Primary tabs
-
6.2 சிவசங்கரியின் படைப்புகள்
சிவசங்கரி 1942இல் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். இவர் தமிழில் பிரபல நாவலாசிரியராக விளங்குகிறார். இவரது படைப்புகள் உலக சமுதாயத்திலும், சொந்த வாழ்விலும் இருக்கும் பல நிகழ்வுகளை வெளிப்படுத்துவனவாய் உள்ளன. இவரது படைப்புகள் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. சமுதாய நிகழ்வுகளை அக்கறையோடு அணுகி, அதனால் ஏற்படும் விளைவுகளைத் தைரியமாக எதிர்கொள்ளும் திறமை படைத்தவராக இவர் விளங்குகிறார். ''ஒரு மனிதனின் கதை'' என்ற இவரது படைப்பு இவரைத் தமிழக மக்களிடையே பிரபலமாக்கியது. அந்தக்கதை தொலைக்காட்சித் தொடராகவும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
- படைப்புகள்
இவர் 30 நாவல்களையும், 13 பயணக் கட்டுரைகளையும், 150 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவற்றுள் பல ஆங்கிலத்திலும், பிற மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கியங்கள் மூலம் இந்தியாவை ஒருமைப்படச் செய்யவேண்டும் என்பதே இவருடைய விருப்பமாகும். இவருடைய ‘Knit India through Literature’ என்ற செயல்திட்ட ஆய்வானது அரிய முயற்சியாக அமைந்தது.
சிவசங்கரியின் படைப்புகளில் ஒரு மனிதனின் கதை, அவன், நண்டு, வேரில்லாத மரங்கள், அம்மா சொன்ன கதைகள் ஆகியவை சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
கைலாசம் என்பவர் சொல்வது, நினைத்துப் பார்ப்பது போல் இக்கதை அமைந்துள்ளது.
அத்தைக்கு அவரைச் ''சமூக சேவகி'' என்று குறிப்பிட்டால் பிடிக்காது. ''நம் உடம்பை, நம் வீட்டை, நம் உடைமைகளைச் சுத்தமாக அழகாக வைத்துக்கொள்ளப் பாடுபடுகிறோம். ஆனால் தான் ஸ்வாசிக்கும் காற்றை, வசிக்கும் தெருவைப் பராமரிக்க ஒருவர் முன்வரும்போது மட்டும் எதனால் அவருக்குச் சமூக சேவகி பட்டம்? ...ம்? இப்படிக் கூட்டம் கூட்டி ஒதுக்கிப் பேசுவதனாலேயே நமக்கெல்லாம் எது நம் கடமை, பொறுப்பு என்பது கூட மறந்துபோய் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை, அடுத்தவரைக் குறை சொல்லும் குணம் வந்துவிட்டது. தெருவில் சின்னதாக ஒரு குழி இருந்து, அதில் ஒரு குழந்தை தடுக்கி விழுந்ததும் நாம் என்ன செய்கிறோம்? முதல் மந்திரியிலிருந்து கார்ப்பரேஷன் கடைநிலை ஊழியர் வரை திட்டித் தீர்க்கிறோம். அப்புறம் அத்துடன் நம் வேலை முடிந்தது என்று சும்மா இருந்து விடுகிறோம். ரைட்? இதைத் தவிர்த்து ஒரு கூடை மண்ணை எடுத்து வந்து அந்தக் குழியில் போடுவது பிரச்சனைக்கு நம்மாலான உதவியாக இருக்கும் என்று எத்தனை பேர் செயல்படுகிறோம், இல்லை நினைத்துத்தான் பார்க்கிறோம்? ம்.'' என்பார்.
கைலாசத்தின் நட்புறவிற்கு உரியவர்களாக நண்பர்களும், நாணாவின் அத்தையும் விளங்குகின்றனர். கைலாசம், அத்தையுடன் நட்புறவு கொள்வதற்கும், அவருடைய அறிவுரைகளை ஏற்று நடப்பதற்கும் அவர் இளைய தலைமுறையினரின் மனத்தைப் புரிந்து நடந்து கொள்வதே காரணமாக அமைகிறது. அத்தை கூறும் சமூகச்சேவை பற்றிய கருத்துகள், அறிவுரைகள் இளைய தலைமுறையினரைச் சிந்திக்க வைக்கின்றன. அத்தை சமூக அக்கறையுடன் கூறும் அறிவுரைகள் அனைத்தும் அவ்வப்போது கைலாசத்தின் நினைவில் வந்துபோகிறது. அவனைச் செயல்படத் தூண்டுகிறது.
குப்பை பொறுக்குபவன் குப்பைத்தொட்டியைக் கலைத்துப் போட்டதால் பறந்த காகிதம் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் இவன் வீட்டு வாசலையும் எட்டிப் பார்த்தது. அப்பொழுது அத்தை பேசியது நினைவுக்கு வர, அந்தப் பறக்கும் காகிதங்களைப் பொறுக்கிக் குப்பைத்தொட்டியில் போட்டு விடலாமா? என்று நினைத்தான். ஆமாம். ‘நான் சுத்தம் செய்வதால் மட்டும் இந்தத் தெரு சுத்தமாகிவிடுமா?’ என்று எண்ணியவனாய், பேசாமல் இருந்து கொண்டான். ‘பிளாஸ்டிக் பேப்பரை எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடலாமா?’ என்று மீண்டும் யோசித்தான். இங்ஙனம் கைலாசத்தின் ஒவ்வொரு செயலிலும் அத்தை நட்புடன் எட்டிப் பார்த்தாள். அத்தையின் பேச்சுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன.
கைலாசத்தின் வீட்டுப் படிக்கட்டுகளில் லேசாக வெடிப்புக் கண்டிருந்த தரையில் சாரியாய் எறும்பு ஊர்வலம் சென்றது.
''இந்தப் பிள்ளையார் எறும்புகளுக்கு இருக்குற சுறுசுறுப்புல, சமர்த்துல, பொறுப்புல பாதிகூட இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு இருக்கறதில்லை'' என்று இரண்டு நாட்கள் முன் அதே எறும்புக் கூட்டத்தைப் பார்த்துவிட்டுப் பேப்பரும் கையுமாய் உட்கார்ந்திருந்த அப்பா விமர்சித்தது நினைவுக்கு வர, கைலாசம் ''ப்ச்'' என்று கோபத்துடன் சூள் கொட்டினான்.
பிறகு, அந்தக் கோபம் மாறாமலேயே முன்னால் நகர்ந்து எறும்பு ஊர்வலத்தின் நடுவில் விரலால் ஒரு கோடு இழுத்தான். மோப்ப சக்தியின் உதவியுடன் ஒன்றின்பின் ஒன்றாகச் சென்றுகொண்டிருந்த எறும்புகளின் ஊர்வலம் தடைப்பட்டுப்போக, திடுமென உண்டான குழப்பத்துடன் எறும்புகள் தாறுமாறாக இங்கும் அங்கும் ஓடியது குட்டியாக ஒருவித மகிழ்ச்சியை உண்டாக்க, கைலாசம் பொந்துக்கு அருகில் இன்னொரு தரம் கோடு கிழித்து, இன்னும் கொஞ்சம் குழப்பத்தை மற்ற எறும்புகள் நடுவிலும் ஏற்படுத்தினான்.
கோடு போட்டதினால் உண்டான குழப்பம் மறைந்து மறுபடியும் தங்கள் ஊர்வலத்தைக் கர்ம சிரத்தையுடன் எறும்புகள் மேற்கொள்வதைப் பார்த்தவாறு கைகளைத் தலைக்குமேல் உயர்த்திச் சோம்பல் முறித்த நிமிஷத்தில், மீண்டும் அம்மா இன்னும் கொஞ்சம் கத்தலாக அழைப்பது காதில் விழுந்தது.
எறும்பு ஊர்வலத்தில் நாலு எறும்புகள் கஷ்டப்பட்டு ஒரு அரிசியைப் பொந்துக்கு அருகில் இழுத்துச் செல்வதைப் பார்த்தபோது காரணம் புரியாமல் ஒரு நமநமப்பு எழ, கைலாசம் சட்டென்று குனிந்தான். ஆள்காட்டி விரலால் அந்த அரிசியை லேசாகச் சுண்டிவிட்டான். அரிசி இரண்டடி சென்று மூலையில் விழ, எறும்புகள் உணவைப் பறிகொடுத்த கவலையோடு என்னவோ ஏதோ என்று பயந்து தறிகெட்டு ஓடிய காட்சி சின்னதாக ஆனால், குரூரமான மகிழ்ச்சியை உள்ளுக்குள் பரப்புவதை உணர முடிய, மெல்ல நடந்து வீட்டுக்குள் சென்றான்.
அவனுடைய அம்மாவும் என்னால முடியாத வேலையை நீ செய்து என் கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? என்று கேட்டபொழுது மீண்டும் இவனது மனத்திற்குள் அத்தை சொன்ன வார்த்தைகள் சவுக்கால் அடித்தது போலிருந்தது. வாயில் போட்ட சாதம் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கையை உதறிக்கொண்டு எழுந்தான். எறும்புகளின் வரிசையைக் கலைத்துக் குழப்பத்தை உண்டாக்கிய அவன் மூலையில் கிடந்த அரிசியைத் தேடி எடுத்து அதன் பொந்தினுள் ''ஸாரி'' என்று கூறிப் போட்டான். வாசற்படியிலும், தெருவிலும் கிடக்கும் காகிதங்களைப் பொறுக்கிப் பந்தாகச் சுருட்டிக் குப்பைத் தொட்டியில் போட்டான். அம்மாவிடம் ''நீயும், நானும் சேர்ந்து சாப்பிடலாமா?'' என்று இதமான குரலில் கேட்கிறான். இம்மாற்றங்கள் அனைத்தும் அத்தையின் நட்புறவு ஏற்படுத்திய மாற்றங்களாகவே அறியப்படுகின்றன.
பாபு, நாணா, சுரேஷ், கைலாசம் இவர்கள் நால்வரின் தோழமை உறவு இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. இவர்கள் நால்வரும் சேர்ந்துவிட்டால் ஊர் சுற்றல் மற்றும் ஒரே கொண்டாட்டம்தான். சுரேஷ்க்கு வேலை கிடைத்ததைக் கொண்டாடும் பொருட்டு இவர்கள் ஜாலியாக இருந்ததையெல்லாம் அத்தையிடம் கூறி மாட்டிக் கொள்கின்றனர். அத்தை புரிந்து கொள்வார்கள் என்ற தைரியத்தில் நாணா உண்மையைக் கூறினான். ''உங்களைப் பொறுத்தவரை கொண்டாட்டங்கள் என்றால் குடிப்பதும், சிகரெட் குடிப்பதும்தானா?'' என்று கேட்க, நால்வரும் வாயடைத்துப் போயினர். ''உங்களைப் பெற்றவர்கள் சம்பாத்தியத்தில் இப்படியெல்லாம் செலவழிப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா?'' என்றார். இதன் பிறகு பாபு அத்தை சொன்னது உறுத்தவே, ''சிகரெட்டை இனி நான் தொடவில்லை'' என்று கூறுவதும், அத்தையின் அறிவுரைகளைக் கைலாசம் ஏற்றுச் செயல்படுவதும் நட்புறவின் சிறப்பினைக் காட்டுவதாகிறது. நாணாவின் அத்தை கூறியதை அனைவரும் ஏற்று நடப்பதும், நடக்க முயற்சி செய்வதும் நண்பர்களின் தோழமையுறவினைச் சிறப்பாக வெளிப்படுத்துவதாகிறது.
இங்ஙனம் நண்பர்கள் வெளிப்படுத்தும் தோழமை உறவும், அத்தையின் மூலம் வெளிப்படும் நட்புறவும் இக்கதையில் எடுத்துரைக்கப்படுகின்றன.
படைப்பாளரின் சிந்தனைகள் சமூக அக்கறையுடன் கூடிய நட்புறவிற்கு இடமளிக்கும் வகையில் வெளிப்பட்டுள்ளன. எதார்த்தமாக, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துகளாக இவரது சமூகச் சிந்தனைகள் வெளிப்பட்டுள்ளன. சுயநலமின்றி வாழும் வாழ்க்கையின் மூலம் மட்டுமே சமூக அக்கறையை வெளிப்படுத்த முடியும் என்பது அறியப்படுகிறது. தனி மனிதர் ஒவ்வொருவரும் சமூகத்தை நேசிப்பதன் மூலம் சமூகம் நலம் பெற இயலும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. சமூக வாழ்க்கையில் ‘கேரிங் அண்ட் ஷேரிங்’ தேவை என்பது உரைக்கப்படுகிறது. இச்சிறுகதை காட்டும் படைப்பாளரின் சிந்தனைகளைக் கீழ்க் குறிப்பிட்டவாறு அறிந்து கொள்ளலாம்.
-
சமுதாயப் பிரச்சனைகளை மனிதநேயத்துடன் அணுக வேண்டும் என்பது உரைக்கப்படுகிறது.
பெரியவர்கள் இளைய தலைமுறையினரின் மனத்தைப் புரிந்து கொண்டு, பழகி, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது.
சமூகப் பிரச்சனைகளுக்கு அரசாங்கத்தையும், அதன் தொடர்பான மற்றவர்களையும் குறைகூறுவதைத் தவிர்த்து, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தம்மாலான உதவிகளைச் செய்ய ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்பது உணர்த்தப்படும் கருத்தாகிறது.
நம் உடம்பையும், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் நாம் நம் வீட்டுக்குப்பையைத் தெருவில் கொட்டுவதை ஏன் தவிர்க்க மாட்டோம் என்கிறோம். ஏனென்றால் தெரு நம்முடையது என்ற அக்கறை இல்லை. அடுத்தவர்களைப் பற்றிய கரிசனம் நமக்குக் குறைந்து வருகிறது. அக்கறையும், பகிர்ந்து கொள்ளுதலும் மறந்துவிட்ட நிலையில் மனதானது குறுகிப் போய்விடுகிறது. சுயநலம் தலை எடுக்கிறது என்ற படைப்பாளரின் கருத்துகள் மூலம் சுயநலம் தவிர்த்து மற்றவர்கள் மீது நாம் அக்கறை கொள்ளும் பொழுதுதான் சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்பது உரைக்கப்படுகிறது.
பியர் குடிப்பது, சிகரெட் குடிப்பது, ஊர் சுற்றுவது ஆகிய இளைய தலைமுறையினரின் கொண்டாட்டங்களை வன்மையாகக் கண்டிக்கிறார் படைப்பாளர். ''உங்களைப் பெற்றவர்கள் சம்பாத்தியத்தில் இப்படியெல்லாம் செலவழிப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா?'' என்று மென்மையாகக் கேட்பதன் மூலம் இளைய தலைமுறையினரின் செய்கைகளைச் சுட்டிக்காட்டிச் சிந்திக்க வைக்கிறார்.
இளைஞர்களைச் சிந்திக்க வைப்பதன் மூலம் அவர்கள் திருந்துவதைக் காண முடிகிறது. சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுவதும், கேரிங் அண்ட் ஷேரிங் கை உணர்ந்த நிலையில் கைலாசம் அவன் அம்மாவிடம் அன்பு பாராட்டுவதும் இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகின்றன.
மென்மையான, இயல்பான அணுகுமுறைகளின் மூலம் இளைய சமுதாயத்தினரை நாம் விரும்பிய வண்ணம் மாற்றமுடியும் என்பது படைப்பாளரின் உறுதியான கருத்தாகிறது.
சமூக அக்கறையை இளைய தலைமுறையினரிடையே ஊக்குவிப்பதன் மூலம் புதிய சமுதாயம் உருவாக்கலாம் என்பது குறிப்பிடத் தகுந்த கருத்தாகிறது.