Primary tabs
-
1.6 புதிய செய்திகள்
கண்ணன் அரக்கர்களால் மறைக்கப்பட்ட ஞாயிற்றைக்
கொண்டு வந்து நிறுத்தினான் எனப் புறநானூறு (174:1-5)
பாடுகின்றது. இச்செய்தி வடமொழி நூல்களிலும்
காணப்படவில்லை. ‘திருமால் அன்னச் சேவலாகிச் சிறகாலே
ஊழிக்காலத்து மழை நீரை வற்றச் செய்தான்’ என்று பரிபாடல்
(3:25-26) கூறுகின்றது. இதுவும் வேறு எங்கும் இல்லாத புதிய
செய்தியேயாகும். பால் போலும் மதியினைச் சேர்ந்து பாம்பு
மறைத்ததாகவும், அப்பாம்பினைக் கண்ணன் அகற்றியதாகவும்
முல்லைக் கலி பாடுகின்றது. ஏறு தழுவும் வீரன் அரவாகவும்,
அவன் தழுவிய பால்நிற ஏறு நிலவாகவும், அவனைக் குத்தி
அகற்றும் கரிய ஏறு கண்ணனாகவும் உவமிக்கப்பட்டுள்ளனர்.
(கலித்தொகை 105:43-46). கண்ணனின் இச்செயல் ஆழ்வார்களும்
பாடாதது; அரியது; புதியது.
இவை தவிர இராமாயணக்கதை நிகழ்ச்சிகளைப் புறநானூறும்
அகநானூறும் குறிப்பிடுகின்றன. புறநானூற்றில் ஊன்பொதி
பசுங்குடையார் என்னும் புலவர், சீதையை இராவணன் கவர்ந்து
சென்றபோது அவள் வீசி எறிந்த நகைகளை வானரங்கள்
கண்டெடுத்து அவற்றை அணியும் முறை தெரியாமல் கையிலும்
காலிலும் மாறிமாறி அணிந்து கொண்டன (378:18-24) என்கிறார்.
கடுவன் மள்ளனார் என்னும் புலவர் அகநானூற்றுப் பாடல்
ஒன்றில் (70:13-17) சுக்கிரீவனுடனும் பிறருடனும் இராமன்
நடத்திய மந்திராலோசனை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.இப்புதிய செய்திகள் பலவும் தமிழகத்தில் திருமால் வழிபாடு
தழைத்து வேரோடியிருந்ததையே காட்டுகின்றன.