தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Vainavam-காப்பியங்கள்

  • 1.5 காப்பியங்கள்

     

    தனிப் பாடல்களைக் கொண்டு அமைந்த சங்க இலக்கியப் போக்கை மாற்றி, ஒரு கதையின் அடிப்படையின் காப்பியத்தை அமைத்தவர் இளங்கோவடிகள். இவரைத் தொடர்ந்து, பிற ஆசிரியர்களும் காப்பிய அமைப்பில் ஈடுபட்டனர்.

    1.5.1 சிலப்பதிகாரம்

    கி.பி. 2-ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையிலும், மதுரைக் காண்டத்தில் அரங்கேற்று காதை, காடுகாண் காதை, ஊர்காண் காதை, ஆய்ச்சியர் குரவை, கனாத்திறம் உரைத்த காதை ஆகியவற்றிலும் திருமால் பற்றிய குறிப்பு, கோயில், வழிபாடு, விழா என்பன போன்ற பல செய்திகள் உள்ளன.

    • கோட்டம் (கோயில்)

    திருமாலின் கிடந்த கோலத்தையும் நின்ற கோலத்தையும் காடுகாண் காதை காட்டுகின்றது. கோவலனிடம் மாமறையாளன், தன் கண்கள் திருமாலின் கோலத்தைக் காட்டு எனத் தன் உள்ளத்தைக் கலக்குவதால் அரவணையில் பள்ளிகொண்டவனைக் காணவந்தேன் எனக் கூறுகிறான். இதை,

    திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
    வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
    ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை

    (11:40-42)

    செங்க ணெடியோ னின்ற வண்ணமும்
    என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
    வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்

    (11:51-53)

    என உரையாடுவதாகக் காட்டுவர் இளங்கோவடிகள்.

    திருவரங்கத்தையும், திருவேங்கடத்தையும் தரிசிக்க மாமுதுமறையோன் குடமலையில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் இருந்து வந்துள்ளார். தாம் வாழுகின்ற ஊரில் மட்டுமல்லாமல், பிற ஊர்களில் உள்ள தாம் வழிபடும் தெய்வங்களைப் பயணம் செய்து வழிபட்டனர் மக்கள் என்பதற்கு மேற்காட்டிய பாடலடிகள் சான்றாகும்.

    சிலம்பில் உள்ள இந்திரவிழா ஊர் எடுத்த காதை, கோவில்கள் பற்றி விரித்துரைக்கின்றது.


    வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
    நீலமேனி நெடியோன் கோயிலும்

    (5:169-173)

    என்று பலதேவன், திருமால் போன்றோரின் கோயில்கள் ஒரே ஊரில் வழிபாட்டுக்கு உரியனவாக இருந்தன. மேலும் வேறுவேறு கடவுளர்களுக்கு விழா எடுத்தனர் என்ற செய்தியையும் (178) குறிப்பிடுகின்றது.

    அரசனும் இறைவனும் வீற்றிருக்கின்ற இடம் கோயில் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அரசனைப் பாடிய மக்கள் அந்த இடத்தில் இறைவனை வைத்துக் கோயிலில் சென்று பாடினர். நாளடைவில் அரசன் இருந்த இடம் கோயில் என்று அழைக்கும் வழக்கம் இல்லாமல் போயிற்று. இதற்குப் பாலமாக அமைந்திருப்பது மேற்காட்டிய சிலப்பதிகார அடிகளாகும். ஊர்காண் காதையிலும் (14:7-12)

    நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
    உவணச் சேவ லுயர்த்தோ னியமும்
    மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
    கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்

    (நுதல்விழி நாட்டத்து இறையோன் = சிவன், உவணச் சேவல் = கருடச் சேவல், மேழி வலனுயர்த்த வெள்ளை = பலதேவர், நியமம் / நகரம் / கோட்டம் = கோயில், கோழிச்சேவல் கொடியோன் = முருகன்)

    என்று பல தெய்வங்கள் முன்சொன்ன இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் தொகுக்கப்பட்டுள்ளன. கோயில் என்ற சொல் தரும் பொருளை நியமம், நகரம், கோட்டம் போன்ற சொற்களும் குறிப்பதை அறிகின்றோம்.

    கண்ணகி இடைச்சேரியில் இருந்தபொழுது பல தீ நிமித்தங்கள் தோன்றுகின்றன. அதுகண்ட மாதரி ‘ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவன் தன் தமையனோடு ஆடிய குரவைக் கூத்து ஆடுதும் யாம்’ என்றாள்.

    ஆய்ச்சியர் குரவையில் பெண்கள் ஆடும் விளையாட்டு இசைக் களஞ்சியம் ஆகும்.

    கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
    இன்றுஆனுள் வருமே லவன்வாயிற்
    கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ

    (பாடல் -19)

    (குணில் = குறுந்தடி, ஆனுள் = பசுக்கூட்டத்தில், கனி = விளாம்பழம், கன்று = ஆவின் கன்று)

    வஞ்சத்தால் வந்து நின்ற ஆவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு அங்கே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன் இன்று நம் வழிபாட்டால் நம் பசுக்கூட்டத்தில் வருவானாயின் அவன் வாயின் மூலம் கொன்றைக் குழலின் இனிய ஓசையைக் கேட்போம் தோழீ என்று பாடும் போது திருமாலின் கண்ணன் (கிருஷ்ண) அவதாரம் பேசப்படுகிறது.

    'பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாதவன், கொல்லையம்சாரல் குருந்தொசித்த மாதவன்’ எனத் திருமாலின் சிறப்பைப் பாடி ஆடுகின்றனர் ஆய்ப்பாடிப் பெண்கள். ‘வடவரையை மத்தாக்கி வாசுகிப் பாம்பைக் கயிறாக மாற்றி, திருப்பாற்கடலைக் கடைந்தவன்; மூவுலகும் இரண்டடியால் அளந்தவன், பாண்டவர்களுக்காகக் கௌரவரிடம் தூது சென்றவன்’ எனப் பெருமாளின் செயல்பாடுகள் பற்றிப் பாடுகின்றனர். பரிபாடல், கலித்தொகை ஆகிய தொகை நூல்களுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் இடையே பாலமாக அமைவது சிலப்பதிகாரம் என்பதை நூல்வழி அறியும் செய்திகள் காட்டுகின்றன.

    . . . . . தொல் இலங்கை கட்டழித்த
    திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே

    (35)

    கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
    கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே

    (36)

    . . . . . .பஞ்சவர்க்குத் தூது
    நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
    நாராய ணாவென்னா நாவென்ன நாவே

    (37)

    என ஆயமகளிர் கைகோத்து ஆடிய குரவையுள் ஏத்தி வழிபடும் தெய்வமாகத் திருமால் உள்ளார். மேலும் செவி, கண், நா ஆகியவற்றை இகழ்வது போல, பிறவிப் பயன்பெறத் திருமாலை வழிபடாத ஐம்புலன்களை உடைய மனிதர்களை இகழ்கின்றது.

    • பொய்கை / குளம்

    அழகர்மலையில் மயக்கத்தைக் கெடுக்கும் மூன்று பொய்கைகள் உள்ளன. அவை புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்பன. அவற்றுள் நீராடினால் முறையே இந்திரன் இயற்றிய ‘ஐந்திரம்’ என்னும் இலக்கண நூலும், பழம்பிறப்பும், நினைத்தவை எல்லாம் நடக்கும் ஆற்றலும் பெறுவீர் என்னும் குறிப்பு உள்ளது. சான்று:


    திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
    பெருமால் கெடுக்கும் பிலமுண்டு

    (11:19-92)

    (குன்றம் = அழகர் மலை, பெருமால் = மயக்கம்)

    இச்சான்றுடன் ‘திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்க’ குலசேகர ஆழ்வார் வேண்டுவதும் செய்வதும், ஒப்புநோக்கி மகிழ்தற்குரியது. இறைவன் எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் உள்ள பொய்கைகளும் இறைவனைப் போலவே சிறப்பிற்குரியனவாகப் பக்தர்கள் / மக்கள் எண்ணினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    1.5.2 மணிமேகலை

    மணிமேகலையில் சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதையில், வாமன அவதாரம் குறிப்பிடப்படுகிறது.


    நெடியோன் குறளுரு வாகி நிமர்ந்துதன்
    அடியிற் படியை யடக்கிய வந்நாள்
    நீருடன் பூமியைக் கொடுக்க
    நீரிற் பெய்த மூரி வார்சிலை
    மாவலி மருமான் சீர்கெழு திருமகள்

    (19:51-54)

    என்றும்,

    மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும்
    ஆடிய குரவையிஃதாமென நோக்கியும்

    (19:65-66)

    (குறளுரு = வாமன அவதாரம், மாமணி வண்ணன் = கண்ணன், தம்முனும் = முன்உள்ளோன் பலதேவன், பிஞ்ஞை = நப்பின்னை)

    எனவரும் செய்தி சிலம்பின் ஆய்ச்சியர் குரவையை நினைவுபடுத்து கின்றது.

    மேலும் ‘சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதை’யில் மணிமேகலை வஞ்சி மாநகர்ப்புறத்தில் வைதிக மார்க்கத்து வைணவ வாதியை அடைகின்றாள். ‘நின் சித்தாந்தம் பற்றிச் சொல்லு’ எனக் கேட்கின்றாள்.

    காதல் கொண்டு கடல்வணன் புராணம்
    ஓதின காப்பென்று உரைத்தனள்

    (27:98-99)

    திருமாலின் புராணத்தை வைணவ சமயத்தைச் சேர்ந்த ஒருவன் மணிமேகலையிடம் எடுத்துக் கூறினான் என்பது செய்தி.

    ஆக இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் திருமாலைப் பற்றிய குறிப்புகள் இருப்பதை மேற்காட்டிய சான்று வழி அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 30-10-2019 13:44:17(இந்திய நேரம்)