தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அமைப்பும் சிறப்பும்

  • காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி 101 பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலிலும் ஈற்றடியில் உள்ள இறுதிச் சொல் (அந்தம்) அடுத்த பாடலின் முதலடியில் முதல் சீராக (ஆதியாக) வருகின்ற அமைப்பைப் பெற்றுள்ளது. முதற்பாடலில் எஞ்ஞான்றும் தீர்ப்பது இடர் என்று முடியும் தொடரில் இடர் என்ற சொல் இடம் பெறுகின்றது. அடுத்த பாடல் ‘இடர் களையாரேனும்’ என்று தொடங்குகிறது.

    சைவநெறிக்கே அடிப்படையான அன்பு நெறி முதற் பாடலிலேயே வலியுறுத்தப்படுகிறது. எம் உள்ளத்தில் என்றும் அறாது அன்பு என்கிறார் காரைக்கால் அம்மையார். சைவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இவ்வந்தாதி வைக்கப்பட்டுப் போற்றப்படுகிறது.

    இறைவன் அம்மையாரை நோக்கி நீ நம்பால் இங்கு வேண்டுவது என் என்று வினவக் காரைக்கால் அம்மையார் என்ன வேண்டுகிறார் பாருங்கள்.

    இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
    அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க என்றார்.
    - (பெரியபுராணம், காரைக்கால் அம்மையார் புராணம்-60)

    தென்னாடுடைய சிவபெருமானை எந்நாட்டவர்க்கும் உரியவராக நாயன்மார்கள் கண்டனர். 27 சிவனடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பன்னிரு திருமுறையாகும். முதல் 7 திருமுறைகளில் முதல் மூன்று திருஞானசம்பந்தர் பாடியவை. அடுத்த மூன்று திருநாவுக்கரசரும் ஏழாவது சுந்தரரும் பாடியவை. இவை மூவர் தேவாரம் எனப்படும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். ஒன்பதாம் திருமுறை திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். பத்தாம் திருமுறை திருமூலர் பாடிய திருமந்திரம். பதினோராம் திருமுறை திருவாலவாயுடையார் முதலிய பன்னிருவர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். பன்னிரண்டாம் திருமுறை பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம். பாடியவர் சேக்கிழார். திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. அவருடைய நூல்கள் 11ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார், பன்னிரு திருமுறை ஆசிரியர்களில் காலத்தால் முந்தியவர். எனவே இவரது பதிகங்கள் மூத்த திருப்பதிகங்கள் என வழங்கப்படுகின்றன.

    சைவ ஆலயங்களில் உள்ள 63 நாயன்மார்களில் 62 பேர் நின்ற கோலத்தில் இருக்க காரைக்கால் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் இருக்கும் சிறப்புப் பெற்றவர்.

    பயன் கருதா அன்பு வெளிப்பாட்டினை நாம் காரைக்கால் அம்மையார் பாடல்களிலே காணலாம். “சிவபெருமான் மீது எல்லையில்லாத அன்பு கொண்டுள்ள என்னுடைய துன்பத்தை அவர் களையாவிட்டாலும், என்மீது இரக்கம் கொள்ளாவிட்டாலும், பற்றிச் செல்லும் நெறி இதுவென எனக்குப் பணித்தருளாவிட்டாலும், என்பு மாலை நீங்காத எம்மனார்க்கு அன்பறாது என் நெஞ்சு அவர்க்கு” என்று மட்டற்ற அன்பு கொண்டிருத்தலை அவர் வெளிப்படுத்தும் அருமையான பாடல் இது.

    இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
    படரும்நெறி பணியா ரேனும் - சுடருருவில்
    என்பறாக் கோலத் தெரியாடும் எம்மனார்க்கு
    அன்பறா தென்நெஞ் சவர்க்கு
    - (2)

    அவர்க்கே ஏழு பிறப்பும் ஆளாவோம் என்று தொடர்ந்து பாடுகிறார். இத்தகைய அன்பு ஒன்று தான் சேமநிதி வைப்பாகும் என்று சைவ நெறியின் அடிப்படையைக் குறிப்பிடுகின்றார்.

    எனக்கினிய எம்மானை ஈசனை யான் என்றும்
    மனக்கினிய வைப்பாக வைத்தேன்
    - (10)

    இத்தகைய அன்புள்ளம் படைத்தோருக்கு அவன் எளியனாக இருக்கின்றான் என்பதனைப் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்.

    பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
    பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
    எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
    இங்குற்றான் காண்பார்க்கு எளிது
    - (45)

    5.2.3 அடைக்கலமும் தொண்டுள்ளமும்

    சைவ அடியாரின் பெரு நெறியாக நாம் காண்பது இறைவனிடம் முழுமையாகச் சரண் புகுதலாம். அஃதாவது எவ்வித மயக்கமும் குழப்பமுமின்றிச் சிவபெருமானை நம்புதலும் அவனிடம் அடைக்கலம் அடைதலுமாம். சிவபெருமானிடம் அடைக்கலம் ஆவதில் காரைக்கால் அம்மையார் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறார் என்பதைப் பாருங்கள். தலையால் நடந்து கைலாயம் சென்றவரல்லவா!

    ஒன்றே நினைத்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
    ஒன்றேஎன் உள்ளத்தின் உள் அடைத்தேன்-ஒன்றே காண்
    கங்கையான் திங்கட் கதிர் முடியான் பொங்கொளிசேர்
    அங்கையற்கு ஆளாம் அது
    . - (11)

    என்கிறார். சிவபெருமானைச் சரணடைந்தால் என்னென்ன கிடைக்கும் என்பதைப் பட்டியலிடுகிறார் அம்மையார்.

    காலனையும் வென்றோம் கடுநரகங் கை கழன்றோம்
    மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
    அரணார் அவிந்தழிய வெந்தீ அம்பெய்தான்
    சரணார விந்தங்கள் சார்ந்து
    - (81)

    வினைப்பயனை வேரோடு அறுக்கவும், எமனை வெல்லவும் கடுநரகத்திலிருந்து விடுபடவும் ஒரே வழி அவனைச் சரணடைதலே என்பதை எவ்வளவு உறுதியுடன் வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.

    தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதாம். அதனால்தான் பெருமை தரும் பெரிய புராணம், திருத்தொண்டர் புராணம் என வழங்கப்படுகிறது. உழவாரப் படை கொண்டு ஆலயங்களைத் தூய்மை செய்த அடியவர் திருநாவுக்கரசர் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்கிறார். அதுபோல் இறைவனுக்குச் செய்யும் தொண்டே சிறந்தது என்ற கருத்துடைய அம்மையார்,

    கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
    அண்டம் பெறினும் அது வேண்டேன்
    - (72)

    என்கிறார். மேலும் இக்கருத்தை ஒட்டியே ‘உள்ளமே! இறைவன் அடிகளையே நீ எப்போதும் விரும்பி ஓது’ என்கிறார்.

    வெள்ள நீரேற்றான் அடிக்கமலம் நீ விரும்பி
    உள்ளமே எப்போதும் ஓது
    - (73)

    இனி அற்புதத் திருவந்தாதி கூறும் சிவபெருமான் சிறப்புகளைக் காண்போம்.

    1)
    சிற்றிலக்கிய வகைகளில் இரண்டைக் குறிப்பிடுக.
    2)
    அந்தாதி நூல்களில் இரண்டைக் குறிப்பிடுக.
    3)
    அற்புதத் திருவந்தாதியின் ஆசிரியர் பற்றி எழுதுக.
    4)
    இந்நூல் எந்தத் திருமுறையில் இடம் பெற்றுள்ளது?
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 13:30:10(இந்திய நேரம்)