தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-5.4 மறைமலையடிகளாரின் உரைநூல்கள்

  • 5.4 மறைமலையடிகளாரின் உரைநடை நூல்கள்

    தனித்தமிழ் நடையை உருவாக்கிய அடிகளார் தம் நூல்களில் அந்நடையைத் திறம்படப் பயன்படுத்தியுள்ளார். அறிவுரைக்கொத்து, வேளாளர் நாகரிகம், சிறுவர்க்கான செந்தமிழ் முதலான உரைநடை நூல்களிலும் கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் புதினத்திலும் அவரது நடையின் சிறப்புகளைக் காணமுடிகிறது.

    5.4.1 அறிவுரைக் கொத்து

    அறிவுரைக் கொத்து என்னும் நூலில் கல்வியே அழியாச் செல்வம் என்பது குறித்து அடிகளார்,

    “அழியாச் செல்வத்தையே அடைய வேண்டுமென்னும் அவா நம்மெல்லாரிடத்தும் இயற்கையாக இருந்தாலும் முத்துச் சிப்பியில் உள்ள முத்தின் ஒளியும், பாசி மூடிய பவளத்தின் நிறமும், மாசியில் நிறைந்த மதியின் துலக்கமும், கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும் போல் நம்மை மூடிக்கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர்களாகி, நம் அறிவை இழந்து அழியாச் செல்வத்தை அடைய முடியாமல் நிலையின்றி அழிந்து போகும் பொருள்களையே நிலையாகப் பிழைபட நினைந்து அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்தும் வருகின்றோம்”

    என்றும்,

    “சிலர் கல்வியானது ஆண் மக்களுக்குத் தாம் வேண்டுமேயல்லாமற் பெண் மக்களுக்கு வேண்டுவதில்லை யென்றும், பழைய நாளில் மாதர்கள் எவரும் கல்வி கற்கவில்லை யென்றும், பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்று நூல்களிற் சொல்லப்படவில்லை யென்றும் கூறுவார்கள். உயிர்கள்என்ற பொது வகையில் விலங்குகளும் மக்களும் ஒப்பவர்களே ஆவர். உணவு தேடுதல், தேடிய உணவை உண்டல், உறங்கல், இன்புறல் என்னும் தொழில்கள் விலங்குகளுக்கும் உண்டு; மக்களுக்கும் உண்டு. ஆனால் மக்கள் விலங்குகளிலும் உயர்ந்தவர்கள் என்று சொல்வது ஏன் என்றால், நல்லது இது, தீயது இது என்று பகுத்துணர்தலாலும் தம்மைப் போன்ற உயிர்க்கு இரங்கித் தம்மாலான உதவி செய்தலானும், கடவுளைத் தொழுதலானும் இங்ஙனமெல்லாம் தமது அறிவை வளரச் செய்தற்குரிய பல நூல்களைக் கற்றலானுமே, மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவர்களாக எண்ணப்படுகின்றனர். இவ்வுயர்ந்த அறிவின் செயல்கள் இல்லையானால் விலங்குகளுக்கும், மக்களுக்கும் சிறிதும் வேற்றுமை இல்லாமற்போம். கல்வி இல்லாதவர் விலங்குகளே ஆவர். கல்வி இல்லாதவர்களுக்கு நுட்பமான அறிவு சிற்சில நேரங்களிற் காணப்பட்டாலும் அதனை அறிவாகப் பெரியோர்கள் கொள்ள மாட்டார்கள்.

    இங்ஙனம் அறிவான் மிக்க ஆன்றோர் மக்களாய்ப் பிறந்த எல்லார்க்கும் கல்வி இன்றியமையாது வேண்டற்பாலதேயாம் என்று கூறியிருக்க, அஃது ஆண் மக்களுக்குத் தாம் வேண்டுமேயல்லாமற் பெண் மக்களுக்கு வேண்டுவதில்லை என்று உரைப்போர் உண்மை அறிந்தாராவரோ சொன்மின்கள் !”

    எனவும் கூறியுள்ளார்.

    5.4.2 வேளாளர் நாகரிகம்

    வேளாளர் நாகரிகம் என்னும் நூலில் அடிகள் வேளாளரைப் பற்றிக் கூறி அவர்கள் அன்பொழுக்கத்தை விளக்குவதைக் காண்போம்:

    “உழவுத் தொழிலோ மிகவும் வருத்தமானதொன்று. உழவுத் தொழிலைச் செய்பவர்கட்கே வருத்தம் இன்னதென்பது தெரியும். அதனைச் செவ்வையாய்ச் செய்து முடிப்பதற்கோ முன்பின் ஆராயும் நுண்ணறிவு வேண்டும். ஆதலால் அதனைச் செய்வார்க்கே உயர்ந்த அறிவும் அவ்வறிவினைப் பயன்படுத்தும் முறைகளும் விளங்கும். ஆதலினாற்றான் வேளாளர்க்கு இரக்கமும் அறிவும் ஈகையுந் தொன்றுதொட்டு வரும் இயல்புகளாகக் கூறப்படுகின்றன. தம்மை யொத்த மக்கள் வறுமையாலும் நோயாலும் துன்புறக் கண்டால், அவர்க்குற்ற அத்துன்பத்தின் கொடுமையினை நினைந்துருகி, அவை தம்மைப் பொருளாலும் மருந்தாலும் நீக்க வல்லவர்களே ஆவர்.”

    “மக்களாய்ப் பிறந்தோர் தம்மை யொத்த எல்லார்க்கும் பசியும், நோயும், வறுமையும் உண்டென்பதை உணர்ந்து, அவர்பால் இரக்கமும் அன்பும் மீதூரப் பெற்றாராய் அவர்க்குச் சோறு தந்து பசியை நீக்கியும், மருந்து ஊட்டி நோயைத் தீர்த்தும், பொருள் வழங்கி வறுமையைக் களைந்தும் ஒழுகுவதோடு அவர் இம்மை மறுமைப் பயன்களை எய்துதற்கு இன்றியமையாத கல்வியறிவையும் தந்து நடத்தல் வேண்டும். இதுவே அன்பொழுக்கமாம். தமிழ் நன் மக்களான வளோளர்கள் எல்லா மாந்தரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையராய்ப் பசித்து வருந்தினார்க்கு அப்பசியைத் தீர்த்தற்கு அறச் சோற்று விடுதிகளும், நீர்விடாய் தணித்தற்கு அறக்கூவல் குளங்கள், தண்ணீர்ப் பந்தல்கள், இளமரக்காக்களும், வழிப்போவார் தங்குதற்குச் சத்திரஞ் சாவடிகளும், நோயுற்று வருந்தினர்க்கு நோய் தீர்க்கும் மருத்துவ விடுதிகளும், கல்வி கற்பிக்குங் கல்விக் கழகங்கள், திருமடங்களும், கடவுளை வழிபடுதற்குத் திருக்கோயில்களும் பண்டு தொட்டு ஆங்காங்கமைத்துப் பலவகை அறங்களுஞ் செய்திருக்கின்றனர்.”

    5.4.3 சிறுவர்க்கான செந்தமிழ்

    சிறுவர்க்கான செந்தமிழ் என்னும் நூலில் மலையைப் பற்றி அடிகள் எழுதும் பொழுது மலையைக் குறிக்கும் பல்வேறு சொற்களை இளஞ்சிறார்க்கு அறிமுகப்படுத்துகின்றார்.

    “மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினையுடையது. மல் என்றால் வலிமை. மலைகளெல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல், பிறங்கல், பொருப்பு, வெற்பு என்றும், ஓரிடத்திற் குறுக்கே நீண்டு கிடக்கும் மலையை ‘விலங்கல்’ என்றும்; ஒன்றன் மேலொன்று அடுக்கு அடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை ‘அடுக்கல்’ என்றும்; எதிரொலி செய்யும் மலையைச் ‘சிலம்பு’ என்றும்; மூங்கிற்காடுகள் உள்ள மலையை ‘வரை’ என்றும்; காடுகள் அடர்ந்த மலையை ‘இறும்பு’ என்றும்; சிறிய மலையைக் ‘குன்று, குவடு, குறும்பொறை’ என்றும்; மண் மிகுந்த மலையைப் ‘பொற்றை, பொச்சை’ என்றும்; மலைப்பக்கத்தைச் ‘சாரல்’ என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும்.”

    இவ்வாறு மலை என்ற சொல்லுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு சொற்களை இளஞ்சிறார்க்கு அறிமுகப்படுத்துகின்றார்.

    5.4.4 மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை

    அடிகளார், “பசி எடாமைக்கு இரண்டு ஏதுக்கள் உண்டு. மிகவும் கொழுமையான உணவுப் பொருள்களை அயின்றால் அவை செரித்தற்கு நெடுநேரஞ் செல்லுமாதலால் அதனால் ஒருநாள் முழுதுங்கூடப் பசியில்லாதிருத்தல் உண்டு. இனி முறைகடந்து தின்று வந்த பழக்கத்தாலும் பசித் தீ அவிந்து போதலும் உண்டு” என்று மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வது எப்படி? என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட வாக்கிய அமைப்பும், படிமங்களைத் தோற்றுவிக்கும் சொற்புணர்ப்புகளும், இழுமென் ஒலியும் நம்மை மயக்குறுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.

    5.4.5 கோகிலாம்பாள் கடிதங்கள்

    அடிகளார் பிறந்த அதே ஆண்டில் தமிழ் நாவலும் தோன்றியது. ஒற்றுமை இத்துடன் நிற்கவில்லை. இலக்கிய சமய ஆராய்ச்சிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அடிகளார், தாம் பிறந்த அதே ஆண்டில் பிறந்த மற்றோர் இலக்கியக் குழந்தையையும் மறந்து விடவில்லை. உரிய காலத்தில் தம் வயதோடொத்த அத்தோழனின் வளர்ச்சிக்கும் தம் உழைப்பில் ஒரு பகுதியைத் தந்தார். அவ்வுழைப்பின் பகுதியே குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி யாகவும், கோகிலாம்பாள் கடிதங்களாகவும் மலர்ந்துள்ளது எனலாம்.

    அடிகளாரின் இரண்டு புனைகதைப் படைப்புகளில் கோகிலாம்பாள் கடிதங்களே தனிச்சிறப்புப் பெறுவது. குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி ஓர் ஆங்கில நாவலின் தழுவல் என்பதுடன், புனைவியல் கூறுகள் அதிகமுள்ள ஒரு படைப்பு எனலாம். ஆனால் கோகிலாம்பாள் கடிதங்களோ இயல்பு நவிற்சி அல்லது உண்மையுணர்ச்சி (Realism) மிகுந்துள்ள ஒரு நாவல். அத்துடன் இந்நாவலின் வடிவத்திற்கு அடிகளார் பயன்படுத்தியுள்ள கடித அமைப்பு முறை தமிழிற்குப் புதுமையானது. ஆங்கில இலக்கிய உலகில் இக்கடித அமைப்பு முறை ஒரு காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. தமிழில் இவ்வகையில் அமைந்த நாவல் இதுவொன்றே ஆகும். ஞானசாகரம் என்ற இதழில் 1911ஆம் ஆண்டு தொடங்கிய இந்நாவல் 1921இல் முற்றுப்பெற்று அதே ஆண்டில் நூல் வடிவமும் பெற்றது. ஆங்கில இலக்கிய உலகில் இக்கடித அமைப்புமுறை பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தது.

    கோகிலாம்பாள் கடிதங்கள் அடிப்படையில் கலப்பு மணத்தையும், விதவைத் திருமணத்தையும் ஆதரித்து எழுதப்பட்டதெனலாம். சாதி வேறுபாடுகளற்ற ஒரு சமுதாயத்தைக் காண விழைந்த அடிகளார், இன்றுள்ள சமுதாயச் சூழலுள் விதவைகள் படும் துன்பத்தைக் கண்டு அதனையும் போக்கவே இந்த நாவலை எழுதியுள்ளார்.

    “ஏழை எளியவர்களுக்கும் வலியற்றவர்களுக்கும் இயன்ற அளவு ஊணும் உடையும் கொடுத்து அவர்கள் துன்பத்தைப் போக்குவீர்களாக ! பசியாலும் தாகத்தாலும் வருந்தி வந்தவர்களுக்கு முதலில் உணவுந் தண்ணீருங் கொடுத்து அவர்கள் களைப்பை மாற்றியபின் நீங்கள் உணவெடுக்க வேண்டும். தமிழ்க் கல்வியை எவரும் படிக்கும்படி செய்து வருதல் வேண்டும். படிக்க வகையற்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து வாருங்கள். நீங்களும் இடைவிடாது கல்வியிற் பயின்று வருதல் வேண்டும். உன் கணவன் இங்கிலீஷிலும் வல்லவனாதலால், அந்தப் பாஷையிலிருக்கின்ற அற்புதமான பூத பௌதிக சாஸ்திரக் கருத்துகளையெல்லாம் நீ தெரிந்து கொண்டு தமிழர்களுக்குப் பயன்படும் வண்ணம் அவற்றை எழுதித் தமிழ் நூல்களாக வெளிப்படுத்தல் வேண்டும். சமஸ்கிருத பாஷைச் சொற்களைக் கண்ட மட்டும் தமிழில் வழங்காமல் தமிழ்ச் சொற்கள் ஏராளமாக இருப்பதால் அவற்றையே நீ பழக்கத்துக்குக் கொண்டு வந்து, புண்ணிய பூமியாகிய இத்தமிழ் நாட்டுக்குப் பல நன்மைகளை நீ செய்தல் வேண்டும்...’ என்று மரணப் படுக்கையில் கோகிலாம்பாளின் மாமனார் அவளிடம் கூறும் கருத்துகள் இவ்வாறு அமைந்தவை. இவற்றைக் கூறுவது கோகிலாம்பாளின் மாமனாரானாலும், இவையே இந்நாவலின் மூலம் அடிகளார் படிப்பவர்களுக்கு உணர்த்தும் செய்திகள்.

    “இந்நூலில் தலைமகளாகிய கோகிலாம்பாள் என்னும் நங்கையார் தாம் பார்ப்பனக் குடியிற் பிறந்தவராயிருந்தும் தமது குடிப்பற்றிற்கு அகப்படாத தூய்மையும் நுண்ணறிவும், கற்பொழுக்கமும், உறுதியான உள்ளமும் உடையவராய்த் தமது நல்லறிவிற்பட்டபடி தாம் நடந்து காட்டியதோடு, தாம் எழுதிய கடிதங்களில் இருபாலருங் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய நன்முறைகளையும் விளங்க எடுத்து இனிதாகத் தெருட்டியிருக்கின்றார். இக்கடிதங்களையெல்லாம் ஒருங்கு திரட்டிப் பதிப்பிட்டு வெளியிடத்துணிந்தோம்” என்று முகவுரையில் கூறுவதன் மூலம் தம்முடைய கதைத்தலைவி அறிவிலும், ஆற்றலிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவள் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறார். அதனாலேயே அவளுடைய ஆராய்ச்சித் திறனும், வாதத் திறமையும் படிப்பவர்களிடம் ஒரு நம்பிக்கையின்மையைத் தோற்றுவிப்பதில்லை. அடிகளாரின் மற்ற நூல்களையெல்லாம் அவரை ஒரு சிறந்த ஆய்வாளராகவும் மொழி அறிஞராகவுமே காட்டுகின்றன. இந்த நூலே அவரைப் படைப்பிலக்கிய ஆசிரியராக ஒரு புதிய கோணத்தில் காட்டுகிறது. அவர் படைத்த இந்நாவல் கடித வடிவில் தமிழில் எழுந்த ஒரே நாவல். இந்நாவல் தமிழ் நாவல் உலகிற்குக் கிடைத்த கொடை எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:39:07(இந்திய நேரம்)