தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 4.7 பெரியபுராணம் - சமூக நோக்கு-4.7 பெரியபுராணம்

  • 4.7 பெரியபுராணம் - சமூகநோக்கு

    எந்த ஒரு காப்பியமும் சமூகப் பயன்பாடு கொண்டதாக அமைய வேண்டும். அது தோன்றிய காலத்தில் நிலவியிருந்த சமூக அநீதிகளைக் கண்டித்து எதிர் நீச்சல் அடிக்கும் துணிவு காப்பியப் படைப்பாளிக்கு வேண்டும். அத்தகு காப்பியங்களே சமூகத்தில் நின்று நிலவும். சாதி-பேதங்களும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஆண்டான் - அடிமைச் சமூக அமைப்பும் நிலவியிருந்த காலம் சேக்கிழார் காலம். இயன்ற வரை சமய மரபுகளுக்கு மாறுபடாமல் சமூகத்தை நெறிப்படுத்த அவர் அரிய முயற்சி மேற்கொண்டிருந்தமையை உணர முடிகிறது.

    முடியாட்சிக்காலத்தில் - மன்னனின் நியாயமற்ற அழைப்பை ஏற்க மறுத்து - ‘நாமார்க்கும் குடியல்லோம்’ (அப்பர்) என்று வீறு கொள்ளும் உரிமை முழக்கம் அங்கே கேட்கிறது.

    ஆட்சியில் தவறு நிகழுமானால் - அடியார்க்குத் தீங்கு நேருமானால் - அரசனின் பட்டத்து யானையையும், பாகனையும் கொல்ல முடியும் என்பதை எறிபத்தர் வீரத்தில் காண முடிகிறது.

    காந்தியடிகளுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே உண்ணா நோன்பையும், தனி மனித சத்யாக்கிரகத்தையும் நாவரசர் மேற் கொண்டமை தெரிகிறது.

    கோயில் பூசை செய்யும் சிவாசாரிய மரபில் வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், கணிகையர் குலத்தில் வந்த பரவையாரையும் வேளாளர் குலத்தில் பிறந்த சங்கிலியாரையும் கலப்பு மணம் புரிகிறார். இறைவனும் இதற்குத் துணை நிற்கிறான்.

    நந்தனார் வரலாறு அக்காலத்தில் ஆதி திராவிடர்கள் சிவாலயங்களுக்குள் சென்று வழிபடத் தடை இருந்தமையை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் திருஞானசம்பந்தராகிய வேதியர், தம் தேவாரப் பனுவல்களுக்கு இசைகூட்டி யாழ் ஒலி எழுப்ப, திருநீல கண்ட யாழ்ப்பாணர் என்ற கீழ்க் குடியில் வந்த அன்பரைத் திருக்கோயில் கருவறை வரை அழைத்துச் செல்கிறார். திருநீல நக்கர் தம் இல்லத்தில் வேள்வி மண்டபத்தில் கணவன் மனைவியாகப் பாணர் தம்பதியர் இரவில் படுத்து உறங்க அனுமதிக்கிறார். வணிகர் மரபில் வந்த சிவநேசர் தம் மகள் பூம்பாவையை வேதியர் குலத்து வந்த திருஞான சம்பந்தருக்கு மணம் முடிக்க விரும்பியிருந்தார் என்று தெரிகிறது. பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில், உலகத்தார் பார்வையில் வாழ்வை இழந்தவராகத் தோற்றம் தந்த திலகவதியார், திருநீறு வழங்கித் தம்பியாரை மதமாற்றம் செய்து சைவத்திற்கு மீட்டுள்ளார். ஒரு மடாதிபதிக்கு உரிய உரிமை ஒரு பெண்ணுக்குச் சேக்கிழாரால் வழங்கப்படுகிறது.

    4.7.1 ஆட்சியாளர் திறம்

    நாடாளும் மன்னர்கள் நெறி திறம்பாது ஆள வேண்டும் என்பது முதலமைச்சராக இருந்த சேக்கிழார் விருப்பமாக அமைந்திருக்கிறது.

    மனு நீதிச் சோழன் வரலாறு நாடாள்வோர் மனு நீதியினும் மேம்பட்ட நீதி வழங்க வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. பசுவின் கன்று தேர்க்காலில் அடிபட்டு இறந்தமைக்குப் பிராயச்சித்தம் போதும் என்று அமைச்சர்கள் கூறினர். மன்னன் ஒப்பவில்லை. கன்றை இழந்த பசுவின் துயரை, நான் என் மகனை இழந்து நின்று பெறுவதே அரச நீதி என்று மனுச்சோழன் கருதி, மகனைத் தேர்க்காலில் கிடத்தித் தேர் ஊர்ந்து நீதி செய்கிறான்.


    கல்தேர்
    தம் பட்டத்து யானை இழைத்த தவறுக்காக அதனைக் கொன்றது போதாது, யானைக்கு உரியவனாகிய என்னையும் கொல்ல வேண்டும் என்று கூறிய புகழ்ச்சோழன் கற்பார் நெஞ்சில் இடம் பிடிக்கிறான். முடியாட்சிக்காலத்திலேயே இத்தகைய அரசர் வரலாறுகளைச் சேக்கிழாரால் மட்டுமே பாட முடிந்திருக்கிறது.
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 14:53:03(இந்திய நேரம்)