தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1:4-சிற்றிலக்கியத்தின் சிறப்புகள்

 • 1.4 சிற்றிலக்கியத்தின் சிறப்புகள்

  சிற்றிலக்கியம் என்ற இலக்கிய வகையானது பெயரளவில் தான் சிறு இலக்கியம் என்ற பொருளைத் தருகின்றது. ஆனால், உண்மையில் இது பேரிலக்கியத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றுள், சிலவற்றைக் காண்போம்.

  சிற்றிலக்கியம் சங்க காலம் முதல் இன்று வரையிலும் தோன்றிக் கொண்டிருக்கும் நீண்ட வரலாற்றை உடையது.

  சிற்றிலக்கியம் என்பதில் முந்நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வகையிலும் நூற்றுக் கணக்கான நூல்கள் உள்ளன. எனவே, தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிலக்கியத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.

  சைவம், வைணவம், சமணம், கிறித்தவம், இசுலாம் எனப் பல்வேறு சமயத்தவர்களும் சிற்றிலக்கிய வகைகள் பலவற்றைப் படைத்துள்ளனர்.

  உவமை, உருவகம், கற்பனைச் சிறப்புகளால் பேரிலக்கியத்திற்கு இணையான நிலையில் திகழ்கின்றது.

  இறைவன், ஞானக்குரவர், மன்னன், வள்ளல், சாதாரண மக்கள் என அனைவரையும் பற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது.

  நாட்டுப்புற இலக்கிய வகைக் கூறுகள் பலவற்றைக் கொண்டு சாதாரண மக்களையும் கவரும் வகையில் உள்ளது.

  நாட்டின் சமுதாய, அரசியல், பண்பாட்டு வரலாறுகளை வெளிப்படுத்துகின்றது.

  இந்திய மொழிகள் பலவற்றிலும் காணப்படுவது. சான்றாகத் தூது இலக்கியம் வடமொழி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் காணப்படுவதைக் கூறலாம்.

  இவ்வாறு, சிற்றிலக்கியம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:28:45(இந்திய நேரம்)