தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அச்சுப்படி திருத்தம்

  • 1.1 அச்சுப்படி திருத்தம்

    செய்தித்தாள்களை வெளியிடும்பொழுது பிழையின்றி அச்சிட வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பிழை மலிந்த செய்தித்தாளை யாரும் விரும்பிப் படிக்க மாட்டார்கள். எனவே, செய்தித்தாள்களை அச்சிடுவதற்கு முன்னர் அச்சுப்படி திருத்துபவர் பணியும் அப்பணியின் போது திருத்தக்குறியீடு இடுதலும் பிழைகளைத் திருத்துவதற்குக் கையாளும் முறைகளும் அதற்குரிய அறிவுரைகளும் முக்கியம் வாய்ந்தவைகளாகும்.

    1.1.1 திருத்துபவரின் பணிகள்

    திருத்துபவர்க்குரியவையாக 6 பணிகளைக் குறிப்பிடுவர்.

    1)

    மூலப்படியில் (Original Copy) உள்ளபடியே செய்திகள் அச்சாகியுள்ளனவா என்று வரிக்குவரி வாசித்துக் கவனிக்க வேண்டும்.

    2)

    செய்தியின் உள்ளடக்கம் விடுபட்டுள்ளதா என்பதையும் மூலப்படியோடு ஒப்பிட்டுக் கவனித்தல் முக்கியம்.

    3)

    செய்திகளில் முரண்பாடு இருந்தாலும், தெளிவின்றிப் பொருட் குழப்பம் இருந்தாலும் அதனைத் துணை ஆசிரியரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

    4)
    அனுபவமிக்கவர்கள் அச்சுப்படியை மட்டும் படித்துத் திருத்தலாம். மூலப்படியைத் தேவைப்பட்டால் மட்டுமே பார்த்துக் கொள்ளலாம்.
    5)
    செய்தியில் புள்ளி விவரங்கள் (எண்கள், அட்டவணைகள் முதலியன) வந்தால், அனுபவமிக்கவராக இருந்தாலும் கண்டிப்பாக மூலப்படியுடன் ஒப்பிட்டுப் பார்த்தே திருத்துதல் வேண்டும். புள்ளி விவரங்கள் மாறினால் செய்தியின் பொருள் சீர்குலைந்துவிடும்.
    6)

    அச்சுப்படி திருத்துவோர் அவராகவே செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றக் கூடாது.


    • குறியீடுகள் இடுதல்

    அச்சுப்படியில் இருக்கும் பிழைகளைத் திருத்த உலக அளவில் பொதுவான திருத்தக் குறியீடுகள் என்று சில உண்டு. உலகின் எல்லா மொழிகளுக்கும் இவை பொதுவானவை. ஓர் அச்சகத்தில் திருத்தியதை மற்றோர் அச்சகத்தார் புரிந்துகொள்ளும் அளவில் இக்குறியீடுகள் உலகப் பொதுவானவையாக இருக்கும். அத்தகைய திருத்தக் குறியீடுகளைப் படிதிருத்துவோர் முதலில் படித்தறிதல் வேண்டும். பிழையிருக்கும் இடத்தில் ஒரு சிறு கோட்டினால் குறித்து அந்த வரிக்கு நேராகப் பக்கத்தின் ஓரப்பகுதியில் (Margin) அந்தக் குறியீடுகளைப் பொருத்தமாக இட்டுப் பிழையின் திருத்தத்தைக் குறிப்பிட வேண்டும். ஒரே வரியில் பல தவறுகள் வந்தால் அவற்றை வரிசைப்படி பக்க ஓரத்தில் சிறு சாய்கோடிட்டுத் திருத்தத்தைக் குறிப்பிட வேண்டும்.

    எடுத்துக்காட்டு:

    வேளான்/மக்களுக்குத்/தமிள்நாடு அரசு புதிய திட்டம்.    /ண்/ழ்

    1.1.2 பிழைகளைத் திருத்தும் முறைகள்

    அச்சுப்படியிலுள்ள பிழைகளைத் திருத்த இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை:

    1)

    அச்சுப்படியில் எந்த இடத்தில் பிழை இருக்கிறதோ அந்த இடத்தில் ஓர் அடையாளக் குறி இடுவர். பின் தாளின் இருபக்கங்களில் பக்கவாட்டில் அதற்கு நேராக, வேண்டிய திருத்தத்தைக் குறிப்பிடுவர்.

    2)

    திருத்த வேண்டிய இடத்திலிருந்து பக்கத்தின் ஓரம் வரை ஒரு கோட்டினை இழுத்து, என்ன திருத்தம் செய்ய வேண்டுமென்பதைக் குறிப்பிடுவர். செய்தித்தாள்களில் இம்முறையைத்தான் பின்பற்றுகின்றனர்.


    • திருத்துவோர்க்கான அறிவுரைகள்

    1)

    பின்வரும் தொடர்களின் அமைப்புப் பாதிக்காமல் திருத்தங்கள் செய்வது நல்லது.

    2)

    திருத்தங்களைப் பக்கத்தின் ஓரத்தில்தான் தர வேண்டும். பிழையின் மீதே எழுதக் கூடாது.

    3)

    ஒரு வரியின் இடது பாதியில் பிழை இருந்தால் இடது ஓரமும், வலது பாதியில் பிழை இருந்தால் வலது ஓரமும் திருத்தம் தருதலே சிறந்தது.

    4)
    பிழைகளை ஓரம் வரை கோடிழுத்துக் காட்டும் பொழுது மேலும் கீழும் உள்ள வரிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
    5)
    ஒரே வரியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிழைகள் இருந்தால் பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாகக் காட்ட வேண்டும். கோடுகளின் மூலம் அச்சுக் கோப்பவரைக் குழப்பக் கூடாது.
    6)
    ஒரு சொல்லில் பல பிழைகள் இருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டுச் சரியான சொல்லைத் தெளிவாகப் பக்க ஓரத்தில் தருதல் நலம்.
    7)

    எண்ணின் (Number) இடையில் பிழையிருந்தால் அந்தத் தொகையை முழுவதுமாகப் பிழையின்றி எழுதிக்காட்டுதல் சிறந்தது.

    8)
    செய்தியின் வடிவம், எழுத்தின் அளவு ஆகியவற்றையும் பிழைதிருத்துபவர் கவனத்தில் கொள்வது இன்றியமையாதது. அதையும் பக்க ஓரத்தில் குறிப்பிட்டுக் காட்டுவது சரியான முறையாகும்.
    9)
    பிழைகள் திருத்தப்பட்ட அச்சுப்படி தெளிவாக இருக்க வேண்டும். குழப்பம் தரும்படி இருத்தலாகாது.
    10)
    அச்சுப்படி கருப்பு மையில் இருந்தால் பிழை திருத்துவோர் சிவப்பு மையால் திருத்துவது பிழைகளைத் தெளிவாகக் கண்டறிய உதவும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    அச்சுப்படி திருத்துபவரின் தகுதி யாது?

    2.

    செய்திகளில் முரண்பாடு இருந்தால் அதை எவர் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்?

    3.

    திருத்துவோருக்குரிய அறிவுரைகளில் ஒன்றைக் குறிப்பிடு.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:29:02(இந்திய நேரம்)