Primary tabs
1.0 பாட முன்னுரை
ஒரு செய்தித்தாளிலுள்ள பல பணிகளில் அச்சுப்படி திருத்துதல் மிகவும் இன்றியமையாதது ஆகும். செய்தித்தாளில் வெளிவரும் ஒரு செய்தி அச்சில் வருவதற்குமுன் ஏற்படும் எழுத்துப் பிழைகள், தொடர்ப் பிழைகள், குறியீட்டுப் பிழைகள், போதிய இடைவெளியின்மை, தேவையான எழுத்தளவின்மை, வாசகரை ஈர்க்கும் கட்டமைப்பின்மை முதலான குறைகள் களையப்பட வேண்டும். இதழ்களில் வெளியிடப்படும் செய்திகள் தரமாகவும் படிக்க எளிதாகவும் இருக்க வேண்டியது அவசியம். பிழைகளைத் திருத்தத் தனியாக ஊழியர்கள் ஒவ்வொரு செய்தி அலுவலகத்திலும் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம். அத்தகையோர் தனியே இருப்பினும் அவர்களின் பணி செப்பமுற உள்ளதா என்பதைக் கண்டு சரிசெய்யும் பொறுப்பு துணையாசிரியர், இதழாசிரியர் முதலான பிற இதழாளர்களுக்கும் உண்டு. எனவே, இதழ் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அனைத்து இதழாளர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியப் பணிகளுள் அச்சுப்படி திருத்துதலும் அடங்கும்.
அச்சுப்படியைத் தமிழில் ‘மெய்ப்பு‘ அல்லது ‘படி‘ (Proof) என்பர். அச்சுப்படி திருத்துவதை மெய்ப்பு வாசித்தல் (Proof Reading) அல்லது படி திருத்துதல் (Proof Correction) என்றழைப்பர். எழுத்துப் பிழைகளைச் சரிசெய்வது மட்டுமே ஒரு படி திருத்துவோரின் பணியன்று. செய்திகள் மற்றும் தலைப்புகளின் எழுத்தளவு (Font Size), எழுத்துப் புள்ளிகள் (Points) ஆகியவற்றையும் படிதிருத்துவோர் கவனிக்க வேண்டும். மொழியறிவு படைத்தவராகவும், மொழி மரபைக் காப்பாற்றி எந்த வகைப் பிழையும் நேராமல் திருத்தும் பொறுப்புள்ளவராகவும் படி திருத்துவோர் செயல்பட வேண்டும். இதுவே செய்தி இதழின் பெருமைக்கு வழிவகுக்கும்.