தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படைப்பிலக்கிய வகைகள்

  • 1.2 படைப்பிலக்கிய வகைகள்

    கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய படைப்பிலக்கிய வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

    தமிழில் இரண்டாயிரம் ஆண்டுக் காலக் கவிதை மரபு இருந்து வருகிறது. இக்கவிதைகள் மரபுவழி எழுதப்பட்ட கவிதைகள் எனலாம். இதற்கான யாப்பிலக்கணம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வருகிறது. இந்தக் கவிதைகள் அசை, சீர், அடி, தொடை, அணி முதலிய தன்மைகளோடு வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பாவகைகளிலும் அவற்றின் இனங்களிலும் அமைந்து இருக்கும் தன்மை கொண்டவை.

    கவிதையில் இன்னொரு வகை புதுக்கவிதை எனப்படும். இவ்வகைக் கவிதை இலக்கண வரம்பிற்கு உட்படாமல், உணர்வின் அடிப்படையில் எழுதப்படுவது. தற்காலத்தில் இக்கவிதை நடையே பெரும்பாலான கவிஞர்களால் பின்பற்றப்படுகின்றது.

    ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவது சிறுகதையாகும். சிறுகதை என்பது, அரைமணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும் என்பர் சிறுகதை ஆய்வாளர்கள். அவசர வாழ்க்கையில், மிக விரைவில் படிக்கக் கூடிய படைப்பிலக்கியமாக விளங்குவது சிறுகதையாகும். தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணை நின்றவை, தமிழில் வெளிவரும் வார, மாத இதழ்களே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தப் படைப்பிலக்கியம் இன்று மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

    "கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டு வர முடியும் என்று உணர்த்தப்பட்ட பிறகு, தமிழ் உரைநடைப் படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது நாவல்தான்" என்று கூறுவார் இலக்கியத் திறனாய்வாளர் இரா.தண்டாயுதம்.

    1741ஆம் ஆண்டில் சாமுவேல் ரிச்சர்ட்சன் (Samuel Richardson) என்னும் எழுத்தாளர் கடித முறையைப் பின்பற்றி ஒரு நீண்ட கதையை எழுதினார். அதற்குப் பமிலா என்று பெயர் சூட்டினார். அது புதுமையான இலக்கிய வடிவமாக அமைந்தது. படிப்பாளிகளால் மிகவும் வரவேற்பினைப் பெற்ற இந்நூலைப் பின்பற்றிப் பலர் எழுத முற்பட்டனர். Novella என்ற இத்தாலிய மொழிச் சொல் வாயிலாக நாவல் என்ற சொல் இத்தகு இலக்கியத்திற்கு இடப்பட்டது. நாவல் என்பதற்குப் புதுமை என்று பொருள்.

    தமிழில் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பதாகும்.


    படைப்பிலக்கிய வகைகளில் கல்வி அறிவு இல்லாதவர்களும் அறிந்து கொள்ளும் இலக்கிய வகை நாடக இலக்கியமாகும். படித்து மகிழும் இலக்கியமாக இதனைப் பார்ப்பதைவிட, பார்த்து மகிழும் இலக்கிய வகையாக இதனைக் கொள்ளலாம். நாடக இலக்கிய வகையைப் பொறுத்தவரை தமிழில் சங்க காலத்தை அடுத்து எழுதப்பட்ட சிலப்பதிகாரமே முதல் நாடக இலக்கியம் என்று கூறுவர்.

    தமிழில் இடைக்காலத்தில் தோன்றிய பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் போன்ற இலக்கிய வகைகளும் நாடக இலக்கிய வகையைச் சார்ந்தவையே.

    பிற்காலத்தில் சீர்காழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகமும், கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திர கீர்த்தனையும் நாடக இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டன.

    நாடகங்களைப் பொறுத்தவரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    1)
    படிப்பதற்கான நாடகங்கள்
    2)
    படிப்பதற்கும், நடிப்பதற்கும் உரிய நாடகங்கள்
    3)
    நடிப்பதற்கான நாடகங்கள்


    1.
    படைப்பிலக்கியம் என்றால் என்ன?
    2.
    கவிதை என்றால் என்ன?
    3.
    சிறுகதை என்றால் என்ன?
    4.
    நாடகம் என்றால் என்ன?
    5.
    நாவல் என்றால் என்ன?
புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 11:56:53(இந்திய நேரம்)