தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2:3-மடல் இலக்கியம்

  • 2.3 மடல் இலக்கியம்

    மடல் இலக்கியம் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கிய வகை ஆகும். இது காதல் குறித்த ஓர் இலக்கியம்.

    2.3.1 மடல் ஏறுதல்

    இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு மடல் என்று ஏன் பெயர் வந்தது என்று பார்ப்போம். தலைவன் தலைவியைக் காதலிக்கின்றான். எவ்வளவோ முயன்றும் தலைவனால் தலைவியை அடைய முடியவில்லை. எனவே தலைவன் தலைவியை அடைவதற்கு இறுதி முயற்சியாக மடல் ஏறத் துணிகின்றான். சில சமயம் மடல் ஏறவும் செய்கின்றான். எனவே, தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவதாகிய பாடு பொருளைக் கொண்ட இலக்கியம் ஆகையால் இதற்கு மடல் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

    விளக்கம்

    மடல் ஏறுதல் என்றால் என்ன என்பது பற்றி இனிப் பார்ப்போம்.

    பனை மரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.

    பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை (பீலி), பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் திருநீற்றைப் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் பிடித்திருப்பான். (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்.

    பயன்

    தலைவன் இவ்வாறு மடல் ஏறுவதால் என்ன பயன் உள்ளது? தலைவனின் துன்பத்தை ஊரிலுள்ளவர்கள் பார்ப்பார்கள். அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியைத் தலைவனிடம் சேர்த்து வைக்க முயல்வார்கள். இதனால், தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு உள்ளது.

    மேலும் தலைவனின் காமத்துயரம் நீங்க ஒரே வழி இது என்றும் கருதப்படுகிறது. எனவேதான் மடல் என்பதைக் காமம் ஆகிய கடலை நீந்துவதற்குரிய தெப்பம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. திருவள்ளுவரும்,

    காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
    மடல்அல்லது இல்லை வலி

    (திருக்குறள் - 1131)

    (உழந்து = முயன்று; ஏமம் = பாதுகாப்பு; வலி = வலிமை உடைய துணை)

    என்று கூறுகின்றார்.

    நம்பி அகப்பொருள் கருத்து

    நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூல் மடல் பற்றி இரு நிலைகளைக் கூறுகின்றது.

    (1) மடல் கூற்று (2) மடல் விலக்கு

    தலைவன் தலைவியை அடைவதற்காக மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூற்று என்கிறது. அவ்வாறு மடல் ஏற வேண்டாம் எனத் தலைவனை விலக்குவது அல்லது தடுப்பது மடல் விலக்கு என்கிறது.

    சங்க இலக்கியச் செய்திகள்

    சங்க இலக்கியங்களில், அக இலக்கியங்களில் மடல் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சான்றாகக் கலித்தொகை என்ற நூலில் மடலூர்தல் பற்றிய செய்தி இடம் பெறுகிறது (பாடல்-139).

    முதல் மடல் இலக்கிய வகை நூல்கள்

    இவ்வாறு, இலக்கண நூல்களிலும், இலக்கியங்களிலும் காணப்படுகின்ற மடல், மடல் ஏறுதல் பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு மடல் என்ற தனியான ஓர் இலக்கிய வகை தோன்றியது எனலாம். தமிழ்மொழியில் முதன் முதலில் தோன்றிய மடல் இலக்கியங்கள் திருமங்கையாழ்வார் பாடியவையே ஆகும். அவை சிறிய திருமடல், பெரிய திருமடல் என அழைக்கப்படுகின்றன.

    2.3.2 இலக்கிய மரபு

    மடல்ஏறுதல் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது. பெண்கள் மடல் ஏற மாட்டார்கள் என்பது மரபு ஆகும். காமம் காரணமாகப் பெண்களும் துன்பம் அடைவர். ஆனால், அவர்கள் மடல் ஏறுதல் என்பது இல்லை.

    இந்த மரபை வலியுறுத்தும் வகையில்,

    கடல்அன்ன காமம்உழந்தும் மடல் ஏறாப்
    பெண்ணின் பெருந்தக்கது இல்

    (திருக்குறள் : 1127)

    என்ற குறள் காணப்படுகிறது.

    (அன்ன = போன்ற; உழந்தும் = வருந்தியும்; பெருந்தக்கது = பெருமை மிக்கது; இல் = இல்லை)

    கடல் போன்ற மிகுந்த காமத்தால் துன்பம் ஏற்படும். அவ்வாறு துன்பம் வந்தாலும் பெண்கள் மடல் ஏறாது அதைப் பொறுத்துக் கொள்வர். எனவே, பெண்களின் பொறுமைபோல் பெருமை மிக்கது வேறு ஒன்றும் இல்லை என்பது இதன் பொருள் ஆகும்.

    2.3.3 மரபு மாற்றம்

    மடல் இலக்கிய மரபில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையைத் திருமங்கை ஆழ்வார் இயற்றிய சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய நூல்களில் காணலாம். இந்நூல்களில் தலைவனை அடையத் தலைவி மடல் ஏறப் போவதாகக் கூறுகிறாள். இங்கு, பெண்கள் மடல் ஏறுதல் இல்லை என்ற மரபில் மாற்றம் ஏற்படுவதைக் காணமுடிகின்றது.

    காரணம்

    இவ்வாறு, பெண்கள் மடல் ஏறுவதாக மரபில் மாற்றம் ஏற்படக் காரணம் என்ன என்று பார்ப்போம். திருமங்கை ஆழ்வார் வாழ்ந்த காலம் பக்தி இயக்கக் காலம் ஆகும். பக்திக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் கடவுளர்கள் தலைமை இடம் பெற்றனர். இறைவன் பெருமைகளையும், இறைவனிடம் தமக்கு உள்ள பற்றையும் புகழ்ந்து பாடினர். என்றாலும், பக்தி இலக்கியம் இயற்றிய சான்றோர்கள் தம் தமிழ் இலக்கிய மரபை விட்டுவிட விரும்பவில்லை. தம் இலக்கியங்களில் தமிழ் இலக்கிய அகப்பொருள் மரபையும் புகுத்த விரும்பினர். எனவே இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு பல பாடல்கள் பாடியுள்ளனர். இதைத் தலைவன் தலைவி பாவம் அல்லது நாயகன் நாயகி பாவம் என்பர். இவ்வகையில், நம் சங்க இலக்கிய அகப்பொருள் மரபுகளை, தொடர்ச்சியைப் பக்தி இலக்கியத்தில் பல இடங்களில் காண முடிகின்றது. பக்தி இலக்கியத்துள் சங்க இலக்கிய அகப்பொருள் மரபுகளைச் சில மாற்றங்களுடன் புகுத்த முயன்ற முயற்சியின் விளைவுகளுள் ஒன்றாக மடல் இலக்கியத்தைத் திருமங்கையாழ்வார் படைத்துள்ளார் எனலாம்.

    இறைவன் மீது எல்லை இல்லாத காதல் கொண்டுள்ளாள் தலைவி. தலைவனாகிய இறைவனை அடைவதற்குரிய முயற்சியாகத் தலைவி மடல் ஏறுவேன் என்று கூறுகின்றாள். இவ்வகையில் அமைந்த நூல்கள் சிறிய திருமடல், பெரிய திருமடல என்பனவாகும். எனவே, இலக்கணங்களில் பெண்கள் மடல் ஏறுதல் இல்லை என்ற மரபு மாறிப் பெண்களும் மடல் ஏறுவர் என்ற மரபு மாற்றம் ஏற்பட்டுள்ளது.இங்கு இடம்பெறுவது உலகியல் காதல் அல்ல. காமம் காரணமாகிய காதல் அல்ல. இங்கு இடம்பெறுவது பேரின்பக் காதல் ஆகும். எனவே, திருமங்கை ஆழ்வார் இவ்வாறு பாடியுள்ளார் எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:31:08(இந்திய நேரம்)