Primary tabs
- 5.4 உரைநடையின் தனித்தன்மைகள்
கண்ணதாசனின் கவிதைக்கு இருக்கும் தனித்தன்மையைக் கூற வேண்டும் எனில், இனிமை, எளிமை என்ற இரண்டையும் கூறலாம். அதைப் போலவே அவரது உரைநடைக்கும் இனிமையும் எளிமையுமே தனித்தன்மைகளாக அமைந்துள்ளன. கண்ணதாசனின் உரைநடையின் குறிப்பிடத்தக்க தனித்தன்மையாக இருப்பது ‘கவிதைச் சாயல்’ ஆகும். இயல்பிலே கவிஞராக இருந்த கண்ணதாசனின் உரைநடையில் அக்கவிதைச் சாயல் கலந்திருப்பதில் வியப்பில்லை அல்லவா? எனவே கவிதைக்குரிய கூறுகளான எதுகையும் மோனையும், உவமை நயமும் கண்ணதாசனின் உரைநடையின் தனித்தன்மைகளாக உள்ளன.
எதுகையும் மோனையும் கண்ணதாசனின் உரைநடையில் இயல்பாக அமைந்து கிடப்பவை.
‘கடல் கொண்ட தென்னாடு’ என்னும் அவரது வரலாற்று நாவலில் காணப்படும் உரைநடையில் எதுகையும் மோனையும் இனிமையுடன் திகழ்கின்றன. அதில் இருந்து ஓர் எடுத்துக் காட்டைக் காண்போம்.
கண்ணதாசன் குமரியாற்றினை வருணிக்கும் பகுதி பின்வருமாறு அமைகின்றது.
வெள்ளை நுரைகளைக் கரையில் ஒதுக்கியபடி
விளையாடிக் கொண்டிருந் ததுகுமரியாறு
பிடிப்பா ரில்லாமல் பெருகிக்கிடந்த மீன்கள்
தலையை மேலேநீட்டித் தவழ்ந்து கொண்டிருந்தன.இதில் அமைந்திருக்கும் மோனைச் சிறப்பைக் கண்டு மகிழ முடிகிறதல்லவா?
எதுகைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
மதுரை வீரன் என்ற திரைப்படத்தில், மதுரை வீரன் கையும் காலும் வெட்டப்பட்டுக் கிடக்கும் நிலையில், பொம்மி திருமலை மன்னனிடம் பேசும் வேதனை மொழிகளில் இருந்து ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்:
சுற்றிவரும் எதிரிகளைத்
தூளாக்குவேன் என்று
கத்தி எடுத்த கைகளைப் பார்!
ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்தச்
சுத்த வீரனைப் பார்!கத்தி, ரத்த வெள்ளம், சுத்த வீரன் என்று தொடர்ந்து வரும் எதுகைகள், இவ்வுரையைக் கவிதை நயமிக்கதாக மாற்றி விடும் ஆற்றலுடையனவாய்த் திகழ்கின்றன.
கருத்துகளை எடுத்துரைப்பதற்குப் பயன்படும் அணிநலன்களில் உவமை என்பது முதன்மை பெறும் அணியாகும். தெரிந்ததைக் கூறித் தெரியாத ஒன்றை விளக்குவது உலக இயல்பு தானே. எனவே, உவமை எல்லா இலக்கியப் படைப்பிலும் இடம் பெறுகின்ற சிறப்புக் கூறாக நிற்கிறது.
கண்ணதாசனின் உரைநடையிலும் உவமைகள் காணப்படுகின்றன. கவிஞர் கண்ணதாசனின் சுகமான சிந்தனைகள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள வரதட்சணைக்கு என்னும் கட்டுரையில் பெண்ணை மணந்து கொள்ளும் ஆணுக்கு அறிவுரை பின்வருமாறு அமைகின்றது.
“கற்புடைய ஒரு பெண்ணைவிட அவள் அணிந்துவரும் நகைகள் விலையுயர்ந்தவை அல்ல. அழகான புள்ளிமானிடம் கவிஞன் கலையைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே தவிர, மாமிசத்தையல்ல” இந்தப் பத்தியில் பெண்ணைப் புள்ளிமானுடன் ஒப்பிட்டு உவமை கூறியிருப்பதில் பொதிந்து இருக்கும் பொருட்சிறப்பு எண்ணியெண்ணி வியக்கச் செய்கின்றதல்லவா?
தமிழின் இனிமையை வெளிப்படுத்துவதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றுள் தொடர்களை அடுக்கிக் காட்டுவதும் ஒன்றாகும். இத்தகு அடுக்குமொழிகளை அமைப்பதில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் தனிச் சிறப்புப் பெற்றவர்கள் ஆவர். கண்ணதாசனும் திராவிட இயக்க எழுத்தாளர் வரிசையில் நின்றவர் என்பதால் அவரது உரைநடையிலும் இந்த அடுக்குத்தொடரின் அழகு தென்படுகின்றது. சிவகங்கைச் சீமை என்னும் நாடகத்தில்.
“அடிபட்ட புலி; திகைத்து நிற்கும் சிங்கம்; சிறகொடிந்த புறா, ஊமைத்துரை”
என்று வரும் உருவக அடுக்குத் தொடர்கள் கண்ணதாசனின் அடுக்கு மொழிக்கு எடுத்துக் காட்டாகும்.
கண்ணதாசனின் உரைநடையில் குறிப்பிடத் தக்கதொரு தனித்தன்மை அவர் எடுத்துக் கொண்ட கருத்தை விளக்கும் முறையாகும். எளிதில் விளங்கிக் கொள்வதற்கு இயலாத மெய்ப்பொருளாக (தத்துவமாக) இருந்தாலும் அதனை எளிய சொற்களால் விளக்கிச் சொல்லும் ஆற்றல் இவரது உரைநடைக்கு உண்டு எனலாம். மனித வாழ்வில் வயதுக்கு ஏற்ப எண்ணங்களில் மாற்றங்கள் வரும் என்பதைக் கண்ணதாசன் விளக்கியிருப்பதைக் காணுங்கள்.
பின்வரும் பகுதி கண்ணதாசனின் துன்பத்தில் இருந்து விடுதலை என்னும் கட்டுரைநூலில் இருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
“பன்னிரண்டு வயதுக்கு மேல் அறிவுக்கண் லேசாகத் திறக்கிறது. ஆடல் பாடல்களில் உற்சாகம் பிறக்கிறது. உயரமான இடங்களைக் கண்டால் ஏறிக் குதிக்கச் சொல்கிறது. புதிய புதிய ஆடைகளில் கவனம் போகிறது. உடலின் வலிமை நிரந்தமானது என்றே நிச்சயமாகத் தோன்றுகிறது. ஆனால் சிறிய துன்பமே பெரியதாகவும் தோன்றுகிறது. சீக்கிரமே அது விலகியும் விடுகிறது.
மேலே காணும் பத்தியில் அடிக்கோடிட்ட சொற்களைப் பாருங்கள். ஒவ்வொரு தொடரும் திறக்கிறது; பிறக்கிறது; சொல்கிறது; போகிறது; தோன்றுகிறது; விடுகிறது என்று முடிந்து இயைபுத் தொடையில் அமைந்துள்ளது. இந்த வகையில் அமையும் உரைநடை படிப்பவரின் உள்ளத்தில் ஆசிரியரின் கருத்து விளக்கம் பெறுவதற்கு வாய்ப்பாக அமைவதைக் காணலாம்.
கண்ணதாசனின் உரைநடையில் பகவத்கீதைக்கு அவர் எழுதிய விளக்கவுரை தனியிடம் வகிப்பதாகக் கூறுதல் பொருந்தும். இந்த விளக்கவுரையின் பல இடங்களில் படிப்பவர்களுக்கு அறிமுகம் இல்லாத புதிய கருத்துகளை விளக்க வேண்டிய தேவை பரவலாக எழுந்துள்ளது. அவ்விடங்களில் கண்ணதாசனின் உரைநடையின் சிறப்பே உதவியுள்ளதைக் காண்கிறோம்.
பகவத் கீதையின் விளக்கவுரையில் ஸாங்கிய யோகம் என்னும் ஒருவகை யோகத்தின் தன்மையைக் கண்ணதாசன் விளக்க முற்படும் போது, “நாம் தேடிப் போகாமல், ஒரு போர் தானே வருகிறதென்றால், அது வாசலைத் திறந்து வைத்திருக்கும் பொன்னுலகைப் போன்றது. இத்தகைய போர் வாய்ப்புக் கிடைப்பதே ஒரு மன்னனுக்கு இன்பம்” என்று எழுதுகிறார். இது கண்ணதாசனின் கருத்து விளக்க உரைநடைக்கு எடுத்துக் காட்டாக அமைகிறதல்லவா?