Primary tabs
-
அரசனுக்கு உரிய மூன்றாவது கூறாக வள்ளுவர் ‘கூழைக்’
குறிப்பிடுகிறார். கூழ் என்றால் உணவு என்று பொருள். உணவு
உற்பத்தி ஒரு நாட்டின் பொருளாதார வளத்தைத் தீர்மானிக்கும்.
‘கூழ்’ என்பதற்குச் செல்வம் என்றும் பொருள் உண்டு. எனவே,
ஒரு நாட்டின், செல்வம் அல்லது பொருளே அந்த நாட்டின்
ஆட்சித் திறனையும், நாட்டின் தரத்தையும் முடிவு செய்யும்.
இன்றும், உலக நாடுகளை, உற்பத்திப் பெருக்கத்தால் ஏற்படும்
செல்வச் செழிப்பை அடிப்படையாகக் கொண்டு, முன்னேறிய
நாடுகள் (Developed Countries), முன்னேறும் நாடுகள்
(Developing Countries), என்று வேறுபடுத்துகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம்,
இந்தக் பொருளாதாரக் கொள்கையின் உண்மையினைத்
தெரிந்திருக்கின்றது.எனவே, பொருளைச் சம்பாதிப்பதற்கு உரிய வழி முறைகளைத்
தெரிவிப்பதற்காகவே ஓர் அதிகாரத்தை அமைத்துள்ளார்
வள்ளுவர்.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையை வைத்து, இன்றும்
தரம் பிரிக்கிறார்கள், எத்தகைய ஆட்சியாக இருந்தாலும், பொருள்
ஈட்டுவது, நாட்டின் நலனையும், சார்ந்த மக்களையும்
பாதுகாப்பதற்குத் துணை செய்யும். மதிக்காதவர்களைக் கூட,
மதிக்கச் செய்வது பொருள். எனவே, பொருளைச் சேகரிக்க
வேண்டியது இந்த உலக வாழ்வில் முக்கியமானது என்கிறார்.திருடுகிறவனைப் பார்த்து, நீ ஏன் திருடுகிறாய் என்றால், ‘பசி,
வறுமை அதனால் திருடுகிறேன்’ என்பான். எனவே, சமுதாயத்தில்
தவறு செய்யும் பலருக்கு, அவர்களது பொருள் இல்லாமையும் ஒரு
காரணமாக அமைகிறது. வறுமையின் காரணமாகத்தான் பலர் தவறு
செய்கிறார்கள். எனவே ஒருவனுக்குப் பொருள் வசதி ஏற்பட்டால்,
அவன், தவறு செய்யாமல் இருப்பதோடு, அறம் பல செய்வதற்கும்
வாய்ப்பு அளிக்கும் என்று வள்ளுவர் கருதியுள்ளார்.பொதுவாகப் பொருள் வசதி மக்களிடம் தாராளமாக
இருந்தால்தான், சமுதாயத்தில் அன்பும் அருளுமான அறங்கள்
நடைபெறும். எனவே, அன்பில் இருந்து பிறக்கின்ற அருள் என்ற
குழந்தைச் செல்வம் என்ற ஆற்றல் மிக்க செவிலித்தாயால்தான்
வளர்ந்து வாழும். நல்ல வழிகளில் பொருளைச் சேகரித்து வாழும்
பொருள் வசதி உடையவர்களின் வாழ்க்கை, எவ்வளவு
பாதுகாப்பானது என்பதற்கு இந்த அருமையான எடுத்துக்காட்டை
வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
(ஈன் = ஈன்ற, குழவி = குழந்தை, உண்டு = வாழும் வாய்ப்பு உண்டு)எனவே, இவ்வுலக வாழ்வில் பொருள் மிகவும் இன்றியமையாத
ஒன்று என்கிறார் வள்ளுவர்.தன் கையகத்தே, முதலீடு செய்வதற்கு (investment) உரிய
பொருள் தாராளமாக இருக்குமானால் ஒருவன் எந்தக் கவலையும்
இல்லாமல் ஒரு தொழிலைத் தொடங்கலாம். அவனிடம் இருக்கும்
பொருள் அவனுக்குப் பாதுகாப்பையும் ஊக்கத்தையும் கொடுக்கும்.
இதனை ஓர் அருமையான உவமை மூலம் விளக்குகிறார் வள்ளுவர்.இரண்டு யானைகள் போரிடும் போது, அதே தளத்தில் இருந்து
அந்தக்காட்சியைப் பார்ப்போமானால், மனநிம்மதியோடு பார்க்க
முடியாது. ஏனென்றால், போரிட்டுக்கொண்டிருக்கும் யானைகளால்
எப்பொழுது நமக்கு ஆபத்து வரும் என்று சொல்லமுடியாது.
அச்சத்தோடேதான் பார்க்க வேண்டும். ஆனால் மிக உயரமான
ஓர் இடத்திலிருந்து அந்தக்காட்சியை, அச்சம் இல்லாமல்
பார்க்கலாம். எனவே குன்றின்மேல் ஏறி யானைப் போரைப்
பார்ப்பது போல் ஒருவனிடம் இருக்கும் செல்வம் அவனுக்குப்
பாதுகாப்பு அளிக்கும் என்கிறார் வள்ளுவர்.
(தன்கைத்து = தன்-கையகத்து, வினை = செயல்)எனவே, அரசு சிறப்புற அமைய, பொருள் தேவை. அதை நல்ல
வழியில் ஈட்ட வேண்டும். நல்ல வழியில் பொருளைச்
சம்பாதிக்கின்ற அரசனுக்கு அறமும் இன்பமும் தாமாக வந்து
அமையும். பொருள் வளமே நாட்டிற்கு எல்லாவற்றையும் கொடுக்கும்
என்கிறார் வள்ளுவர்.