Primary tabs
- 3.2 ஆசிரியப்பா
இது அகவற்பா என்றும் வழங்கப்படும்.
- ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
சீர்இயற்சீர்கள் மிகுதியாக வரும். பிற சீர்களும் கலந்து வரும். ஆனால் கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய சீர்கள் வாரா.தளைநேரொன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத் மிகுந்து வரும். பிறதளைகளும் கலக்கலாம்.அடிஅ)
பொதுவாக ஆசிரியப்பா அளவடியால்
அமைவது, ஆயினும் நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயல் அடி சிந்தடியாக வரும். இணைக்குறள் ஆசிரியப்பாவின்
இடையிடையே குறளடிகளும் சிந்தடிகளும் வரும்.ஆ)
ஆசிரியப்பா குறைந்த அளவு
மூன்றடிகளைப் பெறும். அதிக அளவு புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது. எத்தனை அடிகளும் வரலாம். வரம்பு
இல்லை.ஈறுஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ‘ஏ’ காரத்தில் முடிவது சிறப்பானது. நிலை மண்டில ஆசிரியப்பா ‘என்’ எனமுடிவது சிறப்பானது.ஓசைஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசையாகும்.- ஆசிரியப்பாவின் வகைகள்
- நேரிசை ஆசிரியப்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
- நிலை மண்டில ஆசிரியப்பா
- அடிமறி மண்டில ஆசிரியப்பா
என ஆசிரியப்பா நான்கு வகைப்படும்.
3.2.1 நேரிசை ஆசிரியப்பா(1)ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஈற்றயலடி சிந்தடியாய,் ஏனைய அடிகள் அளவடிகளாய் வரும்.(2)ஏகாரத்தில் முடிவடையும்.(எ.டு)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே(குறுந்தொகை :3)
(நீர் = கடல், ஆர் அளவு = மிகுந்த
ஆழம், கருங்கோல் = கரிய காம்பு, தேன் = தேன்கூடு, இழைக்கும் = கட்டும், நட்பு = காதல்)இந்தப் பாடலில் ஈற்றயலடி சிந்தடியாக, ஏனைய அடிகள்
அளவடிகளாக இருப்பதையும் நட்பே என ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவதையும் காண்கிறீர்கள். ஆகவே இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.3.2.2 இணைக்குறள் ஆசிரியப்பா(1)ஆசிரியப்பாவிற்குரிய பொது இலக்கணங்களைப் பெற்று வரும்.(2)முதலடியும் கடைசி அடியும் அளவடிகளாகவே வரும். இடையே அளவடிகளோடு குறளடிகளும் சிந்தடிகளும் கலந்து வரும்.(எ.டு)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே(கேண்மை = காதல், தீர்பு ஒல்லாது = தீராது)
இப்பாடலில் முதலடியும் ஈற்றடியும் அளவடிகளாய் வர, இடையடிகள் குறளடிகளாகவும் சிந்தடிகளாகவும் அமைந்திருப்பதைக் காணுங்கள். ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவடைந்துள்ளது. ஆகவே இது இணைக்குறள் ஆசிரியப்பா
ஆகும்.3.2.3 நிலை மண்டில ஆசிரியப்பா(1)இது ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று எல்லா அடிகளும் அளவடிகளாக வருவது.(2)இப்பாவுக்கு ‘என்’ எனும் ஈறு சிறப்பானது.(எ.டு)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே(குறுந் - 18)
(வேரல் = மூங்கில், வேர்க்கோட் பலவு = வேரில் காய்த்த பலாமரம், செவ்வியை = பக்குவமுடையவன், அறந்திசினோர் = அறிந்தோர்; கோடு = கொம்பு, தூங்கியாங்கு = தொங்குவதுபோல, தவ = மிகுதியாக)
இந்தப் பாடல் எல்லா அடிகளும்
அளவடிகளாக அமைந்திருப்பதைக்
காணுங்கள். ஆசிரியப்பாவுக்குப்
பொதுவான ஈறு ஆகிய ஏகார ஈறு
பெற்றுள்ளது. ஆகவே இது
நிலைமண்டில ஆசிரியப்பா ஆகும்.
3.2.4 அடிமறி மண்டில ஆசிரியப்பா(1)இது ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளும் அளவடிகளாக வரும்.(2)எந்த அடியையும் முதல், நடு, இறுதியாக மாற்றி வைத்துப் பார்த்தாலும் ஓசையும் பொருளும் மாறாமல் இருக்கும்.(எ.டு)
சூரல் பம்பிய சிறுகான் யாறே;
சூரர மகளிர் ஆரணங் கினரே;
வாரலை யெனினே யானஞ் சுவலே;
சார னாட நீவர லாறே;(சூரல் = பிரம்புக்கொடி, பம்பிய = நிறைந்த, கான் ஆறு = காட்டாறு, சூர்அரமகளிர் = அச்சம் தரும் வனதேவதைகள், ஆர் அணங்கினர் = மிகுந்த துன்பம் தருவோர், வாரலை = வராவிட்டால், அஞ்சுவல் = அஞ்சுவேன், வரல் ஆறு = வரும் வழி)
இப்பாடலின் ஒவ்வோர் அடியும்
தனித்தனியே பொருள் முடிந்து
அமைந்துள்ளது. ஆகவே எந்த
அடியையும் முன்பின்னாக மாற்றி
அமைத்தாலும் பொருள் மாறாது. எல்லாஅடிகளும் அளவடிகளாக இருப்பதால் ஓசையும் கெடாது. ஆகவே இது அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆகும்.