தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுதிய நாடகங்கள்

  • 6.2 எழுதிய நாடகங்கள்


    சம்பந்த முதலியார் எண்பது நாடகங்கள் எழுதி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இவர் எழுதி நடித்த முதல் நாடகம் புஷ்பவல்லி என்பதாகும். இது 1893இல் எழுதி நடிக்கப்பட்டது. இவரது நாடகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    1) நேரடியாகத் தம் கற்பனையிலேயே உருவாக்கிய நாடகங்கள்
    2) வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்கள்.
    3) ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட நாடகங்கள்.

    இந்த மூன்று வகையான நாடகங்களை நேரடியாகத் தம் கற்பனையில் உருவாக்கிய நாடகங்கள், வரலாற்றுப் போக்குடைய நாடகங்கள், சமூக எழுச்சி நாடகங்கள் என வகைப்படுத்தலாம்.

    சம்பந்த முதலியாரின் கற்பனைச் சிறப்பு வாய்ந்த நாடகங்களாக மனோகரா, இரண்டு நண்பர்கள் ஆகிய இரு நாடகங்களையும் குறிப்பிடலாம்.

    மனோகரா நாடகம் 70 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக மேடையில் தன் செல்வாக்கினைச் செலுத்தியது இங்கு நாம் அறிய வேண்டிய ஒன்று. தொழில் முறை நாடக சபையினர் அனைவரும் இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த நாடகத்தின் பெருமையினை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாடகம் பிற்காலத்தில் திரைப்படமாகவும் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தித் தந்தது. வெற்றிகரமாக அமைந்த அத்திரைப்படத்துக்கு உரையாடல் எழுதியவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். மனோகரா, இரண்டு நண்பர்கள் ஆகிய இரு நாடகங்களும் உலகத் தரம் வாய்ந்த நாடகங்கள் என்று அவ்வை தி.க. சண்முகம் கூறுகிறார்.

    சம்பந்த முதலியார் எழுதிய இரண்டு நண்பர்கள், இரத்தினாவளி, காலவ ரிஷி, வேதாள உலகம், லீலாவதி சுலோசனா, சபாபதி, கள்வர் தலைவன் ஆகிய நாடகங்கள் தொழில் முறை நடிக்கப் பெற்ற வெற்றிகரமான நாடகங்கள் ஆகும்.

    6.2.1 மொழி பெயர்ப்பு நாடகங்கள்
     
    வடமொழியில் காளிதாசர் எழுதிய மாளவிகாக்னிமித்ரம், ஹர்சவர்த்தனர் எழுதிய இரத்தினாவளி ஆகிய இரு நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்த்து மேடையேற்றினர்.

    சேக்ஸ்பியர்

    ஆங்கிலத்தில் சேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களைத் தமிழ் மரபுக்கேற்ப மொழி பெயர்த்து மேடையேற்றினார். இவர் As You Like It என்னும் நாடகத்தை ‘விரும்பிய விதமே’ என்று தமிழில் மொழி பெயர்த்தார். Cymbeline என்னும் நாடகத்தை, ‘சிம்ஹல நாதன்’ என்னும் பெயரில் மொழி பெயர்ப்புச் செய்தார். சேக்ஸ்பியரின் வேறுசில நாடகங்களையும் குறிப்பாக Hamlet நாடகத்தை அமலாதித்தியன் என்றும் Macbeth நாடகத்தை ‘மகபதி’ என்றும் The Merchant of Venice என்ற நாடகத்தை ‘வாணிபுரத்து வணிகன்’ என்றும் தமிழ் மரபுக்கேற்ப இவர் மொழிமாற்றம் செய்தார்.

    ஆங்கில நாடகங்களில் வரும் கதை மாந்தர்களின் பெயர்களையும் தமிழ் மரபுக்கேற்பத் தமிழ் ஆக்கினார். ஆங்கிலப் பெயர்களில் உள்ள மெய் எழுத்துகளைக் கொண்டே தமிழ் மரபுப் பெயர்களை உருவாக்கியதாகச் சம்பந்த முதலியார் குறிப்பிடுகிறார். பிரடெரிக் என்பதைப் பிரதாபதீரன் என்றும், ஆலிவர் என்பதை ஆலவீரன் என்றும் சீலியா என்பதைச் சுசீலா என்றும் ஆர்லாண்டோ என்பதை அமரசிம்மன் என்றும் ராசலிண்ட் என்பதை ராஜவாட்சி என்றும் பெயர்களை ஒலிமாற்றம் செய்துள்ளார்.

    6.2.2 ஆங்கில மோகமும் தமிழ் நாடகமும்

    சம்பந்த முதலியார் தம் பள்ளிப் பருவ நாட்களில் ஆங்கில நாடகங்களையே விரும்பிப் பார்த்து வந்தார். தமிழ்க் கூத்துகள் அவ்வளவாக அவரைக் கவரவில்லை. இதைச் சம்பந்த முதலியாரே பின்வருமாறு கூறுகிறார்.

    “ஆங்கில நாடகங்களின் மீது எனக்குப் பெரும்
    உற்சாகம் உண்டானதே ஒழிய, தமிழ் நாடகங்களின்
    மீது எனக்கிருந்த வெறுப்புக் குறையவில்லை”

    என்று கூறுகிறார்.

    பள்ளி நாட்களில் இத்தகைய மனநிலையில் இருந்த சம்பந்த முதலியார்தான் பிற்காலத்தில் தமிழில் வளமான நாடகங்களை உருவாக்கினார்.

    பின்னாளில் தமிழ் நாடகங்களின் மேல் அளவு கடந்த ஆவல் கொள்வதற்குக் காரணமாய் அமைந்த சூழலைச் சம்பந்த முதலியார் விளக்குகிறார்.

    ‘தம் தாயார் புராணங்களில் இருந்து புதிய புதிய கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். குறிப்பாக இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் ஆகியவற்றிலிருந்து புதுப்புதுக் கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார்.

    தம் தந்தை தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை வேண்டிய அளவு வாங்கி வைத்திருந்ததால் அவற்றை வீட்டில் இருந்தவாறே படிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்பட்டிருந்தன.

    ஆந்திரநாடகப் பிதாமகன் என்று அழைக்கப்பட்டவர் பல்லாரி வெ. கிருஷ்ணமாச்சார்லு. அவர் தம் சரசவினோத சபை சார்பில் சென்னையில் தெலுங்கு நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்தைத் தம் தந்தையாருடன் சென்று பார்த்து ரசித்தார். அதுதான் தாம் தமிழ் நாடகத்தை எழுதுவதற்குத் தூண்டிய நிகழ்ச்சி’ என்று தம் நூலில் கூறுகிறார்.

    தமிழ் நாடகங்களை எப்போது எழுதத் தொடங்கினாரோ அன்றிலிருந்து தம் இறுதிக் காலம் வரை கலைப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருந்தார் சம்பந்த முதலியார்.

    1)
    பம்மல் சம்பந்த முதலியாருக்கு இராவ்பகதூர் பட்டம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
    2)
    பம்மல் சம்பந்த முதலியார் எந்தக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்?
    3)
    பம்மல் சம்பந்த முதலியார் நிறுவிய நாடக சபையின் பெயர் என்ன?
    4)
    சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
    5)
    மனோகரா எத்தனை ஆண்டுகள் நாடக மேடையில் செல்வாக்குச் செலுத்தி இருக்கிறது?
    6)
    ஆந்திர நாடக உலகத்தின் பிதாமகன் யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 29-08-2017 12:09:49(இந்திய நேரம்)