Primary tabs
5.3 தனித்தமிழ் இயக்க உரைநடை
இருபதாம் நூற்றாண்டு உரைநடை வரலாற்றில் தனித்தமிழ் உரைநடை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கின் தொல்காப்பியர் காலத்திலேயே வடமொழிக் கலப்பு இருந்ததை
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற சூத்திரத்தால் அறிகிறோம். சங்க இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. சங்க இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு இரண்டு விழுக்காடு எனின் சங்கமருவிய கால இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு ஐந்து விழுக்காடாக உள்ளது. மணிமேகலை போன்ற நூல்களில் புத்த சமயக்கோட்பாடுகளை விளக்குவதால் வடசொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. பல்லவர், சோழர் காலத்தில் வடசொல் கலப்புமிகுந்து காணப்படுகின்றது. பல்லவ அரசர்களும் சோழப்பேரரசர்களும் வடமொழிக் கல்விக்கு ஆதரவு அளித்த செய்தியை வரலாற்றின் மூலம் அறிகிறோம். திருவாசகத்திலுள்ள 2810 சொற்களுள் 373 சொற்கள் வடசொற்கள் என மறைமலையடிகள் குறிப்பிடுகிறார். சங்க காலந்தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை தமிழில் பிறமொழிக்கலப்பு இருந்ததை மறுப்பதற்கில்லை.
சூரிய நாராயண சாஸ்திரி அவர்களைத் தனித்தமிழ் இயக்கவழிகாட்டி எனலாம். இவர் தம் பெயரைப் பரிதிமாற் கலைஞர் எனமாற்றிக் கொண்டார். அவர் தனித்தமிழ் ஆர்வம் கொண்டிருந்தாலும், அவரது நடையிலும் வடமொழிக் கலப்பைக் காண்கிறோம். தமிழ் தனித்தியங்க முடியும் என்று முதன்முதலில் கூறியவர் திராவிடமொழியியல் தந்தை கால்டுவெல் ஆவார். அவரது கருத்தைப்பரிதிமாற் கலைஞரும் வலியுறுத்தினார்.
‘திராவிட மொழிகள் அனைத்தினும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்றுவளர்வதும் இயலும்’ என்று கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தனித் தமிழைப் பற்றிப் பரிதிமாற் கலைஞரும் கால்டுவெல் அவர்களும் கூறிய போதிலும், தனித்தமிழ்க் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர் மறைமலை அடிகளேயாவார். ‘வடசொற்களை இப்போதே நாம் தடை செய்யாவிடின் தமிழ் தன்னிலைகெட்டு வேறுமொழி போலாகிவிடக் கூடும். தமிழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் தமிழ் தன் இனிமை இழந்து போவதோடுபல தமிழ்ச் சொற்களும் வழக்கில் இல்லாது இறந்து போகின்றன.‘ யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்’ என மறைமலையடிகளே கூறுகிறார்.
தனித் தமிழ்க் கொள்கையை வலியுறுத்தி அறிஞர்கள் ஆங்காங்குச் சொற்பொழிவுகளும் நூல்களும் செய்த வண்ணமிருந்தனர். தமிழவேள் உமாமகேசுவரனார், திரு.வி.க., ச.சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியனார், பண்டிதமணி கதிரேசனார், மு.வ., வ.சுப.மாணிக்கனார் போன்றோர் செந்தமிழ் நடையில் எழுதத்தொடங்கினர். தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ் போன்ற இதழ்கள் செந்தமிழ் நடையில் வெளிவரத் தொடங்கின. தூயதமிழ் வளர்ச்சியில் இவ்விதழ்கள் பெரும்பங்காற்றின.
மறைமலையடிகள், திரு.வி.க. போன்றோர் தூய தமிழ் நடையில் எழுதினாலும், தனித்தமிழில் எழுதுவதைத் ‘தனித்தமிழ் இயக்கமாக’ வளர்த்த பெருமை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரையும் பெருஞ்சித்திரனாரையும் சாரும். பெருஞ்சித்திரனார் அவர்கள் தனித்தமிழுக்கென்றே தென்மொழி என்னும் இதழை நடத்தினார். தென்மொழி ஓர் இயக்கமாகவே இயங்குகிறது. தமிழ் உரைநடை வரலாற்றில் பெரும் மாறுதலை உண்டாக்கியது தனித்தமிழ் நடை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
மறைமலையடிகளால் தமிழ் வளர்ந்தது. தமிழால் அவர் வளர்ந்தார். தனித்தமிழ் நடை வளம் பெற்றதோடு தனித்தமிழ் மரபும் வளரலாயிற்று. எந்தவொரு துறையையும் தனித்தமிழில் எழுத முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டிய பேரறிஞர் மறைமலையடிகள். இவரது உரைநடையைப் பற்றிக் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் ‘தனித்தமிழிலே தேனும் பாலுங் கலந்தனைய தீஞ்சொற் சுவைமிக்க இழுமெனும் இனிய உயரிய உரைநடை எழுதுவதிலும் சொன்மாரி பொழிவதிலும் இவர்க்கு ஒப்பாவார் எவருமிலர்’ எனப் பாராட்டுவது முற்றிலும் பொருந்துவதாகும். இவருடைய தமிழ்த் தொண்டால் தமிழ்உரைநடை, செறிவு மிக்க பெருமித நடையாக வளர்ந்தது. இவரதுஉரைநடை நீண்ட வாக்கியங்களைக் கொண்டதாக இருப்பினும், எளிமையும் இனிமையும் வாய்ந்ததாக உள்ளது. தனித்தமிழில் எழுதமுயன்றதன் விளைவாகப் புதுச் சொல்லாக்கங்களைப் படைத்துத்தமிழ் மொழியை வளம் பெறச் செய்தார். மறைமலையடிகளாரைத் தனித்தமிழ் நடைக்குத் தந்தை என்று கூறலாம்.
அடிகளாரின் தனித்தமிழ்த் தொண்டை அவர்தம் மாண்புமிக்க செல்வி நீலாம்பிகை அம்மையார் தொடர்ந்து செய்து வந்தார்கள் இவர் தனித்தமிழ்க் கட்டுரைகள், வடசொல்-தமிழ் அகராதி என்னும் நூல்களை இயற்றியுள்ளார். தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்த பெருமை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் அதன் தலைவராக இருந்த தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளைக்கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கும் உண்டு.