தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-இறையன்புவின் சிறுகதைகளில் சான்றோர் நெறிகள்

  • 5.3 இறையன்புவின் சிறுகதைகளில் சான்றோர் நெறிகள்

    சான்றோர் கூறும் நெறிகள் தத்துவத்திற்கு இடமளிப்பனவாய் உள்ளன. இப்பகுதியில் இறைத் தத்துவங்கள், குரு கூறும் தத்துவங்கள், துறவி கூறும் தத்துவங்கள் ஆகிய மூன்று பிரிவுகளில் சான்றோர் கூறும் தத்துவ நெறிகள் அறியப்படுகின்றன. இறை கூறும் தத்துவங்கள் இறைநெறியினைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. குரு கூறும் தத்துவங்கள் அறிவுரை கூறக்கூடிய வகையில் சிறப்பிடம் பெறுகின்றன. துறவி கூறும் தத்துவங்கள் வழிகாட்டலின் அடிப்படையில் அமைந்துள்ளன. இன்றைய மனித வாழ்வு செம்மைப்படுத்தப்பட இத்தகைய தத்துவ நெறிகள் தேவை என்ற அளவில் படைப்பாளரின் சிறுகதைகள் சமூகப்பயன் விளைவிக்கக் கூடியனவாகக் கொள்ளப்படுகின்றன. இனி, சான்றோர் கூறும் தத்துவ நெறிகளைக் காணலாம்.

    5.3.1 இறைத் தத்துவங்கள்

    உலக உயிர்கள் அனைத்தையும் இறைவன் படைத்ததாகத் தத்துவம் உரைக்கிறது. இவ்வுலகைப் படைத்த இறைவனின் படைப்புத் தத்துவங்களை அறிய இப்பகுதி துணை நிற்கிறது. இதில் படைப்பு, பிரதிபலிப்பு, காரணம் ஆகிய மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இனி அக்கதைகளையும் அவற்றின் தத்துவங்களையும் காணலாம்.

    • படைப்பு - சிறுகதை

    அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாண்டங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார். அந்த வழியே சென்ற மற்றொருவர், ‘இந்த ஆட்டை ஏன் இப்படிக் கட்டி வைத்திருக்கின்றீர்கள்’ என்று குயவரிடம் கேட்டார். ‘நான் கடவுளை மகிழ்விக்க இதைப் பலிதரப் போகிறேன்’ என்றார் குயவர். வந்தவர் ‘அப்படியா’ என்று கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை ஒவ்வொன்றாகப் போட்டு உடைக்க ஆரம்பித்தார். பதறிப் போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார். அதற்கு, ‘உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்’ என்றார் வந்தவர். ‘நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு உடைத்தால் சந்தோஷம் வருமா?’ என்றார், கோபமாக. 'நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர் முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்குமென நினைக்கிறாயே!’ என்றார் வந்தவர்.

    குயவருக்குப் புரிந்தது.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    இறைவன் உலகத்து உயிர்களைப் படைத்தவன். இறைத் தத்துவம் என்பது ஓர் உயிர் மற்றொரு உயிரைத் துன்புறுத்துவதோ, கொல்லுவதோ கூடாது என்பதுதான். இறைவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டவன். அதில் எந்த ஓர் உயிருக்குத் துன்பத்தை ஏற்படுத்தினாலும் அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. குயவன் தான் செய்த பானைகளைத் தன் கண்ணெதிரிலே போட்டு உடைக்கும்போது எப்படிப் பதறி இரைந்து கத்துகிறானோ, அதுபோல்தான் இறைவனும் தன் கண் எதிரிலேயே ஓர் உயிர் பலியிடப்படும்போது அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஆகவே மனிதன் மனிதனை அழிப்பதற்கும், விலங்குகளை அழிப்பதற்கும், இயற்கையை அழிப்பதற்கும் இறைவன் இடம் தருவதில்லை. கண்ணெதிரில் இறைவன் தோன்றமாட்டான் என்ற எண்ணத்தில் மனிதன் இயற்கை விதிகளைப் பயமின்றி மீறுவது என்பது அவனுக்குத் துன்பத்தைக் கொடுப்பதாகவே அமையும் என்ற தத்துவம் இங்கு இறைநெறியாக உணரப்படுகிறது.

    • பிரதிபலிப்பு - சிறுகதை

    ‘இறைமை தன்னை எல்லாவற்றிலும் பிரதிபலிப்பதாகச் சொல்கிறீர்களே எப்படி என விளக்க முடியுமா?’ இளைஞன் அந்தத் துறவியைக் கேட்டான். சிரித்துக் கொண்டே அவனை நள்ளிரவு வரை பொறுத்திருக்கும்படி துறவி கூறினார். அன்று முழுநிலவு நாள். இரவில் அவனை ஒரு குளத்திற்கு அழைத்துச் சென்றார். அதனுள் நிலவின் பிம்பத்தைக் காட்டினார். சின்னக் குவளை ஒன்றில் நீரை நிரப்பி அதனுள்ளும் நிலவின் பிம்பத்தைக் காட்டினார். பிறகு ஒரு கேணிக்கு அழைத்துச் சென்றார் அதிலும் காட்டினார். ‘இவற்றிலெல்லாம் என்ன தெரிந்தது? நிலவின் பிம்பம். எப்படி ஒரே நிலவு தன்னை எல்லா நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கின்றதோ அப்படித்தான் இறைமையும்’ என்றார் துறவி.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறான். எதிலும் மறைந்து இருக்கிறான். அவனுக்கு உயர்வு, தாழ்வு இல்லை. உலக உயிர்களைக் காப்பதற்காக அவன் அண்டமெல்லாம் தன்னைப் பிரதிபலித்துக் காட்டிக் கொண்டிருக்கிறான். இத்தத்துவ நெறியே இக்கதையின் மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு முழுநிலவு எப்படித் தன்னைப் பெரிய குளத்திலும் சின்னக் குவளையிலும், கேணியிலும் வெளிப்படுத்திக் கொள்கிறதோ அதுபோல்தான், இறைவனும் தன்னை எங்கும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறான். இறைவன் ஒவ்வொருவரிடமும் தோன்றி, தான் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முடியாது. ஆகவே இறைவன் உருவமாகவோ, அருவமாகவோ வெளிப்பட்டும், மறைந்தும் உலக உயிர்களைக் காக்கிறான் என்ற தத்துவத்தை உள்ளடக்கியதாக இச்சிறுகதை விளங்குகிறது.

    • காரணம் - சிறுகதை

    அந்த ஞானியிடம் ஒரு சீடன் கேட்டான். 'விரதம் இருந்தால் பலன் கிடைக்குமா' அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்; 'கருணை மயமான இறைவன் தன் பக்தர்கள் தம்மை வருத்திக்கொள்வதை விரும்பவில்லை. விரதம் இருப்பது பசியின் கொடுமையை உணர்வதற்காக. ஒவ்வொரு முறை உணவு உண்ணும்பொழுதும் மனநிறைவுடன் நன்றி செலுத்துவதற்காக. இலையுதிர்காலம் என்பது வசந்தம் எனும் வரத்தை உணர்த்துவதற்காக'.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    இச்சிறுகதையின் மூலம் இறைவன், காரணமாகவும் காரணத் தெளிவினனாகவும் விளங்குவது தத்துவ நெறியாகக் காட்டப்படுகிறது. ‘விரதம் இருந்தால் பலன் கிடைக்குமா?’ ஞானியிடம் கேட்கும் சீடனுக்கு அவர் பதில் கூறுகிறார். இறைவன் கருணைமயமானவன். பிற உயிர்களை அவன் வருத்துவதில்லை. அப்படியிருக்க இறைவனுக்காக நாம் விரதம் இருப்பது ஏன்? பசியின் கொடுமையை நாம் உணர வேண்டும் என்பதற்காகவே. மனித மனம் பக்குவம் பெறும் பொருட்டே. நிழலின் அருமை வெயிலில் தெரிவதுபோல விரதத்தின் மூலம் நாம் இதை உணருகிறோம். இறைவன், உணர்த்துவதன் மூலம் உணர வைப்பவனாக விளங்குகிறான். இதன்வழி மக்களின் நன்மைகளை முன்னிட்டே இறைத் தத்துவங்கள் உருவாகியுள்ளதை அறிய முடிகிறது.

    5.3.2 குரு கூறும் தத்துவங்கள்

    ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்பதன் மூலம் குருவின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. குருவின் தத்துவங்கள் கற்றலுக்கு இடமளிக்கின்றன; ஒருவனின் உயர்வுக்குக் காரணமாகின்றன. குருவின் அறிவுரைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்பகுதியில் மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நம்மை நல்வழிப்படுத்தும் வகையிலும், வாழ்க்கை நெறிகளை உணர்ந்து செயல்படும் வகையிலும் இக்கதைகள் சிறப்புப்பெறுகின்றன. இலக்கு, நோக்கு, பயம் ஆகிய தலைப்புகளில் அமைந்த சிறுகதைகள் குரு கூறும் தத்துவங்களுக்கு உரியனவாகின்றன.

    • இலக்கு - சிறுகதை

    குரு தன் சிஷ்யர்களிடம் ஒரு வைரம் பாய்ந்த தேக்கு மரத்தைக் காட்டி, ‘இதனில் என்ன செய்யலாம்’ என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகச் சொன்னார்கள். ஒருவன் மட்டும் மௌனமாக இருந்தான். ‘உனக்கு ஒன்றுமே தோன்றவில்லையா?’ என்று அவர் கேட்டார்.

    அவன் சொன்னான்: ‘இது இதனைப் பயன்படுத்துபவர்களைப் பொறுத்தது. இழைக்க நினைத்தால் வேண்டிய மரச்சாமான்களாய்ப் பரிமளிக்கும்; பிளக்க நினைத்தால் விறகாகும் எரிந்து சாம்பலாகும்;’.

    ‘வாழ்க்கையும் அப்படித்தான். இழைப்பதும், பிளப்பதும் அவரவர் கையில்’ என்று குரு விளக்கிக் கூறுகிறார்.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் இலக்குகளை அமைத்துக் கொண்டு செயல்படுதல் வேண்டும் (இலக்கு - இலட்சியம், குறிக்கோள்).

    இலக்குகள் இல்லாவிட்டால் மனம்போன போக்கில் பயனற்ற வாழ்வினராகி விடுவோம் என்பதைத் தத்துவ நெறியாக இச்சிறுகதை காட்டியுள்ளது. மேலும் வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும் என்பதும் உரைக்கப்படுகிறது. கதையில் வைரம் பாய்ந்த தேக்கு மரத்தை என்ன செய்யலாம்? என்ற வினாவிற்குப் பல விடைகளைக் கூறமுடியும். எனினும் ஆக்கப்பூர்வமான விடையைக் கொடுக்க வேண்டும் என்பதே தேவையாகிறது. இலக்குகளுக்கு ஏற்ப அம்மரத்தைப் பயன்படுத்தலாம் என்பது ஆக்கப்பூர்வமான பதிலாகிறது. இங்ஙனமே இறைவனால் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதும், வீணடிப்பதும் அவரவர் கையிலேயே இருக்கிறது. ஆகவே வாழ்க்கையைச் சிறப்பாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே குருவின் தத்துவ நெறியாக உரைக்கப்படுகிறது.

    • நோக்கு - சிறுகதை

    ‘எதிலும் நிறைவைப் பார்க்கத் தெரிய வேண்டும் - இந்தக் குவளை பாதித் தண்ணீரோடு இருக்கும்பொழுது பாதி நிறைந்திருக்கிறது என நினைப்பவனுக்குக் கடவுள் கதவுகளைத் திறந்து விடுகிறார்’. குரு சீடருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    ஒரு சீடன் அக்குவளையிலிருந்த நீர் முழுவதையும் கீழே ஊற்றிவிட்டு, ‘இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்’ என்றான்.

    ‘இப்பொழுதும் இக்குவளை வெறுமையால் நிறைந்திருக்கிறது’ என்றார் குரு. இத்துடன் கதை நிறைவு பெற்றுள்ளது.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    இக்கதையில் இடம்பெறும் குருவின் அறிவுரைகள் வாழ்க்கையை ஆக்க முறையில் அணுகுவதற்கு வழிகாட்டுகின்றன. ஆக்கமுறை அணுகல் மட்டுமே வாழ்க்கைக்கு இன்பமூட்டுவதாய் அமையும்; கடவுளும் இத்தகையவர்களுக்கு அருளாகிய கதவைத் திறந்து விடுவார் என்பது போன்ற தத்துவ நெறிகள் இக்கதையின் மூலம் பெறப்படுகின்றன. குவளை பாதி நீரால் நிறைந்திருக்கும் பொழுது குவளை முழுவதும் நீரால் நிரம்பவில்லையே என்று எண்ணுவதைக் காட்டினாலும் பாதி நீரால் நிரம்பியிருக்கிறது என்று எண்ணுவது ஆக்கம்தரும் சிந்தனைக்கு இடம் தருகிறது. வெறும் குவளையாக இருக்கும்பொழுது அதில் ஒன்றுமில்லை என்று குரு கூறாமல் குவளை வெறுமையால் நிறைந்திருக்கிறது என்பதிலிருந்து வாழ்க்கையை நிறைவான கண்ணோட்டத்திலேயே காண வேண்டும், இல்லாவிட்டால் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும் என்னும் தத்துவக் கருத்துகள் குருவின் அறிவுரைகளாக உணரப்படுகின்றன.

    • பயம் - சிறுகதை

    ‘பயத்தினால் தான் பேராசை உண்டாகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை’ சீடன் குருவை இடைமறித்தான். குரு சிரித்துக்கொண்டே இருந்து விட்டார். அன்று இரவு, எல்லாச் சீடர்களும் உணவருந்தும் பொழுது சமைப்பவன் ஓடிவந்தான்.  ‘அரிசி திடீரெனத் தீர்ந்துவிட்டது. நாளைக் காலையில் யாருக்கும் உணவு கிடையாது; மதியம்தான் தானியங்கள் வாங்கி வரமுடியும்’ என்று கூறினான்.

    உணவருந்தி முடிந்ததும் குரு, சீடர்களிடையே வந்து சொன்னார். ‘நாளைக் காலை உணவு கிடையாது என்றவுடன் உங்களில் பலர் வழக்கமாக உண்பதைக் காட்டிலும் அதிகமாக உண்டிருக்கிறீர்கள். எப்பொழுதைக் காட்டிலும் அதிகமாய் இன்று உணவு செலவாகியிருக்கிறது’ என்றார். பயத்தைப் பற்றிக் கேட்டவன் தலைகுனிந்து கொண்டான்.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    தனக்கு ஏதும் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற சுயநலத்தினாலும், பயத்தினாலும் பேராசை உண்டாகிறது என்ற தத்துவ நெறி இக்கதையின் வழியாகப் பெறப்படுகிறது. இக்கதையில் பயத்தினால் பேராசை உண்டாகிறது என்பதை ஏற்றுக்கொள்ளாத சீடனுக்கு, குரு பின்னர்ப் பதில் கூறுவதாகச் சொல்கிறார். சீடர்கள் உணவு உண்டு முடித்தபின் 'நாளைக்கு உணவு கிடைக்காது என்ற பயத்தினால் உங்களில் பலர் வழக்கமாக உணவு உட்கொள்வதைக் காட்டிலும் அதிகமாக உட்கொண்டு உங்களின் பேராசைகளை வெளிப்படுத்திவிட்டீர்கள்' என்று கூறுகிறார். பயத்தைப் பற்றிக் கேட்டவன் தலைகுனிந்து கொள்வதிலிருந்து பேராசை பயத்தினால் உண்டாகும் என்பது அறியப்படுகிறது. ஆகவே தன்னைப் பற்றிய அச்சத்தைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் பேராசையைத் தவிர்க்கலாம் என்பது தத்துவ நெறியாக அறியப்படுகிறது.

    5.3.3 துறவி கூறும் தத்துவங்கள்

    வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெற்றும், தியானத்தின் மூலமும், இறைவழிபாட்டின் மூலமும் பல வரங்களைப் பெற்றும் உலக அனுபவத்தைக் கற்றவர்களாகத் துறவிகள் விளங்குகின்றனர். அவர்கள் மூலம் அறியப்படும் கருத்துகள் தத்துவ நெறிகளுக்கு இடமளிப்பனவாய் உள்ளன. இவை வாழ்க்கை நெறிகளுக்கு வழிகாட்டுவனவாயுள்ளன. இத்தகைய சிறப்புமிக்க துறவிகளின் தத்துவக் கருத்துகளைப் பெற்றனவாக இங்கு மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. துறவு, அற்புதம், பேச்சு ஆகிய சிறுகதைகளின் மூலம் துறவிகளின் வழிகாட்டலைக் காண்போம்.

    • துறவு - சிறுகதை

    துறவி அந்த வழியே சென்று கொண்டிருந்தார். ‘ஐயோ குளிர்கிறதே’ என்று நடுங்கிக் கொண்டே ஒருவன், தீ மூட்டி அதன் அருகில் அமர்ந்து கொண்டிருந்தான். துறவி நகைத்துக் கொண்டே சென்றார். சில மாதங்கள் கழிந்து திரும்பி வரும்போது அவன், ‘ஆ என்ன புழுக்கம்’ என விசிறிக் கொண்டேயிருந்தான். அதற்கும் துறவி நகைத்தபடியே சென்று கொண்டிருந்தார்.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களுக்குத் தேவை என்பது இக்கதையின் மூலம் தத்துவ நெறியாக உணர்த்தப்படுகிறது. இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இக்கதை வற்புறுத்துகிறது. வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்களை உடையது. அது ஒரே மாதிரியான சுகங்களைத் தராது. துக்கங்களையும் நாம் சுகமாக்கிக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், துறவி கண்ட ஒருவனைப்போலக் ‘குளிர்கிறதே’ என்று தீ மூட்டிக் கொண்டும்,  சில மாதங்கள் கழித்துப் பார்க்கும்போது, ‘புழுக்கம்’ என்று விசிறிக் கொண்டும்தான் இருக்க வேண்டும். ‘வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ள வேண்டும்’ என்பதே துறவியின் நகைப்பின் மூலம் அறியப்படும் கருத்தாகிறது.

    • அற்புதம் - சிறுகதை

    அந்தத் துறவி வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். அவர் சிஷ்யர்கள் இப்போதாவது ஏதாவது நடக்குமா என்று ஆவலுடன் இருந்தார்கள். ‘எனக்கு மரணம் நெருங்கிவிட்டது.’ என்றார் குரு. ‘மற்றவர்களைப் போல் உங்களுக்கும் மரணம் என்றால் உங்களுக்கும் சாதாரணமானவர்களுக்கும் என்ன வேறுபாடு?’ பொறுமையிழந்த ஒருவன், அப்படிச் சொன்னாலாவது ஏதாவது செய்துகாட்டித் தன் சக்தியை நிரூபிப்பாரா என நினைத்தான்.

    ‘மற்றவர்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். மரணம் ஒரு நிகழ்வு என நான் நினைக்கிறேன். தூங்குவது போல் ஒரு தேவையாய் நான் கருதுவதால், அச்சமில்லாமல் வழிபாட்டுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன்.’ குழந்தைபோல் அவர் சிரிக்க, அவர் உயிர் பிரிந்தது.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. மரணத்தை ஒரு நிகழ்வாகக் கருதினால் அதனால் ஏற்படும் துக்கம் நம்மைப் பாதிக்காது. மரணத்தை ஒரு தேவையாய்க் கருதி அதை ஏற்றுக்கொள்ளும் பொழுது அது அச்சத்தைத் தராது. மரணத்தைக் கண்டு பயந்தால் அதை நாள்தோறும் நாம் சந்திக்க வேண்டி வரும். மரணத்தைக் கண்டு கலங்காத பெரு வாழ்வு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன்மூலம் அறியப்படும் தத்துவ நெறியாகிறது. இக்கதையில் இடம்பெறும் துறவி ஏதாவது அற்புதத்தை நிகழ்த்தி மரணத்தைத் தள்ளிப்போடாமல் அதை ஒரு தேவையாய் ஏற்றுக் கொள்வதன் மூலம் அச்சமில்லாமல், ஒரு குழந்தைபோல் அவர் சிரிக்க உயிர் பிரிகிறது. இதன் மூலம் துறவி 'மரணபயம் கூடாது' என்பதற்கு வழிகாட்டி ஆகிறார் வழிகாட்டலுக்கு உரியவராகின்றார்.

    • பேச்சு - சிறுகதை

    பக்கத்து ஊரில் ஒரு ஞானி வந்திருப்பதாகவும், அவர் நன்றாகப் பேசக் கற்றுத் தருவதாகவும் ஒருவன் கேள்விப்பட்டான். அவனுக்கு ஆசை, ‘தான் பேசுவதை யாரும் ரசிப்பதில்லையே’ என்ற குறை நீங்க வேண்டுமென்று. அவரிடம் சென்றான். இவருக்கா இத்தனைத் திறமை என நினைக்கும்படியாய் எளிமையுடன் ஞானி இருந்தார். 'எனக்கும் சுவையாய்ப் பேச வேண்டும் என்று ஆசை' என்றான். ‘ஒரு மாதத்திற்கு நீ யாருடனும் பேசாமல் இருக்க வேண்டும் சம்மதமா?’ என்றார் ஞானி.

    ‘நான் பேசக் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன். மௌனத்தையல்ல’ என்றான் அவன். ‘மௌனத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டால்தான் வார்த்தைகளின் உண்மையான சக்தி புரியும். நான் எதையும் எதிர்மறையிலிருந்து தொடங்குவேன். உண்மை, எதிர்மறையையும் உள்ளடக்கியது. நன்றாகப் பேசுவது நிறையப் பேசுவது அல்ல. சரியாகப் பேசுவது; அளவுடன் பேசுவது, அடுத்தவர்களுக்குப் புரியும்படியாகப் பேசுவது’ என்றார் ஞானி. இப்போது அவனுக்குப் புரிந்தது.

    • கதை கூறும் தத்துவ நெறிகள்

    ஒரு மனிதன் பேசும்பேச்சு எத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை, இச்சிறுகதை தத்துவ நெறியாக விளக்கிச் செல்கிறது. உண்மை எதிர்மறையை உள்ளடக்கியிருப்பதால் ஒருவர் நன்கு, பிறர் விரும்பும்படி பேச வேண்டுமானால் முதலில் மௌனத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மிகச் சரியாக, அளவாக, பிறருக்குப் புரியும்படியாகப் பேசக் கற்றுக்கொள்ள முடியும் என்பது அறியப்படுகிறது. ஆகவே பிறரைப் புண்படுத்தாமல்,  தேவையற்ற வார்த்தைகளைப் பேசாமலிருக்க மௌனத்தைப் பற்றியும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதைத் துறவியின் கருத்துகள் வலியுறுத்துகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 11:50:03(இந்திய நேரம்)