தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிற்பியின் கவிதைகள்

 • 4.3 சிற்பியின் கவிதைகள்

  கல், மரம் இவற்றை உளியால் செதுக்கி அழகிய சிலைகளை வடிப்பவனைச் சிற்பி என்கிறோம். மண், பாரீஸ் பிளாஸ்ட்டர் போன்ற குழைவுப் பொருள்களால் அழகான உருவங்களைச் செய்பவனையும் சிற்பி என்போம்.

  சிற்பக் கலை என்பதே தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற பகுதிகளைச் செதுக்கித் தள்ளுவது தானே? கவிஞன் என்னும் சொற்சிற்பி படைக்கும் உலகம் மிக அழகாக இருக்கிறது. மிகச் சரியானதாக இருக்கிறது. குறைகள் அற்றதாக இருக்கிறது. உண்மை உலகம் தன் குறைகளைப் பார்த்துப் பார்த்து நீக்கிக் கொள்ள வழிகாட்டும் ஒரு ‘மாதிரி’ உலகமாக ஆகிவிடுகிறது.

  கவிஞர் சிற்பி, அழகு உணர்ச்சியும், உயர்ந்த ஒழுக்கமும், தூய்மையும், மனித நேயமும், சொல்லை ஆளும் வல்லமையும் படைத்த நல்ல மனிதர். இதனால் இவர் படைக்கும் உலகம் குறைகள் இல்லாத தூய உலகமாய் இருக்கிறது. அதனுள் நுழையும் நமது குறைகளையும் நீக்குகின்ற மாய உலகமாய் இருக்கிறது. அதனுள் நுழைவோம் வாருங்கள்.

  4.3.1 மனித நேயத்தின் சிறப்பு

  அழகு எதில் இருக்கிறது?

  முன்னோர்கள் கவிதைக்கு இலக்கண மரபு வகுத்தது போல், அழகுக்கும் இலக்கணம் வகுத்து வைத்து விட்டனர்.

  அவளுடைய உடல் அழகை முடிமுதல் அடிவரை வருணனை செய்வது கவிஞர்களின் திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு. அவள் உடல் மலர்போல் மெல்லியது; பொன்போல் சிவந்த நிறம் கொண்டது; நிலாமுகம்; தாமரை முகம்; பிறைநெற்றி; கயல் விழிகள்; முத்துப் பற்கள்; பவள இதழ்; மேகம் போன்ற கூந்தல்; மிக மெல்லிய இடை; நூலை விட இளைத்த அந்த இடை தலையில் சூடும் ஒரு பூவைக் கூடச் சுமையாக உணரும்; அந்தப் பூவில் தேன் உண்ண வரும் வண்டின் சிறகு அசையும் போது வீசும் சிறு காற்றைக் கூடப் புயல்போல் உணர்ந்து தாங்காமல் தளரும் !

  அவளது பாதங்கள்தாம் எவ்வளவு மென்மை !

  உலகிலேயே மிக மெல்லியவை அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் மெல்லிய இறகும். அவை பட்டால் கூட அவள் பாதங்கள் நெருஞ்சி முள் தைத்தது போலப் புண்பட்டு இரத்தம் வடிக்குமாம் !

  இந்த வகையான கற்பனைகள், கருத்துகள் எதைக் காட்டுகின்றன? சிறிது சிந்தியுங்கள். ஆண், தன் ஆசையையே பெண்ணின் அழகாகக் காண்கிறான். பெண்ணைப் போகப் பொருளாகக் காண்கிறான். இந்த இலக்கணங்கள் அமையாத பெண், மரபான பார்வையில் அழகி இல்லை.

  மனிதன் செல்வ வளத்தில் வளர வளர அவனுக்குள் ஒரு பணக்காரத்தனம் வந்துவிடுகிறது. அது அவனது கருத்துகளிலும் படிந்து விடுகிறது. பொருளாதாரத்தில், சாதிப் பிறப்பில், நிறத்தில் தனக்குக் கீழே தங்கிவிட்ட எவரையும் தாழ்வாக எண்ணுகிறான். இதை ‘மேட்டுக்குடிக் கருத்தாக்கம்’ என்பர்.

  நண்பர்களே, அழகியல் பற்றிய ‘மேட்டுக்குடிக் கருத்தாக்கம்' தான் மேலே நாம் கண்ட ‘அழகிய பெண்’ பற்றிய கருத்தும். இந்தத் தவறான கருத்தாக்கத்தை உடைத்து, உண்மையான அழகு எது என்று சமூகத்துக்குக் காட்ட வேண்டும். சிற்பி அதைத் தம் கவிதையில் செய்கிறார்.

  • உண்மையான அழகு

  கூலிக்காரி (சிரித்தமுத்துக்கள்) கவிதையைப் படியுங்கள்.

  கூலிக்காரி லெட்சுமி கட்டட வேலை செய்யும் சிற்றாள். பழைய துணியைச் சுருட்டித் தலையில் வைத்து, அதன்மேல் இரும்புச் சட்டியை வைத்திருக்கிறாள். அதில் நிறையக் கனமான கல்லும் மண்ணும். தாங்க முடியாத பசியைத் தாங்க உணவு வேண்டும். அதைத் தேட உழைப்பவள் அவள்; அதனால் அவளது ‘இடை’ இந்தக் கனமான சுமையை நாள் முழுதும் தாங்கும் வன்மையான இடை.

  கால் கடுக்கிறதே என்று சில நிமிடங்கள் ஓய்ந்து நின்றாலும் கொத்தனார் திட்டுவார். அதனால் ஓய்வே இல்லாமல் அவளது பாதங்கள் காரைச் சுண்ணாம்பிலும் கல்லிலும் நடக்கும். கொப்புளம் கண்டாலும் தாங்கிக் கொள்ளும்.

  கறுத்த உடல்தான். ஒரு சிறு தங்கத் தோடு தவிர உடம்பில் அலங்கார அணிமணிகள் இல்லை. தலையில் பூக்கூட இல்லை, புழுதிதான். இவளிடம் தான் உண்மை அழகு சிரிக்கிறது. அழகையே படைக்கும் உழைப்பின் அழகு அது. சிற்பி இதைக் காண்கிறார். நமக்குக் காட்டுகிறார் :

  இழுத்துக் கட்டிய முக்காட்டின் மேல்
  தெருப் புழுதியின் பூச்சு - கொஞ்சம்
  இங்கும் அங்கும் பார்த்து நின்றால்
  கொத்தனாரின் ஏச்சு !

  பார்வைக் கணைகள் பட்டுக் கிழிந்த
  பழைய ரவிக்கைக் கந்தல் - அவள்
  வேர்வை மணக்கும் மார்பின் சரிவை
  மூடும் சேலைப் பந்தல்

  துணுக்குத் தங்கத்தை இணுக்கி வைத்த
  தோட்டில் வறுமை சிரிக்கும் - அவள்
  முணுமுணுத்திடும் தெம்மாங்கு இசைக்கு
  முத்தமிழ் முந்தி விரிக்கும்
  இழைத்த கறுப்பில் குழைத்த மேனி
  லெட்சுமி சிற்றாள் கூலி - அவள்
  உழைக்கும் கரத்தைப் பற்றிடும் காளை
  உண்மையில் புண்ணிய சாலி !

  வறுமையால் கிழிந்து பழந்துணி ஆகிவிட்டது அவளது சட்டை. அந்தக் கிழிசல்கள் காமப் பார்வை பார்ப்பவர்களின் பார்வை அம்புகளால் ஏற்பட்டவை என்கிறார். ஓயாத வேலையின் இடையிலும் சேலையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் அவளது மான உணர்வைப் போற்றுகிறார்.

  பெயர் இலட்சுமி, திருமகள். மேட்டுக்குடிக் கருத்தாக்கத்தில் செல்வச் செழுமைக்குக் கடவுள். இவளோ, வறுமையின் வடிவமாக இருக்கிறாள். ஒரு முரண் அழகு. சிற்பியின் மனித நேயக் கருத்தாக்கத்தில் இவள்தான் திருவின் செல்வி; இவள்தான் அழகி.

  இந்தக் கூலிக்காரி வறுமையைக் கண்டு அழும் கோழை அல்ல. அவளது சின்னத் தோட்டில் வறுமை சிரிக்கிறது. இந்த வறுமையின் செல்வி - இலட்சுமி முணுமுணுக்கும் தெம்மாங்குப் பாட்டின் இனிமையைப் பிச்சையாகக் கேட்டு,இயல், இசை, நாடகம் என்னும் மரபான முத்தமிழும் முந்தானையை விரிக்கின்றன. இது, ‘புதுக்கவிதை என்பது என்ன?’ என்ற கேள்விக்குத் தக்க விடையாகவும் அமைகிறதல்லவா?

  கடவுளை அடைபவன் புண்ணியசாலி அல்ல. இவள் காதலை அடைபவன்தான் புண்ணியசாலி என்கிறார் சிற்பி. உழைக்கும் மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார். இதுதான் சிற்பியின் அழகியல்.

  “மரபு - இலக்கணம் கற்றவன்; இலக்கியம் அறிந்தவன் நான். எனவே இலக்கிய உலகமே எனக்குத்தான் உரிமை” என்பதும் கூட ஒருவகை மேட்டுக்குடிக் கருத்தாக்கம்தான். இலக்கியத்தை மக்களிடம் மீட்டு வருவதற்கு, இதை உடைக்க வேண்டும். புதுக்கவிதை இதைத்தான் செய்கிறது.

  • சிற்பியின் புரட்சி

  எனவே புதுக்கவிதை என்பது மொழியின் வரம்பை, கட்டுப்பாட்டை உடைப்பது அல்ல. மொழிக்குள் இயங்கும் மேட்டுக்குடி மனப்போக்கை உடைப்பதுதான்.

  இந்தப் புரட்சியை ஒரு மரபுக் கவிதையைக் கொண்டு செய்கிறார் சிற்பி. மேற்காட்டிய கவிதை, சந்தப் பாட்டாக, யாப்பு வடிவில் இருந்தாலும் புதிய பார்வையால், புதுக்கவிதை என்ற தகுதி பெறுகிறது.

  • கவிஞரின் தாஜ்மகால்

  தாஜ்மகால், ஒளிப்பறவை என்னும் நூலில் உள்ள அழகிய கவிதை. தாஜ்மகாலை உலகத்தின் ஏழாவது அதிசயம் என்பர். அது காதலின் அழகுச் சின்னம். உலகக் கவிஞர்கள் பலரும் அதைக் கவிதைகளால் அலங்கரித்து உள்ளனர். சிற்பியும் தமிழில் புனைந்து பாடுகிறார் :

  வாடாத வெள்ளைத் தாமரை
  மேகம் தொட்ட மோக மொட்டு
  பால்இடைக் குளிக்கும் பளிங்கு மண்டபம்.....
  ஆசையின் மடியில் ஷாஜஹான்
  அள்ளி இறைத்த வெள்ளிக் காசு
  யமுனையின்,
  நீலக் கூந்தலில் நிகர்இல்லா வைரம்......

  எனப் பலவாறு உருவகங்களை அடுக்கிப் பாராட்டுகிறார். சட்டென்று உலகின் இருப்பு (எதார்த்தம்) நிலைக்குப் பார்வையைத் திருப்புகிறார். பெரும் செல்வர்க்கு மட்டும்தான் காதல் உரிமையா? கலைகள் உடைமையா? தாமும் தாஜ்மகால் கட்டியதுண்டே ! ஷாஜஹானின் தாஜ்மகாலை விடப் பன்மடங்கு அழகான தமது தாஜ்மகாலை நினைவு கூர்கிறார்.

  ஓ ! நான் காதலிக்கு மனதில்
  கட்டி முடித்ததும்
  மாது சலித்ததும்
  நானே இடித்ததும்
  இதனைக் காட்டிலும்
  மதுரக் கோபுரம்
  இதனைக் காட்டிலும்
  அதிசயக் காவியம்

  (பால்இடைக் குளிக்கும் = நிலவின் பால்போன்ற ஒளியில் குளிக்கும்; மாது சலித்தது = பெண் தனக்குப் பிடிக்கவில்லை என்று ஏற்க மறுத்தது; நிகர்இல்லா = ஒப்பு இல்லாத)

  ‘மனத்தில் இதைவிட இனிமையாய், அழகாய்க் கட்டினேன். காதலிக்குப் பிடிக்கவில்லை. இடித்து விட்டேன்’ என்று சொல்கிறார். என் காதல் எதையும் விட உயர்ந்தது; ‘என்னால் முடியும்’ என்னும் தன்னம்பிக்கை அதையும்விட உயர்ந்தது என உணர்த்துகிறார். இயலாதவன் செய்யும் கற்பனையை மனக்கோட்டை என்பார்கள். அந்த மரபுத் தொடரை அர்த்தம் அற்றதாய் ஆக்குகிறார். மனக்கோட்டைதான் மனத்தின் காதல் விரிவை, கற்பனை ஒளியை உண்மையாய்க் காட்டுகிறது. ஒரு புதுமை பிறக்கிறது.

  4.3.2 இயற்கை

  இயற்கைதான் அனைத்துக்கும் தாய். அவளுக்கு உள்ளிருந்து பிறந்து அவள் மடியிலேயே வளர்ந்தவன் மனிதன். வளர்ந்த போது ‘செயற்கை’ என்ற பெண்ணின் காதலுக்குள் தள்ளப்பட்டான். தாயைப் புறக்கணித்தான். தன்னையும் சூழலையும் கெடுத்துக் கொண்டான். உலகில் இன்று இயற்கையின் மாறுபாட்டால் எத்தனையோ தொல்லைகள். இப்போது சுற்றுச்சூழல் பற்றிக் காலம் கடந்த பின் சிந்திக்கிறான். அதைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பற்றிப் பல மேடைகளிலும் பேசப்படுகிறது. இயக்கங்கள் நடத்தப் படுகின்றன.

  • கவிஞனும் இயற்கையும்

  கவிஞன் என்றும் இயற்கையின் குழந்தைதான். ஒரு பூ உதிர்ந்தால் அவன் நெஞ்சுக்குள் பூகம்பம் ஏற்படுகிறது. ஒரு மரம் வெட்டப்பட்டால் அவனது ஆன்மாவில் இரத்தம் கொட்டுகிறது.

  சிற்பியின் இறகு நூலில் உள்ள இறகு என்னும் கவிதையைப் பாருங்கள்.

  பார்த்ததே இல்லை
  எனினும்
  கேட்டதுண்டு
  காலம் இல்லை நேரம் இல்லை
  அந்திகளில் கருக்கு இருட்டில்
  நண்பகலில் மாலைகளில்
  வேளை இன்னது என்றில்லை
  மெய்சிலிர்க்க வைத்த குரல்.....

  கோடைகளில் கொப்பளித்து
  மழைக்குப் பொத்தல் குடைஆகும்
  என்வீட்டின் மேற்குப் புறத்தில்
  இன்னொருவர் நிலத்தில்
  ஒரு பச்சைப் பிரளயம்போல்
  நிற்கும் வேப்ப மரம்

  என் கூரையின்மேல் நிழல்தூவும்
  குளிர்காற்றைத் தூதுவிடும்
  சிலபோது
  மனதைக் கவ்வும் ஒரு மாயமாய்
  ஏகாந்தப் புல்லாங் குழலாய்
  இலை அடர்த்திக்கு உள்ளிருந்து
  கூவி இழுக்கும்
  ஒரு குயிலின் குரல் தூண்டில் !


  மகளுக்குத் தலைசீவிப் பேன்பார்க்க, மகனுக்குப் பாடம் சொல்ல, கதை சொல்லிச் சோறு ஊட்ட, அக்கம் பக்கத்துப் பெண்களுடன் ஊர்ச் செய்தி பேச - இவர் மனைவிக்கு இந்த மர நிழல்தான் உரிமையான தாய்வீடு. கவிஞரின் பாட்டுக்குக் குடியிருப்பு.

  • பிள்ளைகளின் அழுகை

  வெளியூர் போனார். மூன்று நாட்கள் பயணம் முடிந்து வீடு திரும்பினார். வீட்டில் துயரமான சூழல். பிள்ளைகள் அழுகின்றன. “நிலத்துக் காரங்க வெட்டித் தள்ளிட்டாங்க”. செய்தி கேட்டுத் துடிக்கிறார்.

  பதைக்கப் பதைக்க ஓடினேன்
  பச்சைச் சமுத்திரம்
  அலைபாய்ந்த இடத்தில்
  வெட்டவெளி, வெறும் பரப்பு

  என்நிழல் என்உயிர்க்காற்று
  என்ஆன்ம சங்கீதம்
  சுள்ளிகள் உலர்ந்த இலைகள்
  மரத்துணுக்குகள் .......
  வெட்டப்பட்ட அடிமரம்
  பூமியின் காயமாய்
  விரிசல் விட்டுக் கிடந்தது

  பாழ்வெளியில் அதன்
  பக்கத்தில் உட்கார்ந்தேன்
  எங்கிருந்தோ ஓடிவந்த மகள்
  “இதைப் பாருங்கப்பா”
  என்று கையில் கொடுத்தாள்

  கருமை பளபளக்கப்
  பழுப்பு அலைபாயும்
  ஓர் இறகு


  இக்கவிதையைப் படித்து முடித்ததும், நம் மனம் கசிகிறது.

  ஒரு மரம் செத்துவிட்டது. அதற்கு அழும் கவிக்குடும்பத்தோடு நாமும் சேர்கிறோம், துக்கம் கொண்டாட !

  • மரமா செத்தது?

  ஒரு மரம் மட்டுமா செத்தது? ஒரு நிழல் செத்தது. குளிர்ச்சி செத்தது. மனிதன் பறவை என்று பேதம் பார்க்காத ஓர் இயற்கை வீடு செத்தது. தூய்மையான உயிர்க்காற்றை வழங்கிவந்த மூச்சுப்பை செத்தது. கண்களில் குளிர் அலைவீசிய பசுமைக் கடல் செத்தது. அமர்ந்து பாட்டெழுதும் ஒரு கலைக்கூடம் செத்தது. தன் மகனான கவிஞனுக்குத் துன்ப நேரங்களில் ஆறுதல் தர ‘அன்னை இயற்கை’ வைத்திருந்த இசை மேடை செத்தது.

  இதனால், கவிஞரின் கண்களுக்கு மரம் இருந்த இடம் எப்படித் தோற்றம் தருகிறது பாருங்கள் :

  ஒரு பச்சைக் கடல் இருந்து, காய்ந்து உலர்ந்து ஆவியாகிவிட்டது; அதன்பின் மிஞ்சியுள்ள வெறும் மணல் பரப்பாக அந்த இடம் தோன்றுகிறது. அவரது நிழல், உயிர்க்காற்று, ஆன்ம சங்கீதம் இவைதாம் அங்கு உதிர்ந்து சுள்ளிகளாய், உலர்ந்த இலைகளாய், மரத்துண்டுகளாய்ச் சிதறிக் கிடக்கின்றன. வெட்டப்பட்ட அடிமரம் பூமியின் புண்ணாய் வலியோடு விரிந்திருக்கிறது.

  மரம் இருந்த இடம் வெட்ட வெளியாகி விட்டது. ஒரு மரத்தின் சாவில் உலகத்தையே பாலை வெளியாக்கும் ‘இயற்கை அழிவு’ காட்டப்பட்டு விட்டது. ஒரு மனித மனத்தின் பதைப்பில் (துடிப்பில்) உலகத்தின் துடிப்பே உணர்த்தப்பட்டு விட்டது.

  இதுதான் கவிதை. ஓர் உயர்ந்த கவிதை இப்படித்தான் உணர்வின் துடிப்பாக இருக்கும்.

  இதில் உச்சமான உணர்வுநிலை எது? நண்பர்களே, கொஞ்சம் உற்று நோக்குங்கள் :

  கவிஞர் அந்தக் குயிலை நேரில் பார்த்துக் கொண்டதில்லை. கேட்கும் புலன் வழியே உணர்வு ஒன்றியது. இயற்கையாய் உருவாகி இருந்தது ஒரு நட்பு, ஒரு நேயம்! அது செத்துவிட்டது.

  மரக்கிளைக் குயிலுக்கும் கவிஞன் என்னும் மானுடக் குயிலுக்கும் இருந்த இசைமயமான நட்பு, அது செத்து விட்டது. எவ்வளவு பெரிய இழப்பு? எத்தனை பெரிய வருத்தம் ! இன்னும் எத்தனை வருத்தங்கள்......

  இயற்கையை அழித்துக் கொண்டே இருக்கும் தன் சகோதர மனிதனின், ‘மனிதத் தன்மை’ இறந்ததற்கு வருத்தம்.

  குயில் நண்பன் வீடு இழந்ததற்கு வருத்தம்.

  மனிதன் பூமியை எங்கே தள்ளிக் கொண்டு போகிறான்? பயிர் இனம் உயிர் இனம் எல்லாம் அழியும் ‘பாழ்வெளி’ நோக்கியா?

  • குயில் இறகு

  குழந்தை, தன் பிஞ்சுக் கையில் எடுத்து வந்த குயில் இறகு, உதிர்ந்த இறகு. மெல்லிய இறகு, ஒரு வலிமையான எச்சரிக்கையின் சின்னம் ஆகிறது. என்ன எச்சரிக்கை?

  உலகம் மட்டும் அல்ல. ஒவ்வோர் உள்ளமும் ஈரம் வற்றி வறண்டு அழியப் போகிறது. மென்மை என்ற தன்மையே வேர்இன்றிக் கருகப் போகிறது. பூமி அன்பில்லாத ஒரு பாலை நிலமாக மாறி வருகிறது. இதை மனிதனுக்கு நினைவூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்க ஓர் அடையாளம், குறியீடு தேவை. குயில் இறகு அந்தக் குறியீடு ஆகிறது.

  குழந்தைகள் நினைவுச் சின்னமாகப் புத்தகத்தில் மயில் இறகை வைப்பார்கள்; அது ‘குட்டி’ போடுமாம்.

  கவிஞர் சிற்பி புத்தகத்தில் குயில் இறகு வைத்திருக்கிறார், நம் மனத்தில் அது ‘இயற்கையை நேசி’ ‘இயற்கையைப் போற்று’ என்னும் மென்மையான எண்ணங்களைக் குட்டிகளாய் (குஞ்சுகளாய்)ப் பெற்றெடுக்கட்டும் என்று !


  தன்மதிப்பீடு : வினாக்கள் - I

  1)
  புதுக்கவிதை படைப்பதில் சிற்பியின் தனிவழி எது?
  2)
  சிற்பி எழுத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?
  3)
  சிற்பியின் பார்வையில் உண்மை அழகு எது? அழகிய பெண் யார்? ?
  4)
  இயற்கையின் அழிவைத் தடுக்க விழிப்பு உணர்ச்சி ஊட்டும் சிற்பியின் கவிதை எது?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:28:08(இந்திய நேரம்)