Primary tabs
-
1.2 திருமால் வழிபாட்டின் தொன்மைதொன்மை வாய்ந்த பழந்தமிழ் நூல்கள் திருமாலைத்
தெய்வமாக வழிபட்ட செய்திகளைக் குறிப்பிடுகின்றன.ஆதித் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் நானிலங்களுள்
முல்லைக்குரிய தெய்வமாகத் திருமாலைக் குறிப்பிடுகின்றது.மாயோன் மேய காடுறை உலகமும்என்பது நூற்பா,
(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை உலகம் =
காடு பொருந்திய முல்லை நிலம்)‘சங்கப் பாடல்களில் மிகுதியாகக் குறிக்கப்பெறும்
தெய்வம் திருமாலே’ என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும்.மாநிலங்காக்கும் மன்னவர்க்குத் திருமாலை உவமை கூறும்
மரபினைச் சங்க நூல்களிற் காணலாம்.மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்(தொல்.புறத்: 5)
என்று தொல்காப்பியர் இலக்கணம் கூறுதல் எண்ணத்தக்கது.
“மாயோனைச் சிறப்பித்து, ஏத்திய குறையாத சிறந்த புகழையுடைய
பூவை நிலையும்” என்பது இதன் பொருளாகும். பூவை என்பது
காயம் பூவைக் குறிப்பதாகும்.பால்நிறை உருவின் பனைக்கொடி யோனும்,
நின்ற உருவின் நேமியோனும் என்ற
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
. . . . . இசைவாழியவே(புறம் : 58 : 14-19)
(பனைக்கொடியோன் = பலதேவன், நேமியோன் =
சக்கரத்தினை உடையவன் திருமால், கண்ணன்
உட்குவரவிளங்கி = அச்சம் வர விளங்கி)தொல்காப்பியர் ‘பனைமுன் கொடிவரின்’ என்னும்
நூற்பாவில் வாலியோனுக்குரிய (வாலியோன் - வெண்மை
நிறமுடைய பலதேவன்) பனைக்கொடியினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மாயோன் - வாலியோன் இருவரையும் ஒருங்கு
நிறுத்திப் பரவும் வழக்கம் பழந்தமிழ்நாட்டில் நிலவியது எனலாம்.
இதனைப் பதினைந்தாம் பரிபாடலும் உறுதி செய்கின்றது.
அப்பாடலில் இளம்பெருவழுதியார் என்னும் புலவர், மக்கள்
மாலிருங்குன்றத்துக் சென்று ‘பெரும் பெயர்த் தெய்வங்களாகிய’
பலதேவ-வசுதேவர்களை வழிபட்டதாகப் பாடியுள்ளார்.சங்க நூல்களிலேயே பழமையானது பதிற்றுப்பத்து என்பர்.
அந்நூலிலும் திருமால் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி(31, 8-9)
(கமழ்குரல் துழாஅய் அலங்கல் = மணங்கமழ்கின்ற
பூங்கொத்துக்களையுடைய துளசி மாலை; செல்வன் = திருமால்)
என்பதில் திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலில் மக்கள்
அவனைப் பரவிய செய்தி இடம் பெற்றுள்ளது. திருமாலை
வழிபட்ட மக்களை மட்டுமன்றி, ‘மாயவண்ணனை மனன்
உறப்பெற்ற’ செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும்
சேரமன்னனைப் பற்றியும் பதிற்றுப்பத்து ஏழாம்பத்து
குறிப்பிடுகின்றது. (மாயவண்ணனை மனன் உறப்பெற்ற - கரிய
நிறத்தையுடைய திருமாலைத் தன் மனத்திலே மிகப் பெற்ற)
அரவணையில் துயிலும் திருமாலைப் பற்றி முதன்முதலிற் கூறும்
நூல் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய
பெரும்பாணாற்றுப்படையாகும். அந்நூலின் பாட்டுடைத்
தலைவனான தொண்டைமான் இளந்திரையன் என்பான் திருமால்
மரபில் உதித்த சோழர்களின் வழி வந்தவனாகக்
கொண்டாடப்படுகிறான் (29-31). அவனது தலைநகரான
காஞ்சியைக் குறிக்குமிடத்துப் ‘பிரமதேவனைப் பெற்ற
திருமாலினது திருவுந்திக் கமலத்தைப் போன்ற பழமையும்
சிறப்பும் வாய்ந்திருந்தது (402-405) அந்நகரம்’ என்கிறார் புலவர்.
அந்நகர் எல்லையில் உள்ள திருவெஃகா என்னும்
திருக்கோயிலில் திருமால் பாம்பணையிற் பள்ளிகொண்டருளிய
கோலத்தை, ‘காந்தளம் சிலம்பில் களிறு படிந்தாங்கு’
(371-373) (காந்தள் அம்சிலம்பில் - காந்தளையுடைய
அழகிய பக்க மலையிலே; களிறுபடிந்தாங்கு - யானை கிடந்தாற்
போல) என உவமிக்கிறார். ‘நீல்நிற உருவின் நெடியோன்’
(402) என்று திருமாலைக் குறிப்பிடும் கடியலூர்
உருத்திரங்கண்ணனார், அவன் உலகளந்த செய்தியையும்
திருமகளையும் ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவினையும் மார்பில்
தாங்கிய குறிப்பினையும்,இருநிலம் கடந்த திருமறுமார்பின்
முந்நீர் வண்ணன்(29-30)
(இருநிலம் = பெரிதாகிய உலகம், முந்நீர் = கடல்)
என்னும் அடிகளில் பாடக் காண்கிறோம்.
மதுரைக் காஞ்சியில் ஆண்கள் தம் மனைவி மக்களுடன்
சென்று மலரும் தூபமும் கொண்டு திருமாலை வழிபட்ட செய்தி
(461-65) இடம் பெற்றுள்ளது. அந்நூலிலேயே சங்ககாலத் தமிழர்,
திருமாலுக்குரிய ஓணநன்னாளினைக் கொண்டாடிய குறிப்பும்
காணப்படுகின்றது.
சுணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓணநன்னாள்(கணம் கொள் அவுணர் = கூட்டமாய் வந்த அரக்கர், கடந்த =
வென்ற, பொலந்தார் = பொன்னலாகிய மாலை)
என்பன பாடல் (590-91) அடிகளாகும். இவ்வாறு சங்கத் தமிழர்
கொண்டாடிய ஓணத்திருநாள், ஆழ்வார்கள் காலம் வரை
தமிழகத்தல் நீடித்ததற்குச் சான்றுகள் உள்ளன. கண்ணன்
பிறப்பைப் பாடும் பெரியாழ்வார் ‘ரோகிணி’ நாளிற் பிறந்த
கண்ணனைத் ‘திருவோணத்தான்’ என்று குறிப்பது இதனை
வலியுறுத்துகின்றது.ஆணொப்பார் இவன் நேரில்லை காண், திரு
வோணத் தான் உலகாரும் என் பார்களேஎன்பது பெரியாழ்வார் திருமொழி (15).
எட்டுத் தொகையுள் ஒன்றான பரிபாடலில் திருமாலைப்
போற்றிப் பாடுகின்ற ஆறு பாடல்களும் (1,2,3,4,13,15) திருமால்
வழிபாட்டின் தொன்மையை நமக்கு உணர்த்துவனவாய் உள்ளன.
காண்பவற்றில் எல்லாம் திருமால் கரந்துறையும் அருமைப்
பாட்டினைக் கடுவன் இளவெயினனார் என்னும் புலவர்,தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அணியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;(3:63-68)
(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = மணியாம்
தன்மை; அன்பு = மென்மை, மைந்து = வன்மை, மறை =
உபநிடதம், முதல் = ஆகாயம், வெஞ்சுடர் = ஆதித்தன்)
என்று அழகுறப் பாடுகின்றார். ஆழ்ந்த தத்துவத்தை
உள்ளடக்கிய இவ்வடிகள் மேலோட்டமாகக் கற்பார்
இதயத்தையும் ஈர்க்கும் இன்சுவை மிக்கவை என்பது
சொல்லாமலேயே விளங்கும்.
திருமாலைப் போற்றுகிற பரிபாடல் ஒன்று மக்களை நோக்கி,
“மாலிருங்குன்றாமாகிய அழகர்மலைக்கு மனைவியோடும்
பெற்றவரோடும் பிறந்தவரோடும் உறவினரோடும் செல்லுங்கள்”
(15 : 45 - 48) என்று பேசுகின்றது. ”சென்று தொழமாட்டீராயினும்
அம்மலையைக் கண்டு தொழுவீர்” என்றும் குறிப்பிடுகின்றது.
சங்க இலக்கியத்தில் ‘இன்ன மலைக்குச் சென்று வழிபடுங்கள்’
என்னும் நோக்கில் அமைந்த பாடல் இது ஒன்றே ஆகும்.
‘திருமாலே வீடுபேற்றினை அளிக்கவல்லவன்’ என்றும்
பரிபாடல் உறுதிபட மொழிகின்றது.துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்?துழாயோன் = துளசிமாலையணிந்த திருமால்; ஏறுதல் =
அடைதல், வீறு பெறு துறக்கம் = பெருமை மிகுந்த
வீட்டுலகம்)
மலையில் கண்ணபிரானை அவனது முன்னோனான பல
தேவனுடன் சேர்த்த மக்கள் வழிபட்டு வந்தமையையும்
அப்பரிபாடலே காட்டுகின்றது.
திருமால் வழிபாட்டின் தொன்மைக்குக் கலித்தொகையும்
சான்றாக அமைகின்றது. இந்நூலில் திருமாலின் அவதாரமாகக்
கூறப்படும் கண்ணனின் பால சரித நிகழ்ச்சிகள் இடம்
பெற்றுள்ளன. பலதேவனையும் அவன் இளவலாகிய
கண்ணனையும் மலர் முதலிய இயற்கைக் காட்சிக்கும், சொல்லேறு
தழுவும் வீரர்க்கும், காளைகளுக்கும் உவமை கூறிக்
கவியுள்ளத்தோடு கற்பனை செய்து பாடுகின்றது கலித்தொகை.
கலித்தொகையில் உள்ள 26,36,103,104,105,119,123,124,127
ஆகிய எண்களுடைய பாடல்களில் இத்தகைய குறிப்புகள் எழில்
பெற இடம் பெறக் காணலாம். காட்டாக ஏறுதழுவும்
காட்சியிலிருந்து ஒரு செய்யுள் பகுதி:இகுளை! . . . . . . . .
காயாம்பூக் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
வாய் பகுத்திட்டு, புடைத்தஞான்று இன்னன் சொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு(இகுளை = தோழியே. பொதுவன் = இங்குக் காளையை
அடக்கும் ஆயர்குலத்து இளைஞன், தகை கண்டை =
அழகைப்பார், வாய்பகுத்திட்டு = வாயைப்பிளந்து,
புடைத்தஞான்று = கொன்றபொழுது, மாயோன் = திருமால்,
உட்கிற்று = நடுங்குகின்றது)
“தோழியே (ஒரு காளையை அடக்கும்) காயாம்பூவாலான
கண்ணி சூடி நிற்கும் இவன் அழகைப் பார்! பகைவர் ஏவிய குதிரை அரக்கனை, அதன் வாயைப் பிளந்து கொன்றொழித்த
அன்று, திருமால் இவனைப் போலவே தோன்றினான் போலும்
என்று எண்ணி நடுங்குகிறது என நெஞ்சு” என்பது இதன்
பொருளாகும்.
தோழி, தலைவியை நோக்கிக் கூறியது இது.
தொல்காப்பியம் குறிப்பிட்டது போலத் திருமாலை ‘மாயோன்’
எனக்குறிப்பிடுகிறது கலித்தொகை. மேலும் தம்நாட்டு
வேந்தனாகிய பாண்டியன் உலகெங்கும் புகழ் பெற்று விளங்க
வேண்டும் என்னும் நாட்டுப்பற்றுடன் திருமாலின் அருளை
மனமாரப் போற்றும் மக்களின் பக்திப் பெருக்கினையும்
கலித்தொகையில் இடம்பெறும் 104:78-80, 105:71-75 ஆகிய
எண்களுடைய பாடல்கள் காட்டுகின்றன.
1.தொல்காப்பியம் ‘முல்லை’க்குரிய தெய்வமாக யாரைக்
குறிப்பிடுகின்றது?2.சங்க நூல்களில் மாநிலங்காக்கும் மன்னர்க்கு உவமை
கூறப்பெறும் தெய்வம் யார்? அத்துறையின் பெயர்
என்ன?3.பழந்தமிழகத்தில் திருமாலுக்குரிய ‘ஓணநன்னாள்’
கொண்டாடப்பெற்றதைக் குறிக்கும் நூல் எது?4.ஆண்கள் தம் மனைவி மக்களுடன் சென்று திருமாலை
வழிபடும் செய்தி எதில் இடம் பெற்றுள்ளது?