Primary tabs
5.6 தொகுப்புரை
தமிழ்ப் பெரியார்களுள் மாமலை என விளங்கியவர் மறைமலையடிகள். “மறைமலை ஒரு பெரும் அறிவுச்சுடர்; தமிழ்நிலவு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சிப் பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. அடிகள் பேச்சு பல பேச்சாளரைப்படைத்தது. எழுத்து, பல எழுத்தாளரை ஈன்றது” என்று தமிழ்ப்பெரியார் திரு.வி.க. இவரைப் பாராட்டியுள்ளார். இவர் தொடக்க காலத்தில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதினாலும், பிற்காலத்தில் தூய தமிழ் நடையில் எழுதினார். நீண்ட தொடர்களைக் கொண்டிருப்பினும் எளிமையும் இனிமையும் தெளிவும் திண்மையும் உடைய மறைமலை அடிகளின் உரைநடையால் தமிழ் உரைநடைவளம் பெற்றதோடு தனித்தமிழ் மரபும் வளரலாயிற்று.