தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P202244.htm-குலசேகர ஆழ்வார்

  • 4.4. குலசேகர ஆழ்வார்
     

    சேர நாட்டில் திருவஞ்சிக் களத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தம் பெருமாள் திருமொழி 105 பாசுரங்கள். வடமொழியில் முகுந்தமாலை என்று ஒரு நூல் இயற்றி உள்ளார்.


    அரவு அரசப் பெருஞ்சோதி,......
    கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என
    கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?

    (647)

    என முதல் பாசுரத்தில் ஏங்கும் குலசேகரப் பெருமாள் அரங்கனை ‘அந்தமிழின் இன்பப் பாவினை வடமொழியை’ (650) என்று தமிழாகவும், வடமொழியாகவும் காண்பது சிறப்பு.

    4.4.1 அடியார்

    இப்பதிகத்தில் அடியார்களின் கூட்டத்தைக் கண்டால் கண் பயனைப் பெறும்; தொண்டர் அடிப்பொடியில் (தூள்) ஆடப் பெற்றால் கங்கையில் குளித்தாடும் பேறு பெறுவதற்கு ஒப்பாகும். அரங்கன் கோயிலின் முற்றத்தில் (முன்பகுதி) உள்ள அடியார்களின் திருவடிப்பட்ட சேற்றைத் தலையில் அணிந்து கொள்வேன். தொண்டர் சேவடியை ஏத்திவாழ்த்தும் என் நெஞ்சம் அடியாரை எண்ணிச் சிலிர்க்கின்றது. ‘காதல் செய் தொண்டருக்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சம், தொண்டர் வாழ்வுக்கு மாலை (காதல்) கொண்டது என் மனம்’ எனப் பலவாறு (658-657) தொண்டர்களுக்குத் தொண்டரான அடியவர்களுக்குத் தாம் அடியவர் ஆன பாங்கைப் புலப்படுத்துகிறார். ஆழ்வார் நோக்கில் வழிபடுபவர்கள் உயர்ந்தவராகின்றனர். பகவானை விடப் பாகவதர்கள் உயர்ந்தவர்கள் என்பது வைணவக் கோட்பாடு.

    நிலையான வாழ்வைத் தேடும் பக்தரான குலசேகரர், ‘எம்பிரானுக்கு ஏழ் பிறப்பும் பித்தன் ஆனேன்’ (673) என்றும், ‘பித்தனாய் ஒழிந்தேன்’ (674), ‘பேயனாய் ஒழிந்தேன்’ (675) என்றும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அரங்கன் மீது தாம் கொண்ட ஈடுபாட்டைப் பாசுரத்தில் வடித்து வாசிப்பாரையும் மெய்மறக்கச் செய்கின்றார்.

    4.4.2 திருவேங்கட மலைத்தொடர்பு

    திருவரங்கப் பெருமானை வாழ்த்தி வணங்கிய குலசேகரர் திருவேங்கடத்தானை நினைந்து உருகும் நிலை, பயில்வோர் மனங்களை உருகச் செய்யும் கனிவு கொண்டது.

    திருவேங்கட மலையின் சுனையில் மீனாக, குருகு என்னும் பறவையாக, வேங்கடத்தான் உமிழுகின்ற பொன்வட்டில் பிடிப்பவனாக, செண்பக மரமாக, தம்பகமாக (புதர்ச்செடி), சிகரமாக (மலை உச்சி), காட்டாறாக, நடக்கின்ற பாதையாக (வழி) ஆக வேண்டும் என ஏங்கியவர் பின், படியாக, ஏதேனுமாகக் கிடக்க வேண்டும் (677-687)எனச் சொல்லும் பாசுரங்கள் ஆழ்வாரின் ஏக்கத்தைக் காட்டுவதோடு, உயிரானது இறைவனை அடையத் துடிக்கும் துடிப்பையும் அல்லவா புலப்படுத்துகிறது? அந்த அனுபவத்தை உணர முடியுமே தவிர உணர்த்தவா முடியும்?

    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
    நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
    அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
    படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

    (685)

    (செடி = துன்பம். நெடியோன் = வாமனாவதாரத்தில் வானுற வளர்ந்தவன், கிடந்தியங்கும் = நடமாடும்)

    4.4.3 பக்தி / வழிபாடு

    அரங்கனைக் காணும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் போது அற்புதமான உவமைகள் இடம் பெறுகின்றன. சான்றாக, ‘கண்டார் இகழும்படியான செயல்களைக் காதலன் செய்தாலும், கொண்டவனைத் தவிர வேறொருவரை நினைக்காத குலமகள் போல, (689) நீ என்னை ஆளாவிட்டாலும் உன் பாதத்தைப் பாடித் தொழுவேன். ‘கோபத்தால் தாய் குழந்தையை நீக்கினாலும் அவளை நினைந்து அழும் குழவி போல உன் அன்புக்காக ஏங்கினேன் (688).’ உன் திருவடியே சரணம், நடுக்கடலில் பாய்மரத்தில் உச்சியில் உள்ள பறவை பறந்து கரை காணாமல் மீண்டும் பாய்மர உச்சிக்கு வருவது போல (693) உன்னையே என் மனம் விரும்புகின்றது என்பதை,

    எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே அடையல்அல்லால்
    எங்கும் போய்க் கரைகாணா நெறிகடல்வாய் மீண்டேயும்
    வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே

    (693)

    எனப் பாடுகின்றார்.

    இப்பதிகம் முழுக்க அரங்கத்தான் மீது கொண்ட காதலை உவமை வழி விளக்கிச் செல்கிறார். உவமையின் உச்சத்திற்குச் சான்று:

    எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
    மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்; மற்றவைபோல்
    மெய்த்துயர் வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா!
    என் சித்தம்மிக உன்பாலே வைப்பன் அடியேனே

    (694)

    (பைங்கூழ் = பயிர், முகில் = மேகம், மெய்த்துயர் = துன்பம், சித்தம் = மனம்)

    வானம் மழை பொழியாது போனாலும் பயிர்கள் மேகத்தையே நோக்கி இருக்கும். அதுபோல இறைவா! நீ என்மேல் கருணை காட்டாவிடினும் என் மனம் உன்னிடம் தான் எனச் சொல்லும் குலசேகரர் அவன் தாள் (திருவடி) வேண்டி நிற்கின்றார்.

    4.4.4 தாயாகிய ஆழ்வார்

    குலசேகர ஆழ்வார் தாயாகிறார். தம் ஏக்கத்தைப் புலப்படுத்த கண்ணனைப் பெற்ற தாயாகிய தேவகியாகிறார். ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து (தேவகி - வசுதேவன்), ஒருத்தி மகனாய் வளர்ந்தவன் (யசோதை - நந்தகோபன்). எனவே மகன் வளர்ந்த காட்சியைக் காணும் பேறு, யசோதைக்குக் கிடைத்தது போலத் தனக்குக் கிடைக்கவில்லையே என்பதை நினைத்துப் பெற்ற தாயாகிய தேவகி புலம்புவதாக 11 பாசுரங்கள் உள்ளன (708-718).

    தாய் தேவகிக்காக மட்டுமல்ல தந்தை வசுதேவருடைய நிலையையும் உணர்ந்து சிறு நாடகக் காட்சியைக் கண்முன் நிறுத்துகின்றார் ஆழ்வார். அதாவது அன்புடைய மகளிர் தம் மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு அப்பா எங்கே? எனக் கேட்கிறார்களாம்; அது கேட்ட குழந்தை பதில் சொல்லுவது போல் தன் கண்களைத் தந்தை இருக்கும் பக்கம் திருப்புகிறதாம். அக்காட்சியைக் காணும் பேறும் வளர்த்த தந்தை நந்தகோபனுக்குக் கிடைத்ததாம்; பெற்ற தந்தை வசுதேவருக்குக் கிடைக்கவில்லையாம்.

    குழந்தை தள்ளாடித் தள்ளாடி நடந்துவரும் அழகைக் காணவும் உண்ட உணவின் மீதியை உண்ணவும் தனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று ஏங்குகின்றாள் தேவகி.

    4.4.5 இராம அவதாரம்

    ஆண்டாள் நாச்சியார் கோகுலத்தில் வாழ்ந்த கண்ணனை நினைந்து உருகிப் பாடியது போல, குலசேகரர், இராம அவதாரத்தில் ஈடுபாடு கொண்டு தாயாகத் தாலாட்டியும் (719-729) தசரதன் (தந்தை) நிலையில் (703-740) நின்றும், திருச்சித்திர கூடம் இராமன் கதையை (741-751) அடியார் நிலையில் நின்றும் (658-667) உள்ளம் உருகப் பாடுகின்றார் (8,9,10 ஆகிய மூன்று பதிகங்கள்).

    திருமகளோ டினிதமர்ந்த செல்வன் தன்னைத்
    தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
    அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்
    அரசாக வேண்டேன் மற்றரசு தானே

    (747)

    இப்பாசுரம் இராமபிரானின் திருவடிகளைச் சூடிக்கொள்ளும் அரசைத் தவிர, மற்றைய அரசபதவி அரசு அல்ல என, அரசனாக நாட்டை ஆண்ட குலசேகரர் ஆழ்வாராகி இராம காதலனாக மாறிவிடும் நிலையைக் காட்டுகின்றது.

    திருவேங்கடமலையானிடம் மண்ணை ஆளும் அரச பதவி வேண்டாம் எனச் சொன்னவர் (678) உண்மையான பொருளை- நிலையான பொருளை நாடி அடையத் துடிக்கும் தேடல் இது!

    4.4.6 தாலாட்டு

    ‘மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு
    வாய்த்தவனே! என்னுடைய இன்னமுதே! இராகவனே
    தாலேலோ’

    (719)

    (கௌசலை = இராமன் தாய்)

    எனத் தாலாட்டும் ஆழ்வார், தாலாட்டுப் பாடுவது போல இறைவனின் பெருமைகளைப் பாடிப் பரவுகின்றார்.

    ஆலினிலைப் பாலகனாய் அன்றுலக முண்டவனே!
    வாலியைக் கொன்றரசிளைய வானரத்துக் களித்தவனே!
    காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
    ஆலிநகர்க் கதிபதியே! அயோத்தியனே! தாலேலோ!

    (725)

    (கால் = காற்று, மணி = கடல்மணி)

    தசரதன் புதல்வன், மைதிலி (சீதை) கணவன் (722), சனகன் மருகன் (மருமகன்) (721) எனத் தாலாட்டு என்னும் உத்தியைப் பயன்படுத்தி இராமாவதாரக் கதையைச் சுட்டுகின்றார்.

    • தசரதன் புலம்பல்

    தாயாகி ஏங்கியவர் தந்தையாகி (தசரதனாகி) இராமாவதாரம் குறித்துப் புலம்புகிறார்.

    இராமன் காட்டுக்குச் செல்ல, தசரதன் புலம்பல்;

    நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்
    இளங்கோவும் பின்பு போக
    எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ!
    எம்பெருமான்! என்செய் கேனே!

    (721:3-4)

    (நேரிழை = பெண் (சீதை), இளங்கோ = தம்பி)

    என்றும்,

    ‘என் பேச்சைக் கேட்டு, களிறு, தேர், குதிரை ஆகிய படைகளை விட்டுவிட்டு காட்டு மரத்தின் நிழலில்,


    கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ?

    காகுத்தா! கரிய கோவே!

    (732:4)

    ‘நீ சென்ற பிறகு என் நெஞ்சம் இரண்டாகப் பிளக்காமல் உள்ளதே, கேகய மன்னன் மகளான கைகேயியின் சொல் கேட்ட யான் தீவினையாளன் (734), எங்கள் கோலத்தை மாற்றி என் துணைவியோடு நான் செல்ல வேண்டிய காட்டிற்கு நீ செல்லுதல் சரியா என்றெல்லாம் புலம்பியவர்.

    நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்
    ஏழ்பிறப்பும், நெடுந்தோள் வேந்தே!

    (738 : 3-4)

    எனக் குலசேகரர் பாடும்போது தசரதனாகவே மாறிவிடுகின்றார்.

    4.4.7 கிருஷ்ண அவதாரம்

    ஆயர்பாடிப் பெண்களுள் ஒருத்தியாகக் கிருஷ்ணனின் குறும்புகளைப் போற்றுகின்றார் குலசேகர நாயகி. இராம அவதாரத்தில் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் பாடிய ஆழ்வார், கிருஷ்ண அவதாரத்தில் காளையாகக் கன்னியரைப் படுத்திய பாட்டைப் பாசுரங்களில் வடித்துள்ளார்.

    • இராமன், இராமாயணக் கதை, அக்கதையில் வரும் பாத்திரங்களாக நிற்றல் (தசரதன், கௌசலை), கிருஷ்ண அவதாரம், ஆயர்பாடிப் பெண்கள் நிலை, பெற்ற தாய்(தேவகி) நிலை இப்படிப் பிற அவதாரங்களிலும் ஈடுபட்டு நிற்கின்றார் ஆழ்வார்.

    • தாயாகிக் கண்ணனின் குறும்பு

    • தந்தையாகி (தசரதன்) மகன் (இராமன்) பிரிவு

    • தாயாகித் (கௌசலை) தாலாட்டு

    • ஆய்ப்பாடிப் பெண்ணாகிக் காதல்

    • அடியாராகி இராமன் கதை

    • கிருஷ்ண அவதாரத்தில் பெற்ற தாயாகிய தேவகியாக மாறி, பெற்றதைத் தவிர வளர்க்கும் பேறு பெறவில்லை என்னும் தாய்மைத் துன்பத்தையும், தம் துணையாகிய வசுதேவருக்கும் அது இழப்பு என்பதையும் உணர்ந்து உணர்ந்து ஏங்கி ஏங்கிக் காட்சிப்படுத்துகின்றார்.

    • ஆய்ப்பாடிப் பெண்ணாக அல்லது ஆய்ச்சியாகவே மாறி விடுகின்றார், ஆழ்வார். அதாவது நாயகியாக நின்று ஏக்கத்தைப் பாடுகின்றார்.

    • திருவரங்கம், திருவேங்கடம், வித்துவக்கோடு ஆகிய திவ்விய தேசங்களின் பெருமையைப் போற்றிப் பாடி உள்ளார்.

    • பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகர ஆழ்வார் தாமும் ஓர் அரசன் என்பதால் அரசனாக - சக்ரவர்த்தியாக வாழ்ந்த தசரதன் மீது ஈடுபாடு கொண்டார் போலும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:29:02(இந்திய நேரம்)