தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 4.1 நூலாசிரியர் - சேக்கிழார்-4.1 நூலாசிரியர்

  • 4.1. நூலாசிரியர் - சேக்கிழார்

    பெரிய புராண நூலாசிரியர் சேக்கிழார். தொண்டை நாட்டில் குன்றத்தூரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தில் ‘சேக்கிழார்’என்ற குடியில் வந்தவர். இயற் பெயர் அருண்மொழித் தேவர். இவர் அநபாயன், அபயன், திருநீற்றுச் சோழன் முதலிய பட்டப் பெயர்களை உடைய இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதல் அமைச்சராகத் திகழ்ந்தவர். சோழன் இவருக்கு ‘உத்தம சோழப்பல்லவன்’ என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தான். அக்காலத்தில் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற சமண நூலில் சோழன் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். மன்னனைச் சைவ நாட்டம் உடையவனாக மாற்றச் சிவன் அடியார் வரலாறுகளைச் சேக்கிழார் பெரிய புராணமாக இயற்றினார்.

    4.1.1 தொண்டர் சீர்பரவுவார்

    சேக்கிழார் சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்றுத் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானை வணங்கி நின்றார். தில்லை அம்பலவன் ‘உலகெலாம்’ என்று சேக்கிழாருக்கு அடி எடுத்துக் கொடுத்தான். அதனையே முதலாகக் கொண்டு,

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

    என்ற வாழ்த்தை முதலாக அமைத்துக் கொண்டு ‘திருத்தொண்டர்  புராணத்’தை இயற்றினார். சோழன் முன்னிலையில் இந்நூல் தில்லையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிறைவில் சோழன் சேக்கிழாரையும், பெரிய புராணத்தையும் யானை மீது ஏற்றி, தானும் பின் இருந்து கவரி வீசி நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருமை சேர்த்தான். ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தான். பின்னர் சேக்கிழார் தில்லையிலேயே தவம் செய்து வந்தார். இவர் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர்.

    4.1.2 சேக்கிழார் புராணம்

    சேக்கிழார் வரலாற்றையும், பெரியபுராணத் தோற்றத்தையும் விரித்துரைக்கும் செய்யுள் நூல் ஒன்று தமிழில் உள்ளது. இந்நூலுக்குச் ‘சேக்கிழார் புராணம்’ என்று பெயர். இதனை, ‘திருத்தொண்டர் புராண வரலாறு’என்றும் கூறுவர். இதனைத் தில்லை உமாபதி சிவாசாரியர் என்பவர் இயற்றியதாகக் கூறுவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமது சேக்கிழார்ப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,

    பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்
         பாடிய கவி வலவ

    என்று சேக்கிழாரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 13:32:43(இந்திய நேரம்)