தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.2 இதழியல் சட்டங்கள்

  • 5.2 இதழியல் சட்டங்கள்    

    செய்திகளை வெளியிடும் உரிமை இதழ்களுக்கு உண்டு. எனினும், அயல்நாட்டு உறவு, பொது அமைதி, ஒழுங்கு, நீதிமன்ற அவமதிப்பு,    நாட்டின்    பாதுகாப்பு முதலியவற்றிற்காக அரசாங்கங்கள் இதழியல் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளன.அவை வருமாறு :

    5.2.1 வெல்லெஸ்லி பிரபுவின் திட்டம்

    விடுதலைக்கு முந்தைய   இந்தியாவில், 1799ஆம் ஆண்டு தலைமை ஆளுநர்     வெல்லெஸ்லி பிரபு இதழாளர்களைக் கட்டுப்படுத்த ஐந்து அம்சத்திட்டத்தைக் கொண்டு வந்தார்.

    • செய்தித்தாளின் கடைசிப் பக்கத்தில் அச்சிடுவோரின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

    • இதழ்    உரிமையாளர்    தலைமைச் செயலருக்கு முகவரியைத் தெரிவிக்க வேண்டும்.

    • ஞாயிற்றுக்     கிழமைகளில்     இதழ்களை வெளியிடக் கூடாது.    அரசின் தலைமைச் செயலகம் அனுமதி தந்த பிறகு இதழ்கள் வெளியிட வேண்டும்.

    • மேற்கண்டவற்றை நிறைவேற்றாதவர்கள் நாடு கடத்தப்படுவர்.

    5.2.2 செய்தித்தாள் சட்டங்கள்

    செய்தித்தாள் அவசரச் சட்டம் (1823), பதிவுச்சட்டம் (1835), வாய்ப்பூட்டுச் சட்டம் (1857), பத்திரிகைப் பதிவுச் சட்டம் (1867) ஆகிய பல சட்டங்கள் இருந்தன.
     

  • செய்தித்தாள் அவசரச் சட்டம்
  • 1823ஆம் ஆண்டு ஆடம்ஸ் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இச்சட்டத்தின்படி அச்சடித்த இதழின் ஒரு பிரதி உள்ளூர் நீதிமன்ற நடுவருக்கு அனுப்பிட வேண்டும். அனுமதி மறுக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு. அனுமதி இன்றிச் செய்தி வெளியிட்டால் நான்கு மாதச் சிறைத் தண்டனையோ நானூறு ரூபாய் அபராதமோ உண்டு.
     

  • செய்தித்தாள் பதிவுச் சட்டம்
  • இச்சட்டப்படி செய்தித்தாள் வெளியிடுபவர் அச்சக உரிமையாளர், வெளியிடும் இடம் முதலியவற்றைப் பதிவு செய்தல் வேண்டும். மீறினால் அபராதமும் தண்டனையும் உண்டு. இரண்டு முறை இச்சட்டம் திருத்தப்பட்டது. அரசுக்கு எதிரான செய்திகள் வெளியிட்டால் நாடு கடத்தப்படுவர்.
     

  • வாய்ப்பூட்டுச் சட்டம்
  • 1857ஆம் ஆண்டு இதழ்களின் சட்டம் எண் 15 கொண்டு வரப்பட்டது. சிப்பாய்க் கலகத்தை ஆதரித்த இதழ்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி அச்சகம் நிறுவ முன் அனுமதி பெறவேண்டும்; மேலும், அரசுக்கு எதிரான செய்திகளைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு.
     

  • பத்திரிகைப் பதிவுச் சட்டம்
  • பத்திரிகைப் புத்தகப் பதிவுச்சட்டம் 1867ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பத்திரிகை வெளியிடுபவர் ஒரு நீதிபதியின் முன் உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆசிரியர், அச்சிடுபவர், அச்சகப் பெயர் முதலியவற்றை இதழ்களில் குறிப்பிட வேண்டும். அச்சிட்ட இதழ்களை அரசுக்கு அனுப்ப வேண்டும். மீறினால் அபராதமும் சிறையும் உண்டு. 1872ஆம்     ஆண்டு Evidence Act    என்னும் சான்றாதாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-10-2018 16:16:41(இந்திய நேரம்)