தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடகப் புதுமைகள்

  • 6.3 நாடகப் புதுமைகள்

    தாம் இயற்றிய நாடகங்களில் பல புதுமைகளைச் சம்பந்த முதலியார் உருவாக்கினார்; தமிழ் மரபிற்கும் பண்பாட்டிற்கும் முரணான கதைகளை மாற்றியமைத்தார்; மரபிற்கு மாறுபட்ட நாடக முடிவுகளையும் அமைத்தார்; மரபு வழிவந்த கதைகளை மாற்றிப் புதிதாக நாடகம் உருவாக்கினார்.

    6.3.1 நாடகக் கதை மாற்றம்

    சம்பந்த முதலியார் பல மொழி நாடகங்களைப் பார்த்தும் படித்தும் நாடகம் பற்றிய தெளிவான கருத்துகளை மனதில் கொண்டிருந்தார். நாடகத்தின் கதை, களம், காட்சி எனப் பலநிலைகளில் தம் புதிய சிந்தனையை உருவாக்கி இருந்தார். தமிழ் மக்களின் வாழ்க்கைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்பக் கதை அமைப்பில் சில ஒழுங்கு முறைகளை உருவாக்கினார்.

    முதலில் நாடகக் கதை அமைப்பில் சம்பந்த முதலியார் செய்த மாற்றங்களை அறியலாம்.

    • புஷ்பவல்லி நாடகம்
    • இவர் தஞ்சை கோவிந்தசாமி ராவ் எழுதிய புஷ்பவல்லி என்னும் நாடகத்தைக் காணச் சென்றிருந்தார். அந்த நாடகத்தில் வரும் சில காட்சிகள் சம்பந்த முதலியாருக்கு உடன்பாடில்லை. அதே நாடகத்தைத் தாம் எழுதியபோது சில மாற்றங்களைச் செய்தார். கோவிந்தசாமிராவ் எழுதிய நாடகத்தில், அரசனின் முதல் மனைவி, தொழுநோயாளி ஒருவனிடம் கெட்டுப் போய் விடுவதைப் போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஓர் அரசி எவ்வளவுதான் கெட்டவளாக இருந்தாலும் அவள் ஒரு தொழுநோயாளியிடம் கெட்டுப் போவதைப் போல் காட்டி இருப்பது அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்பதை உணர்ந்தார். எனவே, தம் நாடகத்தில், அந்த அரசி அரண்மனைக்குள்ளேயே இருந்த கனவான் ஒருவனிடம் தவறான தொடர்பு கொண்டிருந்ததாக மாற்றியுள்ளார். இந்த மாற்றம் சிறியதாக இருந்தாலும், நாடகத்தின் இயல்புத் தன்மையை வெளிக்காட்டுவதற்கு இக்காட்சி அமைப்பு மிகவும் துணைபுரிந்தது.

    • சாரங்கதரன் நாடகம்
    • சம்பந்த முதலியாரின் இன்னொரு நாடகம் சாரங்கதரன். இந்த நாடகம் பல்லாரி வெ.கிருஷ்ணமாச்சார்லுவின் நாடக சபையினரால் முன்னர் நடிக்கப்பட்டு வந்தது. அந்த நாடகத்தில் வரும் மன்னன் பெயர் நரேந்திரபூபதி; அரசி இரத்தினாங்கி. இவர்களின் மகன் இளவரசன் சாரங்கன். இளவரசனுக்கு மணப் பெண் தேடுகிறான் தந்தை. அண்டை நாட்டு இளவரசி சித்திராங்கி. தன் மகனுக்காக மணம் பேசி முடித்த இச்சித்திராங்கியின் உருவப் படத்தைக் கண்டு தானே விருப்பம் கொள்கிறான் அரசன். தனக்கே அவளை மனைவியாக்கிக் கொள்கிறான்.

      தனக்கு மகன் முறையில் இருக்கின்ற சாரங்கதரனை ஒரு நாள் அரண்மனையில் காணுகிறாள் சித்திராங்கி. தன் காம இச்சையை அவன் தணிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். சாரங்கதரனோ அதை மறுத்து அவளைத் தன் சிற்றன்னை என்கிறான். இதனால் கடும் சினம் கொண்ட சித்திராங்கி என்றேனும் ஒருநாள்தான் காட்டிக் கொடுக்கப்பட்டு விடுவோம் என்று அஞ்சுகிறாள்; அப்போது தனக்குக் கிடைக்கும் தண்டனையை எண்ணி இப்போதே கலங்கினாள். இதில் இருந்து தப்பிக்க வழி தேடினாள். சாரங்கதரன் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டான் என்ற பெரும் பழியை அவன் மீது சுமத்தினாள். மன்னனிடம் முறையிட்டாள். கோபம் அடைந்த மன்னன் தன் மகனுக்குத் தூக்கு தண்டனை அளித்தான். இதுவே கிருஷ்ணமாச்சார்லுவின் நாடகத்தில் இடம் பெறும் கதை.

      தமிழ்ப் பண்பாட்டுக்கும் உறவு முறைக்கும் சற்றும் பொருந்தாத ஓர் உறவுமுறை இக்கதையில் உள்ளதாகச் சம்பந்த முதலியார் கருதினார். எனவே தமது சாரங்கதரன் நாடகத்தில் கதை அமைப்பையே மாற்றி அமைத்தார்.

    • மாற்றம்
    • அரசன் தன் மகனுக்கு மணம் பேச மகனின் படத்துடன் தூது அனுப்புகிறான். அண்டை நாட்டு இளவரசி சித்திராங்கி அப்படத்தைப் பார்த்துச் சாரங்கதரன் மீது காதல் கொள்கிறாள். அவனையே மணந்து கொள்ள விரும்புகிறாள். சாரங்கதரன் நாட்டுக்கு வருகிறாள். சாரங்கதரனின் தந்தை அவளைக் கண்டு காமுறுகிறான். தனக்குத் தாரமாக்கிக் கொள்ள விரும்புகிறான். சாரங்கதரன் அவளைக் கண்டுவிடாதபடி அவனைக் காட்டுக்குள் வேட்டையாட அனுப்பிவிடுகிறான். தன்னை மணந்து கொள்ளும்படிச் சித்திராங்கிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறான். இதனைச் சிறிதும் எதிர்பாராத சித்திராங்கி தான் விரதம் இருப்பதாகவும் அது முடியும் வரை எந்த ஆணையும் பார்க்க முடியாது என்றும் கூறிவிடுகிறாள். அப்போது சாரங்கதரனின் புறா ஒன்று சித்திராங்கியின் மாளிகையின் உள்ளே நுழைந்து விடுகிறது. சாரங்கதரனே நேரில் வந்தால்தான் புறாவைத் தருவேன் என்று கூறிப் புறாவைச் சித்திராங்கி பிடித்து வைத்துக் கொள்கிறாள். சாரங்கதரன் வருகிறான். அப்போது மன்னன் செய்த சூழ்ச்சியை விளக்குகிறாள். தான் அவனை மட்டுமே காதலிப்பதாகக் கூறித் தன்னை மணந்து கொள்ள வேண்டுகிறாள். ஆனால், தன் தந்தையை மணக்க எண்ணிய ஒருத்தி தனக்குத் தாய்முறை ஆவாள் என்று கூறிச் சாரங்கதரன் மறுத்து விடுகிறான். சித்திராங்கியோ தன் காதலைக் காத்துக் கொள்ள வழி தெரியாது தவித்தாள். தன் தோழி மதனிகையின் தூண்டுதலால் சாரங்கதரன் தன்னைக் கற்பழிக்க முயன்றான் என மன்னனிடம் கூறுகிறாள். மன்னன் தன் மகனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறான்.

      சம்பந்த முதலியார் சாரங்கதரன் நாடகக் கதையை மேற்சுட்டியவாறு முடிக்கிறார்.

      கிருஷ்ணமாச்சார்லுவின் நாடகக் கதையில் காம வெறி பிடித்த சித்திராங்கியைக் காணுகிறோம். சம்பந்த முதலியார் கதையிலோ காதல் உணர்வு ததும்புகின்ற சித்திராங்கியைக் காணுகிறோம். சாரங்கதரன் படத்தைப் பார்த்த உடனேயே அவன் மீது காதல் கொண்டு அவனை மணந்து கொள்ள விரும்புகிறாள். எனவே அவள் சிற்றன்னை என்னும் இடத்துக்கே வரமாட்டாள் என்றாலும் சாரங்கதரன் தன் தந்தை விரும்பிய காரணத்தால் அவளைச் சிற்றன்னையாகவே கருதுகிறான். இவ்வாறு தமிழ்ப் பண்பாட்டிற்கேற்பச் சம்பந்தமுதலியார் நாடகப் போக்கில் மாற்றங்களைச் செய்திருக்கிறார்.

      இத்தகைய கருத்து மாற்றங்களைத் தாம் எழுதிய வேறு சில நாடகங்களிலும் மேற்கொண்டிருக்கிறார். மனோரமா அல்லது இரண்டு நண்பர்கள், நந்தனார், லீலாவதி, சுலோசனா, ராஜபுத்திர வீரன், சரசாங்கி ஆகிய நாடகங்களில் மாற்றங்கள் செய்திருப்பதாகச் சம்பந்த முதலியார் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

      தமிழ் நாடகங்களைத்தான் இவ்வாறு சிற்சில இடங்களில் மாற்றினாரேயன்றி ஆங்கில மொழி பெயர்ப்பு நாடகங்களில் அவர் எத்தகைய மாற்றத்தையும் செய்யவில்லை. பெயர்களைத் தமிழ் மரபிற்கேற்ப ஒலி மாற்றம் செய்ததுடன் நிறுத்திக் கொண்டார். ஆங்கிலேயரின் வாழ்க்கை மரபினைத் தழுவியே அந்த நாடகங்கள் ஆக்கப்பட்டிருந்ததால் அதை ஒருவேளை அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் சம்பந்தமுதலியார் தம் போக்கிற்கு ஏற்பத் திருத்தி அமைக்காததற்கு வேறு ஒரு காரணத்தைத் தம் நூலில் கூறுகிறார். பெரியோர்கள் கையாண்ட கதைகளை மாற்றி அமைப்பதோ திருத்தி அமைப்பதோ தமக்கு உடன்பாடு இல்லாதது என்று கூறுகிறார்.

      சேக்ஸ்பியரின் ‘சிம்பலின்’ நாடகத்தைச் சரசாங்கி என்னும் பெயரில் நாடக வடிவம் ஆக்கித் தம் நாடக சபையில் நடத்திய போது இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

    6.3.2 நாடகக் கதை முடிவு


    எந்த மொழி நாடகமாக இருந்தாலும் பொதுவாக அவை இரண்டு வகையான முடிவுகளைக் கொண்டு விளங்கும். அவை

    1) இன்பியல் முடிவு
    2) துன்பியல் முடிவு

    என்பனவாகும்.

    மேலை நாட்டு நாடகங்களில் இவை சமநிலையில் இடம்பெறும். ஆனால் இந்திய நாடக மரபு இதற்கு அதிக இடம் தரவில்லை. மகிழ்ச்சியான முடிவையே நாடகத்துக்கு அளித்தனர். துன்பமான முடிவுகள் வருவதாக இருந்தால்கூட கடவுளின் கருணையை அல்லது அருள் திறத்தைப் புகுத்தி அவற்றை இன்பியல் முடிவாக மாற்றினர்.

    தமிழ் நாடகங்களைப் பொறுத்த வரையில் சுபம் என்ற சொல்லுடன் நாடகத்தை முடிப்பதே மரபாக இருந்தது. நொண்டி நாடகங்களில் கதைத் தலைவன் தீயவனாக இருந்தாலும் கூடக் கடைசியில் கடவுள் அருளால் நல்லவனாகத் திருந்தி விடுவான்.

    சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களுள் கள்வர் தலைவன் என்னும் நாடகமும் ஒன்று. அந்த நாடகம் சோக முடிவினைக் கொண்டதாகும். எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாமல் இந்த நாடகத்தை இவர் அவலமாகவே முடிந்திருக்கிறார். தமிழக நாடக வரலாற்றில், தமிழில் அவல நாடகம் இல்லாத குறையை இந்த நாடகத்தின் மூலம் போக்கிக் கொள்கிறார். இந்த நாடகத்துக்கு இரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தாலும் அதுவரை இரசிகர்கள் அத்தகைய நாடகங்களைப் பார்த்துப் பழக்கப்படாததால் நாடகம் முடிந்த நிலையில் அவர்கள் கண்ணிமைக்காமல் அமைதியாக இருந்ததாகச் சம்பந்த முதலியார் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

    6.3.3 எதிர்க்கதை நாடகம்


    நாடக உத்தி முறைகளில் எதிர்க்கதை நாடகமும் ஒன்று. தமிழகச் சிற்றூர்களுக்குச் சென்றால் ஏட்டிக்குப் போட்டி என்னும் சொல்தொடரைக் காது குளிரக் கேட்கலாம். ஒருவன் ஏதாவது ஒரு கருத்தைப் பற்றிப் பேசினால் இன்னொருவன் வேண்டுமென்றே அக்கருத்துக்கு நேர் முரணாகப் பேசுவான். இதைத் தான் ஏட்டிக்குப் போட்டி என்று கூறுவார்கள். குதர்க்கப் பேச்சு, ஏடாகூடப்பேச்சு என்றெல்லாம் கூறுவர்.

    இப்படிச் சாதாரணமாகப் பேசும் பேச்சுக்கு ஒரு கலைவடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரு நீண்ட நாடகமாக இருந்தால் எப்படி இருக்கும்? பொதுவாகக் கலைகளே சுவைப்பதற்கு உரியது தானே ! இந்த ஏட்டிக்குப் போட்டி அல்லது எதிர்க்கதை நாடகம் மக்களின் கண்களுக்கு விருந்தானபோது அவை நாடகப் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

    சம்பந்த முதலியாரின் எதிர்க்கதை நாடகம் ஒன்றைப் பார்ப்போம்.

    • அரிச்சந்திரன் கதை
    • அரிச்சந்திரன் கதை நம் அனைவருக்கும் நன்கு தெரியும். எத்தகைய சோதனைகள் துன்பங்கள் வந்தாலும் அரிச்சந்திரன் உண்மையைத் தவிர மறந்தும் பொய் பேச மாட்டான் என்பது தான் நாடகத்தின் மையக் கதைக்கரு. ஆனால் அரிச்சந்திரன் பொய்யைத் தவிர மறந்தும் உண்மையைப் பேசமாட்டான் என்றால்..... ஒரு வேளை அரிச்சந்திரன் என்னும் பெயரை வைத்துக் கொண்டு பொய்பேசத் தயங்குவான் என்றால் பெயரையே தலைகீழாகச் சந்திரஹரி என்று மாற்றிவிடலாம். இப்போது பெயரும் தலைகீழாக மாறிவிட்டது. அவன் பேசிய உண்மையும் நேர்மாறாகப் பொய்யாக மாறிவிட்டது.

      ஒரு நாடகம் எழுதுவதற்கு உண்டான ‘முடிச்சு’ (knot) இப்போது கிடைத்துவிட்டது. இனி முழுக்க முழுக்க நாடக ஆசிரியரின் கற்பனையில் உருவாவதுதான் நாடகம். இப்படி உருவான நாடகம்தான் சம்பந்த முதலியாரின் சந்திரஹரி நாடகம். இந்த நாடகத்தில் சந்திரஹரி மறந்தும் உண்மை பேசமாட்டான். ‘இந்தப் பிறவி முழுவதும் பொய்யை மட்டுமே பேசுவேன்’ என்று சத்தியம் செய்து விட்டுப் பிறந்தவன் போல முழுக்க முழுக்கச் சந்திரஹரி பொய்யையே பேசுவான்.

      இம்மாதிரியான நாடகம் தமிழிலோ, வடமொழியிலோ உருவாகவில்லை என்று சம்பந்த முதலியார் தம் நூலில் குறிப்பிடுகின்றார், இந்த வகை நாடகங்களை அவர் பின்வருமாறு விளக்கிக் கூறுகிறார்.

      ‘பர்லெஸ்க் (Burlesque) என்பது ஏதாவது ஒரு பிரபலமான கதையை எடுத்து, அதில் உள்ள சந்தர்ப்பங்களுக்கு முற்றிலும் மாறாக வேறு சந்தர்ப்பங்களை நகைப்புண்டாக்கும்படிக் கற்பனை செய்து கதையில் பூர்த்தி செய்வதாகும்’ என்று எழுதியுள்ளார்.

      இவரது நாடகமான சந்திரஹரி நாடகத்தில் வரும் மாந்தர்களெல்லாம் தலைகீழ்ப் பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றனர்.

      அரிச்சந்திரன்
      -
      சந்திரஹரி
      சந்திரமதி
      -
      மதிசந்திரள்
      விசுவாமித்திரர்
      -
      மித்திராவிசு
      வசிஸ்டர்
      -
      சிஸ்டவாசி

      என்பனபோல் பெயர்களை மாற்றி, சந்திரஹரியை மறவர் நாட்டு மன்னனாக்கி நாடகத்தை அமைத்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2018 10:51:22(இந்திய நேரம்)