தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    தத்துவம் (Philosophy) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் பித்தகோரஸ் ஆவார். இவர் ‘தத்துவம் என்பது அறிவின் மீது கொண்டிருக்கும் பற்றினைக் காட்டுகிறது’ என்கிறார். பிளேட்டோ என்பவரின் கூற்றுப்படி, தத்துவம் என்பது ‘உண்மையை உணர முயலும் ஒன்று’ எனலாம். தத்துவம் என்பது பிரபஞ்சத்தின் முழுமைப்பொருளை அறிய உதவும் ஒரு முறையாகும். மேலும் இது வாழ்க்கைக்கு வழிகாட்டும் அளவில் முக்கியத்துவம் பெறுகிறது (பற்று - விருப்பம், ஆர்வம்; பிரபஞ்சம் - உலகம்).

    தத்துவம் - பொருள் விளக்கம்

    காண்ட் என்பவர் தத்துவம் என்பது உணர்தல் என்ற ஒரு விஞ்ஞானமாகவும், அதன் ஆய்வாகவும் விளங்குகிறது என்கிறார். டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள், உண்மையை உள்ளபடியே உணர உதவும் தருக்க அடிப்படையையே தத்துவம் என்கிறார் (தருக்கம் - நியாயவாதம்).

    தத்துவம் என்பது முழுமையான அறிவியல் சிந்தனையின் தொகுப்பேயாம். தத்துவம் மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச் சென்று உண்மைகள், மெய்ம்மைகள் பற்றிய அறிவினைக் கொடுக்கின்றது. தத்துவம் உயிரை இயக்கும் சக்தியாகக் கருதப்படுகின்றது.

    மேற்கண்டவற்றின் மூலம் தத்துவம் என்பதன் உட்பொருளை முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய தத்துவக் கருத்துகளை, நெறிகளை உள்ளடக்கிய சிறுகதைகளின் மூலம் தத்துவம் சார்ந்த அறிவினைப் பெறுவதே இப்பாடத்தின் நோக்கமாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 11:38:48(இந்திய நேரம்)