தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கதைமாந்தர்

  • 3.3 கதைமாந்தர்

    நாவலில் இடம்பெறும் கதை மாந்தரைத் தலைமை மாந்தர், துணைமாந்தர் என்று இருவகைகளாகப் பிரிக்கலாம். இப்பகுதியில் நாவலில் இடம்பெறும் தலைமை மாந்தர்கள் குறித்து விளக்கப்படுகிறது.

    • தலைமை மாந்தர்

    ஆனந்தாயியும், பெரியண்ணனும் இந்நாவலின் தலைமை மாந்தர் ஆவார்.

    3.3.1 ஆனந்தாயி

    ஆனந்தாயி, இயல்பிலேயே நல்லகுணம் படைத்தவளாகவே இருக்கிறாள். இயல்பான கிராமத்துப் பெண்ணாகவே வாழ்கிறாள். ஆனால் மிகவும் இளம்வயதிலே பெரியண்ணனுக்கு மனைவியாகிறாள். ஆறு குழந்தைகளை ஈன்றெடுக்கிறாள் ஆனாந்தாயி. கணவன் பொதுமகளை (பணத்திற்காக இன்பத்தைத் தரும் பெண்) வீட்டிலேயே கொண்டுவந்து வைக்கும் போதும் சரி அந்தப் பெண்ணிற்கு எதிரில் தன்னை அடிக்கும் போதும் சரி சிலநேரங்களில் ஆவேசப்பட்டாலும் பல நேரங்களில் அமைதி காக்கிறாள். ஆனந்தாயி எதைச் செய்தாலும் அதைக் குறை கூறிக் கொண்டிருப்பதே அவள் மாமியாரான வெள்ளச்சியம்மாளின் வழக்கம் ஆகும். ஆனந்தாயி அதற்கும் பொறுமை காப்பாள். பிள்ளைகள் தவறு செய்து அது பெரியண்ணனுக்குத் தெரியவந்தால் அதற்கான அடி, உதை முதலியவற்றை அவள் தான் வாங்கிக் கொள்ளவேண்டும். சகிப்புத் தன்மை அதிகம் கொண்ட ஆனந்தாயி இலட்சுமி என்பவளைப் பெரியண்ணன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து வைத்தபோது அவள், இவளை அக்கா என்று அழைக்கிறாள். அதற்கு ஆனந்தாயி,

    “யாரடி யக்கா, அக்கா குக்கா என்று
    கூப்பிட்டால் செருப்பு பிஞ்சிடும்”

    என்று முதலில் சொன்னவள், பின்னர் சிறிது காலத்தில் நட்புடன் பழகினாள். தன் குடும்பத்தில் அவளைச் சேர்த்துக் கொண்டாள். வந்தவள் பெரியண்ணனிடம் அடிவாங்கும் போது அவளுக்காக இரக்கப்படுபவளாக இருக்கிறாள். பிள்ளைகளை வளர்த்து பெரியவர்கள் ஆக்கியதும் தன் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தாள். ஏனென்றால், ஒரு மகனை இழந்த சோகம் அவளுடைய மனதில் இன்னும் நிலைத்திருந்தது. பெரியண்ணன் பகைமை காரணமாக அடுத்தவர் காட்டில் விளைந்த கம்பை எடுத்துக் கொண்டு வந்து தனது வீட்டில் வைத்திருப்பதை அறிந்து அதை ஆனந்தாயி எதிர்த்தாள். பிறகு பெரியண்ணன் குழுவினர் வீண்சண்டைக்குச் செல்லும் போது அவர்களைத் தடுப்பதில் கவனமாக இருந்தாள். ஆனந்தாயி மேலும் தன் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடித்துவிட்டு தன் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சும் போதும் சரி அவள் தன் இயல்பைச் சற்றும் மாற்றவில்லை. இப்படியாக ஆனந்தாயியின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. அவள் தீயவழியில் கணவன் சென்றாலும் பொறுமையோடும் கற்போடும் வாழும் பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். மணமான பெண்ணுக்கு அறிவுரைகூறி, ஏனைய மகளின் நிலைக்காக ஏங்கும் தாய்மை உணர்வை ஆனந்தாயி மூலம் காணலாம்.

    3.3.2 பெரியண்ணன்

    பெரியண்ணன் ஆனந்தாயியின் கணவனாக மட்டுமல்லாமல் ஆணாதிக்கத்தின் குறியீடாகவும் படைக்கப்பட்டுள்ளான். அவன் பெற்ற தாய்மீதும், மனைவி, பிள்ளைகள் மீதும் பாசமில்லாதவன். பெற்ற தாயைக் கோபத்தில் கீழே தள்ளி விடுகிறான். பிறகு நான் தள்ளி விடவில்லை என்று குலதெய்வம் பொன்னுசாமி மீது பொய் சத்தியம் செய்கிறான். அவன் போக்கை வீட்டிலுள்ள அனைவரும் வெறுத்தனர். காண்ட்ராக்ட் எடுக்கிறேன் என்று வெளியூரில் தங்கிக் கொண்டு பொதுமகளோடு கும்மாளம் அடிப்பதும், வீட்டிற்குப் பலநாட்கள் வராததுமாகவும் இருந்தான். ஒருநாள் இலட்சுமி என்னும் பெண்ணை வீட்டோடு அழைத்து வந்து வைத்துக் கொண்டான். அவள் மீதும் சந்தேகங் கொண்டு அவளையும் அடித்துத் துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினான். ஆசை நாயகியாக வரும் இலட்சுமி மீது பெரியண்ணன் அதிக அதிகாரம் செலுத்துகிறான். வேறு ஆண்களிடம் பேசக்கூடாது என்கிறான். அந்தச் சூழலில் இலட்சுமி, தன் வீட்டிற்குக் குடிக்கத் தண்ணீர் கேட்டு வந்தவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கிறாள். இதை அறிந்த பெரியண்ணன் அவளைத் திட்டி உதைக்கிறான். இதனால் இருவருக்குமிடையே முரண்பாடு தோன்றுகிறது. அவள் இந்த அடக்கு முறையை நேரடியாக எதிர்க்காமல் எதிர்வினை புரிவது போல் வேறு ஒருவனுடன் வீட்டை விட்டுச் சென்று விடுகிறாள். தனக்குக் கிடைக்க வேண்டிய காண்ட்ராக்ட் கிடைக்காமல் போயின; அதனால் வெறுப்புற்ற பெரியண்ணனுக்குப் பழிவாங்கும் உணர்வு ஏற்பட்டது. மேலும் இலட்சுமி, கங்காணியின் மகன் மாணிக்கத்துடன் ஓடியதை அறிந்து கங்காணியின் குடும்பத்தை அழிக்க முற்படுகிறான். அந்த கலவரத்தில் அய்யாக்கண்ணு இறந்து போகிறான்; பெரியண்ணனின் கை வெட்டப்படுகிறது. அந்த வயதான காலத்தில்கூட பிற பெண்ணுடைய தொடர்பினை விடஇயலாமல் அவன் வாழ்கிறான். பெரியண்ணன் ஆரம்பத்திலிருந்து அடக்கி ஆளும் தன்மையுடையவனாகவும், கொடூரமானவனாகவும் படைக்கப்பட்டுள்ளான்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    சிவகாமியின் முதல் நாவல் எது?

    2.

    சிவகாமி இயக்கிய ‘ஊடாக’ என்ற குறும்படத்திற்கு என்ன பரிசு கிடைத்தது?

    3.

    சிவகாமி எந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார்?

    4.

    இயற்கை அழகை ரசிக்கும் ஆனந்தாயியின் மகள் பெயர் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 17:17:32(இந்திய நேரம்)