தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1:2-சிற்றிலக்கிய வகைகள்

 • 1.2 சிற்றிலக்கிய வகைகள்

  இப்போது தமிழ்மொழியில் உள்ள பல்வேறு வகையான சிற்றிலக்கியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1.2.1 பொருள் அடிப்படை

  இலக்கியத்தில் உள்ளடக்கமாக உள்ள அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் சிற்றிலக்கியங்களை அகப்பொருள் சிற்றிலக்கியங்கள், புறப்பொருள் சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தலாம். தூது, கோவை முதலியன அகப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கும், பிள்ளைத் தமிழ், பரணி போன்றவை புறப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கும் சான்றுகள் ஆகும்.

  நிகழ்வுகள், செயல்கள் அடிப்படை

  அகம், புறம் என்னும் இவ்விருவகைப் பொருள்களிலும் உள்ள துறைகளைத் (தனித்தனி நிகழ்வுகள் அல்ல செயல்கள்) தனித்தனியே கொண்டு சிற்றிலக்கியங்கள் அமைவது உண்டு. பாட்டுடைத் தலைவனிடம் தூது விடுவதாகப் பாடுபொருள் அமைவது தூது இலக்கியம் எனப்படும். பாட்டுடைத் தலைவன் உலா வருதலாகப் பாடுபொருள் அமைவது உலா இலக்கியம் எனப்படும். பாட்டுடைத் தலைவனைத் தூக்கத்திலிருந்து எழவேண்டுவதாகப் பாடுபொருள் அமைவது பள்ளி எழுச்சி இலக்கியம் எனப்படும். பெண்கள் ஆடும் ஊசல் விளையாட்டில் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடுவது ஊசல் இலக்கியம் எனப்படும்.

  • பிற கருத்துகள் அடிப்படை

  பாடு பொருளாகப் பக்திக் கருத்துகளையும், தத்துவக் கருத்துகளையும், நீதிக் கருத்துகளையும் கொண்டு அமையும் சிற்றிலக்கியங்கள் உண்டு. பரணி இலக்கியத்துள் ஒன்றான மோகவதைப் பரணி வழக்கமான பரணி இலக்கியம்போல் அல்லாமல் தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியிருப்பது.

  1.2.2 எண்ணிக்கை அடிப்படை

  நூலில் இடம்பெறும் பாடல் எண்ணிக்கையின் அடிப்படையிலும் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம்.

  ஐந்து பாடல்களைக் கொண்ட இலக்கியம் பஞ்சகம் என்றும், பத்துப் பாடல்களைக் கொண்ட இலக்கியம் பத்து, பதிகம் என்றும், நூறு பாடல்களைக் கொண்ட இலக்கியம் சதகம் என்றும் அழைக்கப்படுவதை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

  1.2.3 புகழ்தல் அடிப்படை

  உடல் உறுப்புகளைப் புகழ்ந்து பாடுதலை அடிப்படையாகக் கொண்டும், மக்களைப் புகழ்ந்து பாடுதலை அடிப்படையாகக் கொண்டும் சிற்றிலக்கியங்கள் தோன்றின.

  உறுப்புகளைப் புகழ்தல்

  உடல் உறுப்புகளைப் புகழ்ந்து பாடுதல் என்ற அடிப்படையிலும் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம்.

  உறுப்புகளைப் பொதுவாகப் புகழ்ந்து பாடும் இலக்கியம் அங்க மாலை ஆகும். தலை முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் கேசாதி பாதம் ஆகும். பாதம் முதல் தலை வரை உள்ள உறுப்புகளைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பாதாதி கேசம் ஆகும். பெண்களின் கண்களைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் நயனப் பத்து எனப்படும்.

  அரசனின் குடை, கொடி, முரசு, தேர், யானை, படை, குதிரை, செங்கோல், நாடு, நகரம் முதலிய பத்து உறுப்புகளைப் பாடும் அடிப்படையில் எழுந்த சிற்றிலக்கியங்களை இந்த வகையில் அடக்கலாம். சான்றுகளாகத் தசாங்கம், தசாங்கப் பத்து, தசாங்கத்தயல், சின்னப்பூ முதலிய இலக்கியங்களைக் கூறலாம்.

  மக்களைப் புகழ்தல்

  ஆடவர் அல்லது பெண்களைப் புகழும் நோக்கில் இயற்றப்பட்ட சிற்றிலக்கியங்களையும் தனியாக வகைப்படுத்தலாம்.

  ஆடவர்களைப் புகழும் நோக்கில் இயற்றப்பட்டது நாம மாலை என்ற சிற்றிலக்கிய வகையாகும். பெண்களைப் புகழும் நோக்கில் இயற்றப்பட்டவை புகழ்ச்சி மாலை, தாரகை மாலை என்ற இலக்கிய வகைகள் ஆகும்.

  1.2.4 யாப்பு அடிப்படை

  நூலை இயற்றுவதற்குப் பயன்பட்ட யாப்பின் அடிப்படையிலும் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம். அந்தாதி, வெண்பா, இன்னிசை, நேரிசை, அகவல் முதலான இலக்கிய வகைகளை இவ்வகையுள் அடக்கலாம்.

  1.2.5 சொல் முடிபு அடிப்படை

  நூற்பெயரின் இறுதிச் சொல்லை அடிப்படையாகக் கொண்டும் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம்.

  வேனில் மாலை, காப்பு மாலை முதலியவற்றை மாலை இலக்கிய வகை என்று கூறுவதைச் சான்றாகக் காட்டலாம்.

  1.2.6 நாட்டுப்புற இயல் அடிப்படை

  நாட்டுப்புற விளையாட்டுகளையும், நாட்டுப்புற இலக்கியங்களையும் அடிப்படையாகக் கொண்டு சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம்.

  ஊசல், அம்மானை போன்ற இலக்கியங்கள் நாட்டுப்புற விளையாட்டு அடிப்படையிலான சிற்றிலக்கியங்கள் என்றும், பள்ளு, குறவஞ்சி முதலியன நாட்டுப்புற இலக்கிய அடிப்படையிலான சிற்றிலக்கியங்கள் என்றும் வகைப்படுத்தலாம்.

  1.2.7 இசை அடிப்படை

  இசை அடிப்படையிலும், இசைநாடகம் என்ற அடிப்படையிலும் சிற்றிலக்கியங்கள் வகைப்படுத்தப்படும்.

  தெம்மாங்கு, கும்மி, சிந்து, கீர்த்தனை போன்ற இலக்கியங்கள் இசை அடிப்படையில் அமைந்தவை ஆகும்.

  இசையுடன் நடித்துக் காட்டுவதற்கு ஏற்ற வகையில் இயற்றப்பட்ட இலக்கியங்களாகப் பள்ளு, குறவஞ்சி முதலியன காணப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:28:38(இந்திய நேரம்)