தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிற்பியின் இனிய கவிதை

 • 4.5 சிற்பியின் இனிய கவிதை

  நண்பர்களே எளிமையும் இனிமையுமே எப்போதும் அழகு ! சிற்பியின் எழுத்துகள்தாமே நம்மோடு அவர் பேசும் பேச்சு? அவை அந்த மனிதரின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. அந்த எழுத்துகள் அவரது முகம் ஆகின்றன. புன்னகை ததும்பும் இனிய முகம். அவரே அவரது கவிதை ஆகிவிடுகிறார்.

  நகைச்சுவை நடையில் மிகுதியாய் எழுதுவார். கன்னியா குமரி தமிழ்நாட்டின் தெற்கு எல்லை. உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் இந்த இடத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். முக்கடல் சேரும் இடத்தில் சூரியனின் எழுச்சி - வீழ்ச்சி பார்க்கவே பலரும் வருகின்றனர். ஆனால் வணிகம் செய்து வயிறு வளர்ப்பவர்கள் கடற்கரையையே மறைத்துக் கட்டடங்கள் எழுப்பிவிட்டனர் நகைப்புக்கு இடமான மடமை இது. ஒரே சொல் தொடரில் இதை நகையாடுகிறார் சிற்பி -

  விரி கடலை மறைக்கும்
  பொரி கடலைச் சந்தைகள் (கன்னியாகுமரி - இறகு)

  இந்தத் தடைகளைத் தாண்டிச் சூரியன் காட்சி அளிப்பதற்குள் பொழுது ஏறிவிடுகிறது. சூரியன் எப்படி இருக்கிறான்? ‘முற்றிப்போன சூரியன்’ - என்பது அழகான சொல்லாட்சி.

  • குழந்தைக்கு அறிவுரை

  குழந்தைப் பாடல் தொகுப்பு வண்ணப்பூக்கள். பிள்ளை மனத்தின் குறும்புப் பேச்சை இந்த நூலில் கேட்கலாம்.

  ‘பூனை குறுக்கே போனால் ஆகாது’ என்ற மூடநம்பிக்கையைக் குறும்புப் பேச்சால் களைகிறார் -

  பூனை குறுக்கே
  போனதற்கு ஏன் தயக்கம்? - பால்
  பானை தேடி
  அதுவும் போய் இருக்கும்
  தேவை இல்லை மயக்கம் - நம்
  வேலை எத்தனை சுணக்கம்?


  (சுணக்கம் = தாமதம்)

  • உவமைப் புதுமை

  உவமை, உருவகம், சொல் ஓவியமான படிமம் இவற்றைச் சிற்பி ஆளும் திறனை அறிய, நாம் முன்னால் கண்ட முன்னுரை, தாஜ்மகால் ஆகிய கவிதைகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

  பேருந்துக் கூட்டத்தில்
  அகப்பட்ட இளம்பெண்
  யாரோ தொட்டதும்
  சீறிச் சினத்தல் போல்
  சிவந்து சுரீல் எனச்
  சீறியது தீக்குச்சி (இரவு - இறகு)


  உரசியதும் தீக்குச்சி தீப்பற்றுவதற்குப் புதிய உவமை கூறியுள்ளார்.

  சிற்பியின் சிறந்த கவிதைகள் பற்றி நிறைய எழுதலாம். இந்தப் பாடத்தில் இடம் இல்லை. ‘சர்ப்பயாகம்’ நூலில் உள்ள முள்...முள்..முள் என்னும் கவிதையைப் படித்து இவரது புதுமைச் சிந்தனைகளைச் சுவையுங்கள். மலர்கள் என்னும் கவிதையில் அழகுணர்ச்சியை அனுபவியுங்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 18:15:57(இந்திய நேரம்)