தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2:1-குறவஞ்சி இலக்கியம்

  • 2.1 குறவஞ்சி இலக்கியம்

    சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது குறவஞ்சி என்ற இலக்கிய வகை ஆகும்.

    2.1.1 பெயர்க்காரணம்

    குறவஞ்சி என்பது குற+வஞ்சி என்று பிரியும். வஞ்சி என்றால் வஞ்சிக்கொடி போன்ற பெண் என்று பொருள். குறவஞ்சி என்பது குறவர் குலத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இந்த நூலில் குறத்தி குறி கூறுதல், குறத்தி குறவனுடன் உரையாடுதல், குறத்தியின் செயல்கள், குறி வகைகள் போன்றவை முதன்மை இடம் பெறுவதால் இந்த இலக்கிய வகை குறவஞ்சி என்ற பெயரைப் பெற்றுள்ளது என்று விளக்கம் அளிப்பர்.

    2.1.2 பெயர் பெறும் முறை

    குறவஞ்சி நூல்கள் பின்வரும் நிலைகளில் பெயர் பெறுவதை அறிய முடிகின்றது.

    இடத்தின் பெயரால் பெயர் பெறுதல்

    பாட்டுடைத் தலைவனின் ஊர்ப் பெயரால் சில நூல்கள் பெயர் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகத் திருக்குற்றாலக் குறவஞ்சியைக் கூறலாம். இந்நூலில் பாட்டுடைத் தலைவன் குற்றால நாதர். அவர் எழுந்தருளியுள்ள இடம் திருக்குற்றாலம். எனவே, இந்த இடத்தின் பெயரால் இந்த நூல் பெயர் பெற்றுள்ளது.

    பாட்டுடைத் தலைவன் பெயரால் பெயர் பெறுதல்

    சில குறவஞ்சி நூல்கள் பாட்டுடைத் தலைவனின் பெயரால் பெயர் பெறும் நிலையைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தியாகேசர் குறவஞ்சியைக் கூறலாம். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இறைவன் ஆகிய தியாகேசர் ஆவர்.

    இடம், தலைவன் பெயர் இரண்டாலும் பெயர் பெறுதல்

    வேறு சில குறவஞ்சி நூல்கள் பாட்டுடைத் தலைவனின் இடத்தின் பெயர், பாட்டுடைத் தலைவனின் பெயர் ஆகிய இரண்டினையும் பெற்றுப் பெயர் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகத் தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சியைக் கூறலாம். இந்த நூலில் பாட்டுடைத் தலைவர் பெயர் வெள்ளைப் பிள்ளையார். அவர் எழுந்தருளியுள்ள இடம் தஞ்சாவூர் எனப்படும் தஞ்சை ஆகும். எனவே இந்நூல் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது.

    தலைவியின் பெயரால் பெயர் பெறுதல்

    சில குறவஞ்சி நூல்கள் தலைவியின் பெயராலும் பெயர் பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. எடுத்துக்காட்டாகத் தமிழரசி குறவஞ்சியைக் கூறலாம். இந்த நூலின் தலைவியின் பெயர் தமிழரசி ஆகும்.

    குறத்தியின் பெயரால் பெயர் பெறுதல்

    சில நூல்கள் குறத்தியின் பெயரால் பெயர் பெற்றுள்ளதையும் அறிய முடிகின்றது. எடுத்துக்காட்டாகத் துரோபதைக் குறவஞ்சியைக் கூறலாம். இந்த நூலில் இடம்பெறும் குறத்தியின் பெயர் துரோபதை ஆகும்.

    2.1.3 தோற்றம்

    பிற சிற்றிலக்கிய வகைகளைப் போலவே குறவஞ்சி இலக்கிய வகைக்கும் உரிய கருக்கள் தொல்காப்பியத்திலும் பிற இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

    தலைவி தலைவன் ஒருவனைக் காதலிக்கின்றாள். அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்படுகின்றது. தலைவனைக் காணாததால் தலைவி மனம் வருந்துகின்றாள். உடலும் உள்ளமும் வாடிக் காணப்படுகின்றாள். தலைவியின் இந்த நிலையைச் செவிலித்தாயும் நற்றாயும் காண்கின்றனர். தலைவியின் இந்த நிலைக்கு உரிய காரணத்தை அறிய, கட்டு, கழங்கு, வெறியாடல் ஆகியன மூலம் குறிபார்க்கின்றனர். கட்டு என்பது முறத்தில் நெல்லைப் பரப்பி வைத்து, அந்த நெல்லை எண்ணிக் குறிபார்ப்பது ஆகும். தலைவியின் நோய்க்குக் காரணம் என்ன என்று அறிவதற்காக வேலன் குறிபார்ப்பது கழங்கு ஆகும்.

    சங்க இலக்கியத்திலும் குறிபார்த்தல் பற்றிய செய்திகள் இடம்பெறக் காணலாம்.

    பெருங்கதைக் காப்பியத்திலும் குறி சொல்லும் நிகழ்ச்சி இடம்பெறக் காணலாம். (உஞ்சைக் காண்டம், பாடல்கள் 235-238)

    பக்தி இலக்கியத்தில், திருவாய்மொழியில் நம்மாழ்வார் குறிபார்க்கும் பெண்ணைக் கட்டுவிச்சி என்கிறார். (பாடல் 6:3) சிறிய திருமடலிலும் குறிபார்க்கும் மரபு காட்டப்படுகின்றது.

    இவ்வாறு, இலக்கியம், இலக்கியக் கருக்களிலிருந்து குறவஞ்சி என்ற இலக்கிய வகையானது. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட குறவஞ்சி நூல்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.

    2.1.4 அமைப்பு

    இனி, குறவஞ்சி இலக்கிய வகையின் அமைப்பையும் அதில் இடம்பெறும் செய்திகளையும் சுருக்கமாகக் காணலாம்.

    பாயிரம்

    குறவஞ்சி நூல்களின் தொடக்கத்தில் காணப்படும் பகுதி பாயிரம் ஆகும். இப்பாயிரப் பகுதியில்,

    1) கடவுள் வணக்கம்
    2) தோடையம்
    3) நூல் பயன்
    4) அவையடக்கம்

    என்பன காணப்படும்.

    நூல் இனிதாக நிறைவடையும்படி ஆசிரியர் கடவுளை வேண்டி வணங்கும் பகுதி கடவுள் வணக்கம் ஆகும்.

    தோடகம் என்பது வடமொழிச் சொல். இதன் பொருள் நாடகச் சிறப்புப் பாயிரத்தின் முதல் பாடல் என்பது ஆகும். இது தான் தோடையம் என்று குறவஞ்சி நூல்களில் சுட்டப்படுகின்றது.

    அடுத்து, நூலைப் படிப்பதால் ஏற்படும் பயன்களை நூல் பயன் என்ற பகுதி குறிப்பிடும். நூலில் காணப்படும் குற்றம் குறைகளைப் பொறுத்து இந்த நூலைப் படிப்பவர்கள் நூலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆசிரியர் வேண்டுவதாக அவை அடக்கம் என்ற பகுதி அமையும்.

    • பாட்டுடைத் தலைவன் உலா வருதல்

    சில குறவஞ்சி நூல்களில் பாட்டுடைத் தலைவன் உலா வரும் செய்தி இடம் பெறுகின்றது. இப்பகுதியில் பாட்டுடைத் தலைவனின் தோற்றம், பண்பு நலன்கள், பெருமைகள், உலாவில் உடன் வருவோர்கள் என்பன விளக்கமாக வருணிக்கப்படும்.

    • உலாவைக் காணப் பெண்கள் வருதல்

    பாட்டுடைத் தலைவன் உலா வருகின்றான். அதைக் காண ஏழு பருவப் பெண்கள் வருவதாகக் காட்டப்படும். ஏழு பருவப் பெண்கள் பற்றிப் பின்னர்க் காணலாம்.

    உலா வரும் தலைவனைக் கண்ட பெண்கள் அவன் அழகில் மயங்குகின்றனர். காதல் கொள்கின்றனர். அவன் யாராக இருக்கும் என ஐயம் கொள்கின்றனர். இறுதியில் தலைவன் இவன் தான் என்று உறுதி கொள்கின்றனர்.

    • தலைவி பற்றிய செய்திகள்

    குறவஞ்சி நூல்களில் தலைவியின் பெயர்களின் இறுதியில் வல்லி அல்லது மோகினி என்ற சொல் காணப்படும். வசந்தவல்லி, செகன் மோகினி என்ற பெயர்களைச் சான்றுகளாகக் கூறலாம். தலைவி தலைவன் உலா வருவதைக் காண்கின்றாள். காதல் கொள்கின்றாள். காதல் காரணமாக மயங்கி விழுகின்றாள். அவள் தோழியர்கள் அவள் மயக்கத்தை நீக்க முயல்கின்றனர்.

    • தலைவி தோழியைத் தூது அனுப்புதல்

    தலைவனிடம் காதல் கொண்ட தலைவி தன் தோழியைத் தலைவனிடம் தூதாக அனுப்புகின்றாள். தலைவனை அழைத்து வர வேண்டும் இல்லை என்றால் அவன் அணிந்துள்ள மாலையையாவது வாங்கி வர வேண்டும் என்று கூறித் தோழியைத் தூது அனுப்புகின்றாள்.

    • குறத்தி வருதல்

    தலைவி அனுப்பிய தோழி தூது சென்று வருகின்றாள். வரும் போது ஒரு குறத்தியும் அவளுடன் வருகின்றாள். அவள் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து கொண்டே வருகின்றாள். இந்த இடத்தில் குறத்தியின் தோற்றம் வருணிக்கப்படும். குறத்தி தலைவியிடம் தன் நாடு, மலை ஆகியவற்றைப் பற்றியும் கூறுகின்றாள்.

    • குறி கூறுதல்

    தலைவி குறத்தியிடம் அவள் குறி கூறும் சிறப்புகளைப் பற்றிக் கேட்டு அறிகின்றாள். தனக்கும் குறி கூற வேண்டும் என்று தலைவி குறத்தியிடம் கேட்கின்றாள். குறத்தி தலைவிக்குக் குறி கூறுகின்றாள். தலைவி குறத்திக்குப் பரிசுகள் கொடுக்கின்றாள்.

    • குறவன் வருதல்

    குறத்தி தலைவியிடம் பரிசுகள் பெற்றுச் செல்கின்றாள். அப்போது குறத்தியின் கணவன் வருகின்றான். அவள் தன் மனைவியாகிய குறத்தியைப் பல இடங்களிலும் தேடிக் கொண்டு வருகின்றான். குறத்தியின் பிரிவால் மனம் வருந்திக் காணப்படுகின்றான். பல இடங்களிலும் தேடிய பின் குறவன் குறத்தியைக் கண்டு மனம் மகிழ்கின்றான். இருவரும் சேர்கின்றனர்.

    • வாழ்த்து, மங்கலம்

    நூலின் இறுதிப் பகுதியில் வாழ்த்துக் கூறுதல், மங்கலம் பாடல் ஆகிய பகுதிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு, குறவஞ்சி நூல்களின் அமைப்பை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:30:32(இந்திய நேரம்)