தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.1 இதழ்களின் நடத்தை விதிகள்

  • 5.1 இதழ்களின் நடத்தை விதிகள்

    போட்டி நிறைந்த உலகில் இதழ்களின் நோக்கம் இலாபமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வோர் இதழும் தனக்கெனத் தனித்த குறிக்கோள்களைக் கொண்டு இலங்க வேண்டும். அக்குறிக்கோள்கள் இதழுக்கு இதழ் மாறுபடலாம். இதழ்கள் பின்பற்றுகிற சில மரபுகள் உண்டு. அம்மரபுகளை நடத்தை விதிகள் எனலாம். இதழியலின் நடத்தை விதிகளை இதழாளர் சங்கங்கள் சில வெளியிட்டுள்ளன. அவற்றைக் காண்போம்.

    5.1.1 அமெரிக்கச் சங்கமும் விதிகளும்

    அமெரிக்க இதழாசிரியர்கள் பலர் கூடி இதழாசியர் சங்கம் ஒன்றை ஏற்படுத்தினர். அச்சங்கத்தினர் 1923ஆம் ஆண்டில் இதழியலாளர் பின்பற்ற வேண்டிய விதிகளை வெளியிட்டனர். அவ்விதிகள் வருமாறு :

    • பொறுப்பு (Responsibility)
    • இதழ்கள் வாசகர்களைக் கவரப் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றலாம். செய்தி வெளியீடு, கருத்து வெளியீடு ஆகியவற்றில் பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். போட்டிகள், வாசகர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்தல் முதலியவை இந்த வழிமுறைகளில் அடங்கும். இவ்வழி முறைகளைக் கையாளும்போது சமுதாய நலனைக் கெடுக்காத வகையில் இதழ்கள் செயல்பட வேண்டும். இதழ்களின் இச்செயல்பாடுகள் பொறுப்புணர்வுடன் கூடியவையாக இருத்தல் வேண்டும்.

    • இதழியல் சுதந்திரம் (Freedom of Press)
    • சட்ட வரம்புகளுக்கு உட்பட்டுச் செய்திகளை வெளியிடவும் விவாதிக்கவும் இதழ்களுக்குக் கட்டுப்பாடற்ற உரிமை இருத்தல் வேண்டும். இந்த உரிமை இதழியல் சுதந்திரம் எனப்படும்.

    • தனித்தன்மை (Independence)
    • மக்கள் நலன் சார்ந்து இதழ்கள் தனித்தன்மையுடன் இயங்க வேண்டும். அவ்வாறு தனித்தியங்கும் போது இதழ்கள் தமது சுயநலத்திற்காகச் செய்திகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் உண்மைக்குப் புறம்பாக, ஒருபக்கம் சார்ந்து செய்திகளை வெளியிடுவதும் விமரிசிப்பதும் கூடாது.

    • மிகச் சரியான உண்மை (Truthfulness and Accuracy)
    • இதழ்கள் மிகச் சரியான செய்திகளை வெளியிட வேண்டும். உண்மையாகவும் சரியாகவும் உள்ள செய்திகளை நேர்மையாக வெளியிட வேண்டும். செய்திகளை வெளியிடும் போது திரித்தோ, வேறு பொருள்தரும் வகையில் மாற்றியோ வெளியிடக் கூடாது. செய்திகளுக்கு ஏற்ற தலைப்பினைத் தருதல் வேண்டும். மாறாக, கவர்ச்சிக்காகவோ கிளர்ச்சிக்காகவோ தொடர்பின்றித் தலைப்புத் தருதல் தவறானதாகும்.

    • ஒருபாற் கோடாமை (Impartiality)
    • செய்திகளை நடுவுநிலையோடு வெளியிட வேண்டும். செய்திகளையும் அவை பற்றிய பல்வேறு கருத்துகளையும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். மாறாக, வாசகர்களைத் திசைதிருப்பக் கூடாது.

    • நேர்மையான செயல் (Fair Play)
    • இதழ்கள் நேர்மைக்கு மாறாகச் செயல்படக் கூடாது. ஆதாரமின்றித் தனிநபர் மீது குற்றம் சாட்டுவது கூடாது. செய்திகளோடு தொடர்புடையவர்கள் தரும் விளக்கங்களை ஏற்றுக் கொண்டு, தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள இதழ்கள் தயங்கக் கூடாது.

    • பண்பாடு (Decency)
    • இதழ்கள் செய்திகளை வெளியிடும் பொழுது சமுதாய நெறியிலிருந்து விலகாது இருத்தல் அவசியமாகும். கொலை, திருட்டு, வன்முறை முதலிய குற்றங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போது உணர்வுகளைத் தூண்டாமல், சமுதாயப் பண்பாட்டைச் சீர்குலைக்காமல் தரமான முறையில் வெளியிடுதல் இதழ்களின் பண்பாடு ஆகும்.

      5.1.2 இந்திய இதழியல் மன்றமும் விதிகளும்

      இந்திய இதழியல் மன்றம் (Press Council) 1966ஆம் ஆண்டு இதழ்கள் பின்பற்ற வேண்டிய நடத்தைக் கோட்பாட்டைத் (Code of Conduct) தொகுத்து அளித்தது. அதனை நாளிதழ்களுக்கும் பருவ இதழ்களுக்கும் அனுப்பியது. இவ்விதிகளை இதழியல் கலை என்ற நூல் விரிவாகக் குறிப்பிடுகிறது. அது இதழ்களின் உரிமையை ஏற்றுக் கொண்ட மன்றம் விலக்க வேண்டிய கூறுகளைப் பின்வருமாறு பட்டியல் இடுகின்றது.

      (1)

      சாதி தொடர்பான நிகழ்ச்சிகளையோ விவரங்களையோ மிகைப்படுத்தியோ, சிதைத்தோ கூறுதல்; உண்மைகளைப் போல,சரிபார்க்காத வதந்திகளையோ, ஐயப்பாடுகளையோ ஊகங்களையோ பரப்புதல்;அவற்றைப் பற்றி விமரிசித்தல்.

      (2)

      இலக்கிய நயத்தோடு அமைய வேண்டும் என்பதற்காக எதுகை மோனைக்காகவோ, அழுத்தம் தருவதற்காகவோ பண்படாத கட்டற்ற மொழி நடையைப் பின்பற்றுதல்.

      (3)

      உண்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைகளைத் தீர்க்கும் வழிமுறையாக வன்முறைக்கு ஊக்கம் தரும் முறையில் எழுதுதல்.

      (4)

      குறிப்பிட்ட இனம் அல்லது சாதி உறுப்பினர்கள் என்பதற்காக, அவர்களது நடத்தை பற்றிக் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது தனிமனிதர்களையோ, சமுதாயங்களையோ தாக்கி எழுதுதல்.

      (5)

      சாதிகள், வட்டாரங்கள், மொழிகள் முதலிய பிரிவினருக்கு இடையில் கசப்பான தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய செய்திகள், கருத்துகள் பற்றி வெறி ஏற்றும் விமரிசனங்களை வெளியிடுதல்.

      (6)

      சமுதாய ஒற்றுமையைப் பாதிக்கும் செய்திகளை, உணர்ச்சியைத் தூண்டுவதற்காக, நடந்தவற்றை மிகைப்படுத்தியோ, பெரிய தலைப்புகளோடோ, வேறுபட்ட எழுத்துகளில் அச்சிட்டோ வெளியிடுதல்.

      (7)

      பல்வேறு மதங்களைப் பற்றியோ, நம்பிக்கைகளைப் பற்றியோ, அவற்றின் நிறுவனங்களைப் பற்றியோ மரியாதையற்ற, மட்டம் தட்டுகின்ற, கேவலப்படுத்துகின்ற கருத்துரைகளைக் கூறுதல்.

      5.1.3 பன்னாட்டு உழைக்கும் சங்கமும் விதிகளும்

      உலக அளவில் இதழியல் நடத்தை விதிகளைத் தீர்மானிக்க யுனெஸ்கோ அமைப்பு அவ்வப்பொழுது சில இதழாளர்கள் மாநாட்டைக் கூட்டுவது உண்டு. 1983ஆம் ஆண்டு பிரேக் மற்றும் பாரிசு நகரங்களில் பன்னாட்டு இதழாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நிகழ்ந்தது. அப்போது வெளியிடப்பட்ட பன்னாட்டு இதழ்களின் நடத்தை விதிகள் வருமாறு :

    • செய்திகளை அறியும் உரிமை
    • உண்மையான செய்திகளை அறிந்து கொள்ளவும் அவை பற்றிய கருத்துகளைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி வெளியிடவும் பொதுமக்களுக்கு உரிமை உண்டு.

    • கொள்கைப் பிடிப்பு
    • செய்தியின் உண்மைத் தன்மையோடு எவ்வித மாற்றமும் இல்லாமல், தனித்தன்மையோடு இதழாளர்கள் வெளியிடுதல் வேண்டும். செய்திகளின் பின்னணி மற்றும் உண்மை நிலவரத்தை அறிவதில் இதழாளர்கள் கொள்கைப் பிடிப்போடு இருத்தல் வேண்டும்.

    • சமூகப் பொறுப்பு
    • செய்திகளை வெளியிடும் இதழாளர் தனது மனச்சாட்சிப் படியும், தொழில் நெறிப்படியும் எவ்விதச் சூழ்நிலைகளிலும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    • நேர்மை
    • இதழாளர் நேர்மையானவராக இருத்தல் அவசியம். தனக்குச் செய்தி தரும் நபர்களையோ, தான் பணியாற்றும் நிர்வாகத்தையோ அச்சுறுத்தல்களுக்கு அஞ்சிக் காட்டிக் கொடுத்தல் கூடாது. தனிப்பட்ட முறையில் இலஞ்சம் பெறுவது, கூடுதல் சலுகைகளைப் பெற முயல்வது, பிறர் எழுத்து, படைப்புகளைத் திருடுவது போன்ற குற்றங்கள் செய்யாது இருப்பது முதலியன நேர்மையாகும்.

    • பொதுமக்களது பங்கெடுப்பு
    • செய்தி வெளியீட்டிலும், அவற்றைத் திருத்துவதிலும், கருத்துகளைக் கூறுவதிலும் பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ள வைப்பது இதழ்களின் நடத்தை விதிகளில் இன்றியமையாதது ஆகும்.

    • சமூக மதிப்புகளை மதித்தல்
    • தனி மனிதர்களை மதிப்பதோடு, உள்நாட்டு, வெளிநாட்டுச் சட்டங்களை மதித்து, மானநட்டம், அவதூறு, இகழ்ச்சி முதலிய குற்றங்களுக்கு ஆட்படாமல் தவிர்ப்பது ஆகும்.

    • மக்கள் விருப்பத்தை மதித்தல்
    • மக்கள் சமுதாயத்தையும் மக்களாட்சி அமைப்புகளையும் பொது ஒழுக்க நெறிகளையும் மக்களது விருப்பத்தையும் மதித்தல் இதழாளர் கடமை ஆகும்.

    • உலகளாவிய சிந்தனை
    • பன்னாட்டு அறங்களையும், அமைப்புகளையும் மாநாடுகளையும், உலகளாவிய தீர்மானங்களையும் உலகளாவிய ஒருமைச் சிந்தனையையும் இதழாளர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியமானதாகும்.

    • போர் முதலிய தீமைகளை அகற்றுதல்
    • மனித இனத்தை அச்சுறுத்தும் போர், ஆயுத உற்பத்தி, ஆக்கிரமிப்பு, பலாத்காரம், இனப்பாகுபாடு, நிறவெறிப் பாகுபாடு, அடக்குமுறை, காலனியாதிக்கம், சுரண்டல் பொருளாதாரம், வறுமை, பிணி, சத்துணவின்மை முதலியவற்றை அகற்றுவதில் இதழாளர்கள் அக்கறை கொண்டிருக்க வேண்டும். இந்தத் தீமைகளை நாடு, மொழி, மதம் கடந்து அகற்றுவதற்கு இதழாளர்கள் பாடுபட வேண்டும்.

    • பன்னாட்டு உறவை வளர்த்தல்
    • நாடுகளுக்கு இடையேயான உறவையும் செய்தித் தொடர்புகளையும் பொதுமைப் படுத்துவதோடு நாடுகள் மக்களுக்கு இடையேயான அமைதிக்கும்

      உறவுக்கும் வழிவகுப்பதும் இதழாளர் கடமையாகும். இதழ்களும் இதழாளர்களும் இத்தகைய நடத்தை விதிகளை ஏற்றுச் செயல்பட்டால் சமுதாயம் நலம்பெறும்; வளம் பெறும் !

      தன் மதிப்பீடு : வினாக்கள் - I

      1.

      அமெரிக்க இதழாளர் சங்கம் எந்த ஆண்டு இதழியல் நடத்தை விதிகளை வெளியிட்டது?

      2.

      இந்திய இதழியல் மன்றம் கூறும் விலக்க வேண்டிய கூறுகளுள் இரண்டைக் குறிப்பிடுக.

      3.

      பன்னாட்டு உழைக்கும் இதழாளர் மாநாட்டை நடத்தும் நிறுவனம் எது?

      4.

      பன்னாட்டு உழைக்கும் இதழாளர் சங்கம் நடத்தை விதிகளை எந்த ஆண்டு வெளியிட்டது?

புதுப்பிக்கபட்ட நாள் : 03-10-2018 16:10:54(இந்திய நேரம்)