தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிவகாமி

  • 3.1 சிவகாமி

    அரசுப்பணியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் சிவகாமி, சிறந்த சமூக நாவல்களையும் படைத்து பெண் எழுத்தாளராகவும் விளங்குகிறார். பிறந்த ஆண்டு 1957, சொந்த ஊர் திருச்சிக்கு அருகிலுள்ள பெரம்பலூர். தந்தை பழனிமுத்து, தாய் தாண்டாயி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே எழுத்துத் துறையிலும் தம் காலடியினைப் பதித்தவர். சிறுவயதிலிருந்து தாய்மொழியான தமிழ்மொழியில் பேச்சாற்றலும், படைப்பாற்றலும் கொண்ட இவர் ஜப்பானிய மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். 1980-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் (ஐ.ஏ.எஸ்) தேர்ச்சி பெற்று அது முதல் இருபத்தைந்து ஆண்டுகளாக வெவ்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

    3.1.1 சிவகாமியின் படைப்புகள்

    இவர் நித்யா என்ற புனைபெயரில் இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை 1986-இல் வெளியிட்டார். இவர் எழுதிய முதல் நாவலான பழையன கழிதலும் 1988-இல் வெளியிட்டார். அதன்பின்னர் ஆனந்தாயி (1992), குறுக்குவெட்டு (1999) ஆகியவை வெளிவந்தன. கடைசிமாந்தர் என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதி 1997இலும், கதைகள் என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுதி 2003இலும் வெளிவந்தன. ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் ரஹமத்துன்னிஸா என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.

    1995-இல் இவர் இயக்கிய ஊடாக என்ற குறும்படத்திற்குக் குடியரசுத் தலைவர் பரிசு கிடைத்தது. இவர் புதிய கோடங்கி என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அதில் உடல்மொழி என்ற தலைப்பிலும், மெல்லிய துளையிட்ட காகிதத்தின் வழி என்ற தலைப்பிலும் இரு தொடர்களையும் எழுதி வருகிறார். சிவகாமி, சிறுகதை, நாவல், கட்டுரைத் தொடர் என்று பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்து வருகிறார். இளைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாமும் இவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாமி தலித் அடையாளம் பற்றிப் பேசியும் எழுதியும் வருகிறார். கிராம மக்களின் வாழ்க்கைக் கூறுகளை மனிதாபிமானத்தோடு ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் ஒரு விசாலமான பார்வை கொண்ட சிவகாமி இதுவரை மூன்று நாவல்களையும், மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:27:30(இந்திய நேரம்)