தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-இந்துமதியின் படைப்புகள்

  • 6.3 இந்துமதியின் படைப்புகள்

    இவரது படைப்புகள், ஆர்ப்பாட்டம் இல்லாமல், சொல்லவரும் கருத்தை மிகவும் ஆழமாக மனத்தைப் பாதிக்கும் வண்ணம் வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றன. இவ்வகையில் இவர் திறமை மிக்க படைப்பாளராகவே கருத இடமளிக்கிறார். கதையோட்டம் இவரது சிறுகதைகளில் இயல்பாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. கதை மாந்தர்கள் ஒரு முழுமைத்தன்மை பெற்றிருப்பதை இவரது கதைகளின் மூலம் அறியலாம். இவரது சிறுகதைகள் சமுதாயப் பிரச்சனைகளையும், சமூகக் கொடுமைகளையும் சிந்திக்க இடம் தருகின்றன. இவரது கதைகள் சமூக விழிப்புணர்ச்சிக்கு வழி ஏற்படுத்தித் தருகின்றன. இப்படைப்பாளர் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதை இவரது கதைகள் உணர்த்தத் தவறவில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் மனித நேயத்தோடு செயல்பட்டால் மட்டுமே சமூகப் பிரச்சனைகள், சமூகக் கொடுமைகள் நிகழாமல் நாட்டைக் காக்க முடியும் என்பது இவர் வலியுறுத்தும் கருத்தாகிறது.

    • படைப்புகள்

    இவரது நாவல்கள் நவீனத்தன்மையோடும், நடைச்சிறப்போடும் அமைகின்றன. சமூக வாழ்வின் குறிப்பிட்ட பிரச்சனைகளை ஆராயும் வண்ணம் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. இவரது படைப்புகள் வாசகர்களிடையே வரவேற்புப்பெற இவையே காரணமாகின்றன.

    6.3.1 சிறுகதை - துணி

    காக்கும் கரங்கள் என்ற சேவை மையத்தில் பணியாற்றும் ரத்னாகருக்கு ஒரு போன் வருகிறது, ''அயோத்தியா குப்பத்திலே ஒரு குப்பைத்தொட்டிக்குப் பக்கத்திலே ரெண்டு நாளா வயதான கிழவி ஒண்ணு மூச்சுப் பேச்சில்லாமல் விழுந்து கிடக்குதுங்க'' என்று. ரத்னாகருக்கு நெஞ்சு பதறியது. "இரண்டு நாட்களாகக் குப்பைத்தொட்டியின் பக்கத்திலா? பார்த்துக் கிட்டு சும்மாவா இருக்கீங்க?" என்றபோது ''நாங்க என்ன சார் பண்ண முடியும்? உங்களை மாதிரி நாங்க என்ன சமூகசேவையா செய்கிறோம்'' என்றான். போன் செய்தவனைப் பற்றி ரத்னாகர் விசாரித்தபொழுது, ''என் பேரெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க? நான் என்ன சொன்னாத் தெரிகிறமாதிரி மனுஷனா? பத்திரிகைகளில் உங்க பேரை அடிக்கடி படிச்சிருக்கிறேன். அதனாலே போன் பண்ணிச் சொன்னேன். முடிஞ்சாப் போய் கிழவியைப் காப்பாற்றுங்க இல்லேன்னா விடுங்க என்பதோடு தொலைபேசித் தொடர்பை டக்கென்று துண்டித்துக் கொண்டான்.

    ரத்னாகர், தொலைபேசியில் பேசியவனைப் போலத் தன்னால் சும்மா இருக்க முடியாது என்பதை உணர்ந்து சுறுசுறுப்பானான். பூப்போட்ட துவாலையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினான். அவனிருக்கும் இடத்திலிருந்து அயோத்தியா குப்பம் அருகில் இருந்ததால் பத்துநிமிட நடைதானே என்று நடந்தான். கையில் இருக்கும் நாற்பது ரூபாயில் கிழவியை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஆட்டோ செலவிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணினான்.

    அவன் போனபோது குப்பம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. எல்லா இந்தியக் குடிசைகளைப் போலவே அவ்விடமும் ஏழ்மை நிறைந்து ஆரோக்கியமற்றதாகக் காட்சியளித்தது. குடிசைகளுக்கு நடுவில் கறுப்பு நிறத் தண்ணீரோடு கூவம் கூச்சமின்றி ஓடிக்கொண்டிருந்தது. குப்பத்துக் குழந்தைகளும் கூச்சம் ஏதுமின்றிக் குடிசையை ஒட்டியுள்ள இடத்தையே கழிப்பிடம் ஆக்கிக் கொண்டிருந்தனர். கூவத்தின் நாற்றம் மற்றும் அந்த இடத்தின் நாற்றம் காரணமாக, துண்டின் நுனியால் மூக்கை மூடிக்கொண்டு அசிங்கத்தில் கால் வைத்துவிடாமல் ஜாக்கிரதையாகக் குப்பத்தின் உள்ளே நுழைந்தான் ரத்னாகர். குப்பத்தின் வாசலே தேவலாம் என்னும்படி உட்பகுதி இன்னும் மோசமாக இருந்தது. சாக்கடைத் தண்ணீரில் சொத சொதத் தரையும் அதில் குப்பையும் காகிதங்களுமாய் ஊறிக் கிடந்தது. அந்த இடத்தில் கடை வைத்திருந்த பெண்மணியிடம் கிழவியைப் பற்றி அவன் விசாரித்தான். அந்தப் பெண் விற்பது வள்ளிக்கிழங்கா? அல்லது ஈக் கூட்டமா? என்று அறியமுடியாதபடி அப்பகுதி அடிப்படைச் சுகாதார வசதியின்றி இருந்தது. அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. அந்தப் பெண் ஒரு பையனை அழைத்து "அந்தக் கிழவி கிடக்கற இடத்தைக் காட்டு" என்றாள். அதற்குக் கூட்டத்தில் இருந்தவர்கள் ''இவரு யாரு? யாரு வேணுமாம்?'' என்று விசாரிக்க, "யாரோ கார்ப்பரேஷன் ஆளு காளியம்மாக் கிழவியை விசாரிக்கிறாங்க" என்றாள்.

    அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அநேகமாக அந்தக் கிழவி இவர்களைச் சார்ந்தவளாக இருக்கலாம். ஏன் இவர்களுள் ஒருவருக்குச் சொந்தமாகக்கூட இருக்கலாம். இவர்களைக் கேட்டாலும் உண்மை வரப்போவதில்லை. எதற்குக் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். சிறுவன் வழிகாட்ட, சின்ன மலையாகக் கிடந்த குப்பைகளுக்கிடையில் குட்டை மாதிரித் தேங்கிக் கிடந்த சாக்கடை நீரின் பக்கத்தில் விழுந்து கிடந்த கிழவியைப் பார்த்தவுடன் அவன் அதிர்ந்தான். ஒரு மனித உயிர் இப்படிக் கூடவா அலட்சியப்படுத்தப்படும் என்று வருந்தினான். இதுபோன்று நினைவிழந்த நிலையில் எத்தனையோ பேரை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறான் அவன். ஆனால் இப்படிப்பட்ட பரிதாப நிலையில் ஒருவரையும் கண்டதில்லை. சற்றும் தயங்காமல் சாக்கடைத் தண்ணீரில் கால்வைத்து, குப்பைகளை மிதித்துக் கொண்டு போய்க் கிழவியை அடைந்தான். தன் தோளில் போட்ட துண்டை எடுத்துக் கிழவியின் மேலிலிருந்து இடுப்பு வரை போர்வையாகப் போர்த்தினான். பின்னர் அவளை அப்படியே தான் மட்டும் தூக்கி வந்து ஓர் ஓரத்தில் கிடத்திவிட்டுத் தன்னோடு வந்த சிறுவனைத் தேடினான். உதவிக்கு யாராவது வருவார்களா? என்று காத்திருந்தான். பின்னர் அங்கிருந்து அகன்று ஆட்டோவை அல்லது ரிக்ஷாவைக் கொண்டுவரப் போனான்.

    ஆட்டோ ரிக்ஷாக்காரன் அது போன்ற சவாரிக்கு வர மறுத்தான். ''வேண்டாம் சார். பேஜார் புடிச்ச சவாரி'' என்றான். அவன் வெறுத்துப் போனான். ''ஏம்ப்பா, நீங்கெல்லாம் மனுசங்கதானே? கொஞ்சம் கூட இரக்கம் கிடையாதா? நீங்களா வந்து உதவி செய்ய வேண்டாம். ஆனால் கூப்பிட்ட குரலுக்குக் கூடவா உதவக்கூடாது?" என்றான். "உதவலாம் சார், கிழவி பட்டுன்னு போய்ட்டா அப்புறம் போலீஸ் கேஸ்ன்னு யார் அலையறது? சமூகசேவை செய்ற உங்க மாதிரி ஆளுங்க வேலையது. இதை நான் செஞ்சா என் பொழப்பு என்ன ஆகிறது? முடிஞ்சா செய்யுங்க. இல்லனா விட்டுட்டுப் போங்க. சும்மா வம்புக்கு இழுக்காதீங்க'' என்று போய்விட்டான். அதன் பிறகு வயதான ரிக்ஷாக்காரர் ஒருவரைப் பிடித்தான். ''வயசான யாருக்கும் இந்த நிலை வரலாம் கொஞ்சம் உதவி செய்யப்பா'' என்று கெஞ்சினான்.

    வயதானதைக் காரணம் காட்டியதால் தற்காப்புப் பயத்தில் அந்த ரிக்ஷாக்காரன் சம்மதித்தான். உடனே ரிக்ஷாவில் அந்த இடத்திற்கு விரைந்து கீழே இறங்க, கிழவியின் உடலைப் பார்த்ததும் சொல்லமுடியாத அதிர்ச்சியால் ஏற்பட்ட வலியும், வேதனையும் தாங்க முடியாதவனாக நின்றான். கிழவியை விட்டுப் போன இடத்தில் குப்பை, சாக்கடைத் தண்ணீர், மொய்த்துக் கொண்டிருந்த ஈ, எறும்பு எல்லாம் அப்படியே கிடக்க, உடம்பில் போர்த்திவிட்டிருந்த துண்டு மட்டும் காணாமல் போயிருந்தது. ரிக்ஷாக்காரன் "என்ன சாமி இன்னும் நேரமாகுமா?" என்று கேட்க, சுய உணர்வு பெற்றவனாக "இதோ வந்திட்டேன்" என்று பதிலளித்தான். தன் சட்டையைக் கழற்றிக் கிழவியின் இடுப்பைச் சுற்றிப் போர்த்தினான். பின்னர்க் கிழவியைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது அவன் மனம் மிகவும் கனத்திருந்தது என்பதோடு கதை முடிவடைகிறது.

    6.3.2 படைப்பாளரின் சிந்தனைகள்

    இக்கதையின் மூலம் படைப்பாளரின் சமூக நோக்குச் சிறப்பாக அறியப்படுகிறது.

      • மனித நேயம், பரிவு, சமூகக்கடமை ஆகியவற்றை அதற்கென்று இருக்கக்கூடிய சமூகசேவை செய்பவர்கள் மட்டுமே மேற்கொண்டால் போதும். மற்றவர்கள் சமூக அக்கறை கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற அளவில் இன்றைய சமூக உறவு அமைந்துள்ளதை இக்கதை சுட்டிக்காட்டியிருக்கிறது.

      • சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழும் குப்பத்து மக்கள் காட்டப்பட்டு, அந்நிலை சமுதாயக் கொடுமையாக உணர்த்தப்படுகிறது.

      • குப்பத்து மக்கள் வாழும் பகுதிகள் சேறும் சகதியும், அழுக்கும் குப்பையும் நிறைந்த கூவமாகக் காட்சியளிப்பதையும், குடிசையின் அருகாமையிடத்தைக் குப்பத்துக் குழந்தைகள் சுதந்திரமாகக் கழிப்பிடமாக்கிக் கொண்டிருப்பதையும் படைப்பாளர் சுட்டிக்காட்டிச் சமூகத்தின் மோசமான நிலைக்காக வருந்துகிறார். இச்சமூகப் பொருளாதாரக் குறைபாடு படைப்பாளரால் சுட்டப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

      • குட்டை மாதிரித் தேங்கிக் கிடந்த சாக்கடை நீரில் விழுந்து கிடந்த கிழவியைப் பற்றி அச்சமூகத்தினர் யாரும் கவலைப்படாமல் அவரவர் வேலையை அவரவர் செய்து கொண்டிருப்பது சுயநலம் மிக்க மனிதர்களைக் கொண்ட சமூக அமைப்பை அடையாளம் காட்டுவதாயுள்ளது.

      • சமூக சேவை செய்பவர்கள் மனிதநேயத்தோடு பிறர் நலம் பேணுவது காட்டப்படுகிறது. மனிதர்கள் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டால் நாட்டின் பல்வேறு பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்க முடியும் என்பது இதன் மூலம் அறியப்படும் கருத்தாகிறது.

      • விலை மதிப்பற்ற உயிர், வயதான காலத்தில் மதிப்பற்றுப் போய்விடுவதைக் காணமுடிகிறது. உதவி செய்பவர்களுக்குத் துணை நிற்கும் மனிதர்களின் எண்ணிக்கை கூட நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதைச் சிறுகதை எடுத்துக்காட்டுகிறது. படைப்பாளரின் சமூகச்சிந்தனை வெளிப்படுகிறது.

      • பொதுமக்கள் போலீஸ், கோர்ட், விசாரணை ஆகியவற்றை முன்னிட்டுப் பிறருக்கு உதவி செய்வதைத் தவிர்த்துக் கொள்வது சமூகக் குறைபாடாகக் காட்டப்படுகிறது.

      • வயதான யாருக்கும் இந்த நிலை வரலாம் என்பதை ரத்னாகர் கூறியதைக் கேட்டு, ரிக்ஷாக்காரர் தற்காப்புப் பயத்தில் உதவிசெய்ய முன் வருகிறார். இதன் மூலம் சமூகத்தில் பிறருக்கு உதவும் நிலைகூட, சுயநலத்தின் அடிப்படையிலேயே அமைவதைக் காணமுடிகிறது.

      • உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தக் கிழவிக்கு யாரும் உதவாத நிலையில் அவள் மீது போர்த்தியிருக்கும் துண்டினை எடுத்துச் சென்றுவிடுவது சிறுமையான செயலாகப் படைப்பாளரால் சுட்டப்படுகிறது.

    இரக்கமற்றவர்களாக இருக்கும் மனிதர்கள் இணக்கமற்ற சமூக உறவிற்கு உரியவர்களாகவே இருக்க முடியும் என்பது படைப்பாளர் உணர்த்தும் கருத்தாகிறது.

    மேற்கண்ட அளவில் படைப்பாளரின் சிந்தனைகள் புதிய கருத்துகளுக்கு வழி ஏற்படுத்தித் தருகின்றன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    சங்க காலத்தின் குறிப்பிடத்தக்க பெண்பாற் புலவர்கள் மூவரின் பெயரைக் கூறுக.

    2.

    சிவசங்கரியின் சிறந்த சிறுகதைப் படைப்புகள் மூன்றனைக் குறிப்பிடுக.

    3.

    ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள உறவு நிலைகள் யாவை?

    4.

    படைப்பாளர் இந்துமதியின் சிந்தனையில் எது சிறுமையான செயலாகக் குறிப்பிடப்படுகிறது?

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 14:59:14(இந்திய நேரம்)