தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடகத் தனித்தன்மை

  • 6.4 நாடகத் தனித்தன்மை

    சம்பந்த முதலியார், தம் நாடகங்களில், பழைய தமிழ் மரபும், பண்பாடும் பின்பற்றப்பட வேண்டுமென்று கருதினார். சமகாலச் சிந்தனைக்கும் சிறப்பிடம் கொடுத்தார்; நம்பக்கூடியவாறு பாத்திரப்படைப்புகள் இருக்க வேண்டுமென்று எண்ணினார்; பிரச்சாரத்தைத் தவிர்த்தார்; எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், தம் நாடகங்களில் உரைநடைக்கே முக்கியத்துவம் தந்தார்.

    6.4.1 மரபும் இயல்பும்

    புராணம், வரலாறு சமூகம் என எந்தப் பின்னணியில் இருந்து நாடகக் கதையைத் தேர்வு செய்தாலும் அதில் தம்காலச் சிந்தனையைச் சம்பந்த முதலியார் புகுத்தினார்; தமிழ் நாகரிகம், பண்பாட்டுக்கு ஏற்ப கதைப்போக்கு அமையவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்; கண்களையோ, மனத்தையோ துன்புறுத்தாத அளவில் குடும்பத்தவர் அனைவரும் அமர்ந்து நாடகத்தைப் பார்த்து மகிழ வேண்டும்; அதற்கேற்பவே கதைக் கோப்பும் அமைய வேண்டும் என்று எண்ணினார்.

    நாடகத்துக்கென்று ஓர் இயல்புத் தன்மை (Naturality) உண்டு. அவ்வியல்புத் தன்மை கெட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். நாடகத்துக்கு எனத் தேர்வு செய்யப்பட்ட இயல்புக் கதைக்கும், பாத்திரப் படைப்புக்கும் உண்மையாக இருக்க வேண்டும்; தம் கருத்துகளை வலியப் புகுத்துதல் கூடாது என்பதில் கவனம் செலுத்தினார்.

    பிரச்சாரம் என்பது சம்பந்த முதலியாரைப் பொறுத்த வரையில் அவரது நாடக இலக்கல்ல; குறிக்கோளும் அல்ல. எனவே அவர் பிரச்சார நாடகத்தை அதிகமாக எழுதவில்லை. உண்மையான சகோதரன் என்ற ஒரு நாடகத்தை மட்டும் பிரச்சார நாடகமாக எழுதினார். இந்த நாடகம் 1930 ஆம் ஆண்டு சம்பந்த முதலியாரால் எழுதப்பட்டது.

    மதுவிலக்குப் பிரச்சார சபையின் தலைவராகச் சம்பந்த முதலியார் இருந்ததால் இந்த நாடகத்தை எழுதினார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த நாடகம் அரசின் ஆதரவுடன் நடித்துக் காட்டப்பட்டது.

    6.4.2 நாடக வெளிப்பாட்டு முறை

    இசைப்பாட்டு, உரைநடைப் பேச்சு என்ற இரண்டு வெளிப்பாட்டு முறைகள் நாடகத்துக்கு உண்டு. மிகப்பழைய புராண இதிகாச நாடகங்கள் எல்லாம் இசைப்பாட்டு நாடகங்களாகவே இருந்தன. உரையாடல்கள் அனைத்தும் பாடல்களாகவே இருக்கும். படிப்படியாக இசைப் பாடல்கள் குறைந்து உரைநடைப் பேச்சு நாடகத்தில் இடம் பெற்றது. நன்கு பாடி நடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமன்றி, நன்கு பேசி நடிக்கத் தெரிந்தவர்களும் நடிக்கலாம் என்ற நிலை உருவானது.

    • உரையாடல் நாடகம்
    • சம்பந்த முதலியார் தம் நாடகங்களில் உரைநடையையே கையாண்டார். ஒரு வரிகூடப் பாடத் தெரியாத நடிகர்கள் கூட அவரது நாடகத்தில் பேசியே நடித்துப் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கின்றனர்.

      பாட்டு உரைநடையாக மாறியதும் உரைநடை இன்னும் சுருங்கி நடிப்பை வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒரு துணைப் பொருளாக மாறியதும் கூடக் காலப்போக்கில் நாடக்கலை வெளிப்பாட்டில் ஏற்பட்ட வளர்ச்சிதான். இந்த மாறுதல்களை முன்னின்று நடத்தியவர்களுள் முதன்மையானவர் பம்மல் சம்பந்த முதலியார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2018 10:59:14(இந்திய நேரம்)