தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவிதையும் உரைநடையும்

  • 5.2 கவிதையும் உரைநடையும்

    கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டதும் தமிழ் அறிந்த அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கவிதைகள்தாம். என்ன மாணவர்களே! உங்களுக்கும் அப்படித்தானே? எனினும் அவரது உரைநடையின் சிறப்புகளையும் நாம் உணர வேண்டும் அல்லவா? 

    கண்ணதாசன் கவிதைகளில் தமிழின் இனிமையும் எளிமையும் காணப்படும். அவரது கவிதையின் அழகைக் கவிதைத் தொகுதிகளில் காணலாம்; அவர் எழுதிய மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி முதலிய குறுங்காப்பியங்களில் காணலாம். இவை அனைத்திற்கும் மேலாக, அவரது திரைப்படப் பாடல்கள் இசையோடு இயைந்து இனிமை நிறைந்து காணப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.

    தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு இலக்கியத் தகுதியை வழங்கிய கவிஞர்களுள் கண்ணதாசன் குறிப்பிடத் தக்கவர் ஆவார். திரைப்படப் பாடல்கள் கதைச் சூழலுக்கேற்ப அமைபவை எனினும், இவர் அவற்றிலும் திராவிட இன உணர்வையும் தமிழ் உணர்வையும், வாழ்வின் மெய்ப்பொருள்களையும் அமைத்துப் பாடியவர். இதனால் திரைப்படம் காண வந்த எழுதப் படித்தத் தெரியாத தமிழர்களுக்கும் தமிழ்ச் சுவை பெற வாய்ப்புக் கிட்டியது எனலாம்.

    கண்ணதாசனின் கவிதைச் சிறப்பை உணர்ந்த அனைவரும் கவியரசு கண்ணதாசன் என்று போற்றினர். திரைப்பட உலகில் கவிஞர் என்று குறிப்பிட்டால் அச்சொல் கண்ணதாசனை மட்டுமே குறித்தது. இது கண்ணதாசனுக்கும் கவிதைக்கும் இருந்த தொடர்பை நன்கு உணர்த்தும். அத்துடன் கண்ணதாசனின் கவிதைகள் மக்கள் மனத்தில் உண்டாக்கியிருந்த தாக்கத்தையும் புலப்படுத்தும். 

    தமிழ் இலக்கிய உலகிற்குத் தன்னைக் கவிஞராகவே அறிமுகப்படுத்திக் கொண்டவர் கண்ணதாசன். அவரது அரசியல் ஈடுபாடும், தான் கருதியதைப் பிறருக்கு உணர்த்த வேண்டும் என்று எழுந்த அவரது ஊக்கமும் அவரை உரைநடையிலும் ஈடுபடத் தூண்டிற்று எனலாம். இதன் பயனாக இவர் உரைநடையில் பல படைப்புகளை இயற்றினார்.

    கண்ணதாசனின் உரைநடைப் படைப்புகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காணலாம். 

    வ.எண்

    படைப்பின் வகை

    எண்ணிக்கை

    (1)
    புதினங்கள்
    15
    (2)
    குறும் புதினங்கள்
    13
    (3)
    சிறுகதைத் தொகுப்பு
    7
    (4)
    நாடகங்கள்
    3
    (5)
    மேடை நாடகங்கள்
    3
    (6)
    கட்டுரை நூல்கள்
    27
    (7)
    தத்துவ நூல்கள்
    10
    (8)
    தன் வரலாறு
    3
    (9)
    திரைக் கதை வசனங்கள்
    12

    என்பன.

    இப்பட்டியலை உற்று நோக்கும் போது கண்ணதாசன் உரைநடையின் பல்வேறு புனைவியல் வகையிலும் தன்னுடைய படைப்புகளை வழங்கியுள்ளார் என்பது தெரிய வருகிறது. கண்ணதாசன் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றோடு இதழியல் கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கினார். அவர் நடத்திய தென்றல், முல்லை, கண்ணதாசன் ஆகிய இலக்கிய இதழ்களில் வெளியான அவரது உரைநடைப் பகுதிகள் அவரது உரையின் தன்மையை வெளிப்படுத்தும்.

    கண்ணதாசன் கவிஞராகவும் உரைநடையாசிரியராகவும் விளங்கியதால் அவரது இவ்விரு ஆற்றலையும் ஒப்பிட்டுப் பலரும் பாராட்டியுள்ளனர். அவர்களுள் கவிஞர் மு.மேத்தா கண்ணதாசனின் கவிதையையும் உரைநடையையும் ஒப்பிடுகையில்,

    “இலக்குவன் போல்
    உன்னுடன்
    இருந்தது உரைநடை
    சீதை போல் உன்னைச்
    சேர்ந்தது
    கவிதை”

    என்று எழுதுகிறார். இக்கவிதை கண்ணதாசனுக்குக் கவிதையும் உரைநடையும் இரு கண்களாகத் திகழ்ந்தன என்பதை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம் அல்லவா?

    கண்ணதாசன் ஈடுபட்டிருந்த துறைகள் திரைப்படம், நாடகம், அரசியல், இதழியல் முதலியன. இவை அனைத்தும் பொதுமக்களோடு நேர்முகத் தொடர்புடையவை. எனவே பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் கண்ணதாசனின் உரைநடை எளிமையாக அமைந்தது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்குத் தமிழின் இலக்கியச் சுவையைக் கொண்டு சேர்க்கும் பணியைக் கண்ணதாசனின் உரைநடை செய்தது எனலாம். இதற்கு ஏதுவாக அவரது உரைநடை தெளிவாகவும் இனிமையாகவும் எளிய சொற்களைக் கொண்டும் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2018 11:55:17(இந்திய நேரம்)