தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.7

  • 1.7 அரசனும் அரணும்

    அரசனுக்குத் துணையாக அமைய வேண்டிய இன்னொன்று அரண்.
    அது நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள கோட்டை.

    பிற நாட்டின் மீது படை எடுப்பதாக இருந்தாலும் பிற நாட்டார்
    படை எடுப்பில் இருந்துத் தம்மைக் காத்துக் கொள்வதாக
    இருந்தாலும் கோட்டை அவசியம் என்பது வள்ளுவர் கருத்து.


    எல்லாவித பாதுகாப்பு அம்சங்களும் பொருந்திய கோட்டையை
    உடைய மன்னனுக்கு எந்தக் கவலையும் இல்லை. கோட்டையினுள்
    பாதுகாப்பாக மக்களை வைத்துவிட்டு, கவலை எதுவும் இல்லாமல்
    பிற நாட்டின் மீது படையெடுத்துச் செல்லலாம். பகைவர் தன் மீது
    படையெடுத்தாலும், கோட்டையின் உள்ளே, பகைவனின்
    தாக்குதலிலிருந்து     பாதுகாப்பாக இருக்கலாம். வலுவான
    கோட்டையை உடைய மன்னனை, பகை மன்னன் எளிதில் வெல்ல
    முடியாது. எனவே கோட்டை அமைப்பது மன்னனின் முக்கியமான
    கடமை எனக் கூறுகிறார் வள்ளுவர்.


    1.7.1 அரணின் அமைப்பு

    ஒரு மன்னனுக்கு முக்கியமாக அமைய வேண்டிய அரண் எவ்வாறு
    அமைந்து இருக்க வேண்டும் என்பதனை வரையறை செய்து
    விளக்குகிறார் வள்ளுவர்.

    ஆகாய விமானமோ, ஏவுகணையோ, பயன்படுத்தாத காலகட்டத்தில்
    வாழ்ந்த அரசர்கள், தரை மூலமே தம் படைகளைச் செலுத்தினர்.
    எனவே கோட்டையானது பகைவர் எளிதில் நுழையாதவாறு
    அமைந்து இருக்க வேண்டும். அதைச் சுற்றி ஆழமான நீருள்ள
    அகழியோ, மலைகளோ, மரம் அடர்ந்த காடுகளோ சூழ்ந்திருக்க
    வேண்டும். ஆழமான அகழியை எளிதில் நீந்தித் தாண்ட முடியாது.
    விரைவாக மலைகளில் ஏறி இறங்க முடியாது. காடுகளையும் எளிதில்
    கடக்க முடியாது. எனவே, பகைவர்கள், கோட்டையை எளிதில்
    அடைய முடியாதவாறு தடைகள் வேண்டும். அந்தத் தடைகளே,
    அகழியும், மலையும், காடும் ஆகும். இதனை


    மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழற்
    காடும் உடையது அரண்


    (குறள்: 742)


    (மணிநீர் = மணிபோல் தெளிந்த நீர்; அணி = அழகிய)

    என கோட்டையின் புற அமைப்பை விளக்குகிறார் வள்ளுவர்.

    கோட்டையின் சுவரும், எளிதில் ஏறமுடியாதவாறு உயரமாகவும்,
    பகைவர்கள் அறிந்து கொள்ள முடியாத எந்திர தந்திர
    இரகசியங்கள் பொருந்தியதாகவும் இருக்க வேண்டும்.

    காவல் புரிய வேண்டிய வாசல் குறுகியதாகவும், பகைவர்கள்
    செய்கிற எல்லா முயற்சிகளையும் தளரச்செய்யக் கூடியதாகவும்
    இருப்பது கோட்டை. அது பகைவர்கள் எளிதில் அணுகாதவாறும்
    அமைய வேண்டும்.

    வள்ளுவர், கோட்டையைப் பற்றிச் சொல்லும் கருத்துகளெல்லாம்,
    அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்கு முன்னாலேயும், வாழ்ந்த
    அரசர்கள் தம் கோட்டையை அமைத்திருந்த முறையை
    அடிப்படையாகக் கொண்டே விளக்கிக் கூறியுள்ளார்.

    தொன்மைக்காலம் முதலே, கட்டடக்கலையில் தமிழர்கள் மிகவும்
    சிறந்து விளங்கினார்கள். மன்னர்களின் கோட்டை அமைப்பு,
    தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு
    என்பர். (பகைவன் எளிதில் அணுகாதவாறும் எளிதில் உள்ளே
    நுழையாதவாறு     அமைக்கப்பட்டிருந்ததும்,     தமிழர்களின்
    கட்டடக்கலை அறிவை வெளிப்படுத்தும்.) எனவே, வள்ளுவர்
    அரணைப் பற்றிச் சொல்லும் செய்திகள் அனைத்தும், தமிழர்
    பண்பாட்டிற்குச் சிறந்த சான்றுகள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)