்கள் எழுதப்பட்டன. பொழுதுபோக்க, பல இவ்வகை நாவல்கள் எழுதிப் புகழ் பெற்றவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.

    வை.மு. கோதைநாயகி அம்மாள்

    இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவர் தனது ஜெகன் மோகினி பத்திரிகையின் மூலம் மாதமொரு நாவலை எழுதினார். கலா நிலையம், சுதந்திரப் பறவை, பெண் தர்மம், மதுரகீதம், பதஞ்சலி போன்ற நாவல்களில் பிராமணக் குடும்பங்களிலுள்ள பல்வேறு வகையான சிக்கல்களை விளக்கியுள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1

    இரண்டாம் காலக் கட்டத்தில் இடம் பெறும் புதின ஆசிரியர்களில் சிலரைக் குறிப்பிடுக.

    2

    தமிழ் நாவலின் தந்தை யார்?

    3

    தமிழ்நாட்டின் தாக்கரே எனப் பாராட்டப்படுபவர் யார்?

    4
    ஜெகன் மோகினி இதழில் தொடர்ந்து நாவல் எழுதியவர் யார்?
    5

    துப்பறியும் புதினங்கள் குறித்து எழுதுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 15:15:50(இந்திய நேரம்)