Primary tabs
6.4 பெண் படைப்பாளர்களின் நோக்கும் போக்கும்
எந்த ஒரு படைப்பாளனும் ஏதாவது ஒரு நோக்கத்தினை மனத்தில் கொண்டே படைப்பிலக்கியப் பணியினை மேற்கொள்ள முடியும். அவ்வகையில் அவர்களது பணி இலக்கியப்பணியாகவும் அமையலாம். அன்றிச் சமூகப்பணியாகவும் விளங்கலாம். பெண் படைப்பாளர்கள் ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் சிறுகதைகளின் மூலம் அவர்கள் சமூக நோக்குடன் கூடிய படைப்பிலக்கியப் பணியினை மேற்கொண்டுள்ளது அறியப்படுகிறது. இப்பகுதியில் அவர்களது நோக்கினையும் சிறுகதைகளின் போக்கினையும் பின்வருமாறு அறியலாம்.
- ராஜம் கிருஷ்ணன் சிறுகதையின் நோக்கம்
இவருடைய சிறுகதையின் மூலம் இவரது சமூக நோக்கம் அறியப்படுகிறது. காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் சாதியின் பெயரால் பாதிக்கப்படக் கூடாது என்பது இவரது சமூக நோக்கமாக அறியப்படுகிறது.
பெண்கள் பொருளாதார வலிமை பெற்றவர்களாக விளங்குவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளிலிருந்து ஓரளவு தம்மைக் காத்துக்கொண்டு வாழ முடியும் என்பது உரைக்கப்படுகிறது. கணவன் உடனில்லாத சூழ்நிலையில் மனைவி அனுபவிக்கும் துன்பங்கள் காட்டப்பட்டுக் கணவனின் பாதுகாப்புடன் ஒரு பெண் வாழும் நிலையில் கூட்டுக் குடும்பச் சிக்கல்களைக் களையலாம் என்பது உணரப்படுகிறது. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் பெற்றோரின் போக்கு மாற வேண்டும் என்பது உரைக்கப்படுகிறது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் குடும்ப நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கிச் சமூகச் சிக்கலாக உருவாக்கிவிடக் கூடாது என்பது கதையின் போக்காக அமைகிறது.
- சிவசங்கரி சிறுகதையின் நோக்கும் போக்கும்
இவரது சிறுகதைகளில் சமூக அக்கறையும், சமூகச் சிந்தனையும் படைப்புகள் நோக்கமாக உருப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.
இவரது நோக்கத்திற்கு ஏற்ற போக்கினை இவரது சிறுகதையில் காண முடிகிறது. நம் உடைமைகளைப் பேணுவதுபோல நாம் வசிக்கும் தெருவையும், காற்றையும் பேணவேண்டும் என்பது அறிவுரையாக வெளிப்பட்டு, சமூக நோக்கத்தை நிறைவேற்ற இடம்தருகிறது. அக்கறையையும், பகிர்ந்து கொள்ளுதலையும் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே சுயநலத்தைத் தவிர்க்க முடியும். சமுதாயத்தை நேசிக்க முடியும் என்பது அறிவுறுத்தப்படுகிறது. தாய், தந்தையரின் வருமானத்தில் வீணாகச் செலவழித்து வாழாமல் சுய சம்பாத்தியத்தில் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சிறுகதையின் போக்காக வெளிப்பட்டுக் கதையின் நோக்கத்தை நிறைவேற்றுகிறது.
- இந்துமதி சிறுகதையின் நோக்கும் போக்கும்
இவரது சிறுகதை சமூக நோக்கம் ஒன்றையே மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. சமூக மக்கள் தங்களுக்குள் தேவையான உதவிகளைச் செய்து வாழ்வதையே சமூக நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் படைப்பாளர் தம்முடைய நோக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக சேவை செய்பவர் மற்றவர்கள் உதவிசெய்ய மறுக்கும் நிலையில் கூட அதைப் பொருட்படுத்தாமல் கிழவியைக் காப்பாற்ற முயற்சி செய்வதன் மூலம் அவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகிறார். குப்பத்தின் சுகாதாரம் அற்ற சூழலும், ஏழ்மையும், அதன் பரிதாப நிலையும், படைப்பாளரின் சிந்தனை மூலம் வெளிப்பட்டு இத்தகைய சமூகங்கள் மாற வேண்டும், முன்னேற வேண்டும் என்பது உரைக்கப்பட்டு, கதையின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகிறது. குப்பத்து மக்கள் சுயநலமற்றவர்களாகி, பிறருக்கு உதவும் வாழ்க்கையை மேற்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. மனிதநேயம், மனித உயிர் விலை மதிப்பற்றது என்பவற்றை உணர்ந்து, தனிமனிதன் செயல்படுவதன் மூலமே சமூகம் உயர முடியும் என்பது அறியப்படுகிறது. இதுவே சமூக நோக்கத்தினை நிறைவேற்ற உதவும் போக்குகளாகப் படைப்பாளரால் உரைக்கப்பட்டுள்ளன.
6.4.1 பெண் படைப்பாளர்களின் எதிர்பார்ப்புகள்
இப்பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் மூலம் பெண் படைப்பாளர்களின் சமூக எதிர்பார்ப்புகளாகக் கீழ்வருவனவற்றைக் காணலாம்.
- ராஜம் கிருஷ்ணன் அவர்களின் சமூக எதிர்பார்ப்பு
பெண் கல்வியின் தேவை வலியுறுத்தப்படுகிறது.
தேவையான சமூக மாற்றங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்களாகத் தனிமனிதர்கள் விளங்க வேண்டும்.
குடும்பத்தினர் பிறருடைய மனதைப் பாதிக்காத வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
பெண்கள் பெண்களுக்கு எதிரியாகாமல் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுபவர்களாக விளங்குதல் வேண்டும்.
மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் சாதி, மத, பேதங்களைக் களைதல் வேண்டும்.
தம்மைப்போலப் பிறரையும் கருதும் மனப்போக்கினைப் பெறல் வேண்டும்.
- சிவசங்கரி அவர்களின் சமூக எதிர்பார்ப்புகள்
-
பெற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
-
இந்த உலகத்தை, தாம் வாழும் சமூகத்தை, சுற்றுப்புறத்தைத் தம்முடையதாகக் கருதி வாழும் மனப்போக்கினை, அக்கறையை, பகிர்ந்து கொள்ளுதலைச் சமூகத்தினர் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகிறது.
பொதுப் பிரச்சனைகளில் தம்மாலான உதவிகளைச் செய்ய ஒவ்வொருவரும் முன் வருதல் வேண்டும். பொதுப் பணிகளைச் செய்வதற்குப் பட்டமோ, பதவியோ தேவையில்லை என்பதை உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.
-
இளைய தலைமுறையினரின் மன உணர்வுகளைப் புரிந்து செயல்படும் பெற்றோர்களே தம் பிள்ளைகள் சிறப்பாக வாழ வழிகாட்டமுடியும்.
-
இளைஞர்களை நெறிப்படுத்த அவர்களுக்கு அறிவுரைகளையும், வழிகாட்டலையும் மேற்கொண்டால் மட்டுமே போதுமானது. அடக்குமுறையைக் கையாள்வதன் மூலம் இளைஞர்கள் நெறிப்படுத்தப்படாமல், வழிதவறிப் போவதையே காணமுடிகிறது.
இளைஞர்களிடம் சுயமுயற்சி, சுயகற்றல், சுயசம்பாத்தியம் எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர்களின் சிக்கல்களைத் தீர்க்க, புரிய வைத்தலும், தெளிவுபடுத்தலுமே தேவை என்பது உணர்த்தப்படுகிறது. இத்தகைய இன்றைய தேவையாக உள்ள அணுகுமுறையின் மூலமே அவர்கள், சமூகத் தேவைகளை உணர்ந்தவர்களாகச் செயல்பட வைக்க முடியும்.
பிறர் மீது அக்கறை, பிறரிடம் பகிர்ந்து கொள்ளல் ஆகியவற்றை, சமூகத்தினர் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
- இந்துமதி அவர்களின் சமூக எதிர்பார்ப்புகள்
மனித நேயத்தால் சமூகம் கட்டுண்டு செயல்படுதல் அவசியம்.
மனிதன் மனிதனாக வாழவும், பிறர் நலம் பேணவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
முதியவர்களைப் பேணவும், மதிப்பளிக்கவும் வல்ல சமூகம் உருவாதல் வேண்டும்.
சுயநலமும், பொருளாதாரத் தேவைகளும் மனிதத் தன்மையை இழக்கச் செய்கின்றன. ஆகவே மனிதன் இக்குறைபாடுகளை வென்று மனிதத்தன்மை உடையவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ளுதல் சமூக எதிர்பார்ப்பாகக் கருத இடமளிக்கிறது.
துன்பத்தில் உழல்பவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் அதை மேலும் அதிகப்படுத்தாமலிருக்க வேண்டியது எதிர்பார்ப்பாகிறது. அதை ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ளல் வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாகிறது.
சமூக சேவை ஆற்றுபவர்களுக்கு மட்டுமே பரிவு, கருணை, மனித நேயம் இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வுகள் இருக்க வேண்டும். தனி மனிதர்கள் சமூகத்தை அரவணைத்துச் செல்லும் அளவிலேயே சமூக இடர்ப்பாடுகள் குறைய ஏதுவாகும் என்ற வகையில் படைப்பாளரின் எதிர்பார்ப்பானது அமைகிறது.
6.4.2 சமூக முன்னேற்றத்திற்கான வழிவகைகள்
மேற்கண்ட வகையில் மூன்று பெண் படைப்பாளர்களின் சிறுகதைகளும் சமூக முன்னேற்றத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. இச்சிறுகதைகள் குடும்பம் என்னும் சமூகம் தன்னுடைய சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டு ''குடும்பம் ஒரு நல்ல பல்கலைக் கழகமாக'' உருவாக மேற்கொள்ள வேண்டிய வழிவகைகளை எடுத்துக்கூறுவனவாக உள்ளன. இளைய தலைமுறையினரின் குடும்ப மற்றும் சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் கூறுமளவிலும் இச்சிறுகதைகள் சிறப்புப் பெறுகின்றன. கீழ்மட்டச் சமூகங்களின் சமூகச் சிக்கல்களை எடுத்துக்கூறி அதன் முன்னேற்றத்திற்கான
வழிவகைகளை எடுத்து உரைப்பனவாகவும் இச்சிறுகதைகள் அமைந்துள்ளன. சமூக முன்னேற்றத்திற்காக இச்சிறுகதைகள் கூறும் வழிவகைகளைக் காணலாம்.- வழிவகைகள்
பெண்கல்வியை ஊக்குவிக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும் வேண்டும். பெண்கள் பொருளாதார வலிமை பெற்றுச் சமூகத்தில் தங்களின் நிலையை உயர்த்திக்கொள்ள வேலைவாய்ப்பு, சமூகச் சமநிலை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும். சாதி, மத பேதங்களுக்கு இடம்தராத சமூக அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்.
இளைஞர்களை உளவியல் நோக்கில் அணுகுதல் அவசியம். இளைஞர்களுக்கு உளவியல் கல்வி, பாலுணர்வுக் கல்வி, மக்கட்தொகைக் கல்வி, சுற்றுப்புறச்சூழல் கல்வி, மதிப்புணர் கல்வி ஆகிய கல்வி முறைகளைப் போதிக்க வேண்டும். பெற்றோர்கள் இளைய தலைமுறையினர்களுக்கு நண்பர்களாக விளங்கி அவர்களின் குறைபாடுகளைக் களைந்து அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்தல் அவசியம். சமூகக்கல்வியை அவர்களுக்கு வழங்கி, அவர்கள் சிறந்த அனுபவ அறிவைப் பெற்றிட உதவுதல் வேண்டும்.
குப்பத்து மக்களின் சமூகப் பொருளாதார நிலைகளை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். குப்பத்து மக்களுக்குச் சுகாதாரக்கல்வி, விழிப்புணர்வுக்கல்வி, மனிதநேயக்கல்வி ஆகியவற்றை வழங்கி அவர்களின் தரத்தை உயர்த்தப் பாடுபடல் வேண்டும். கீழ்மட்டச் சமூகத்தினரின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதன் மூலமே அவர்கள் அழகுணர்வைப் பற்றிச் சிந்திக்க முடியும் என்பதை மனத்தில் கொண்டு அவர்களின் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடல் வேண்டும்.