Primary tabs
-
1.5 திருமால் நெறி
ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்னர்த் திருமால்நெறி,
‘ஸ்ரீவைஷ்ணவம்’ என்னும் சமயக் கட்டமைப்பைப் பெற்றது.
அப்போது வைணவத் தத்துவ நூல்கள் பல தோன்றின.
இந்நூல்கள் விளக்கிக் கூறும் அடிப்படைத் தத்துவங்களுக்கான
ஒளிக்கீற்றுகளைச் சங்க நூல்கள் கொண்டிருக்கின்றன. இதுவும்
திருமால் வழிபாட்டின் தொன்மைக்கும் நிலைபேற்றுக்கும்
மற்றுமொரு சான்றாக உள்ளது.வைணவ சமயம் சித்து (அறிவுள் பொருள்) அசித்து (அறிவில்
பொருள்) ஈச்சவரன் (இறைவன்) என்னும் முப்பிரிவுகளை
உடையதாகும். இவற்றுள் இறைநிலை என்பது ஐவகைப்படும்.
1.பரத்துவம் (விண்ணாட்டு நிலை), 2.வியூகம் (அணிவகுப்பு நிலை),
3.விபவம்(பிறப்பு நிலை) 4.அந்தர்யாமித்துவம் (உள்ளுறை நிலை)
5.அர்ச்சை (வழிபடு நிலை) என்பன அவை. பரமபதத்தில்
இருக்கும் இருப்பு பரத்துவம்; பாற்கடலிலே பள்ளி
கொண்டிருப்பது வியூகம், இராமன், கண்ணன் முதலான
அவதாரங்கள் விபவம். நீக்கமறப் பொருள்தோறும் கரந்து
நிறைந்திருப்பது அந்தர்யாமித்துவம்; அடியார்களின்
இல்லங்களிலும் உள்ளங்களிலும் தோன்றும் வடிவோடு
திருவரங்கம் முதலாகவுள்ள திவ்யதேசங்களில்
கோயில்கொண்டிருக்கும் நிலையே அர்ச்சை.இறைவனின் இவ்வைந்து நிலைகளையும் பரிபாடல்
குறிப்பிடுகின்றது.தொழுவோர்க்கு
உரிது அமர்துறக்கமும் உரிமை நன்குடைத்து(13:12-13)என்னும் அடிகளில் விண்ணாட்டு நிலை பேசப்படுகின்றது.
திருமாலை வழிபடுவோர்க்கு வைகுந்தம் உரியதாகும் என்பது
இதன் கருத்தாகும்.
இறைவன் பாற்கடலில் இருக்கும் அணிவகுப்பு நிலையையும்
மேற்குறித்த பாடலின் நான்கு அடிகளில் (26-29) குறிப்பிடுகிறார்
நல்லெழுநியார் என்னும் புலவர்.
மூன்றாம் பரிபாடலில் இவ்வணிவகுப்பு நிலையினை,
செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்!என்று நல்ல தமிழாக்கிப் பாடுகிறார் கடுவன் இளவெயினனார்.
பாற்கடலில் நால்வேறு வடிவினனாய்ப் பெருமான் துயில்கிறான்
என்றும், அந்நிலையில் முறையே வாசுதேவன், சங்கருடணன்,
பிரத்தியும்நன், அநிருத்தன் என்னும் பெயரைத் தாங்கியுள்ளான்
என்றும் கூறுவர். அவற்றின் தமிழாக்கமே பரிபாடல் கூறும்
செங்கட்காரி முதலானவை. (செங்கட் காரி - வாசுதேவனே,
கருங்கண்வெள்ளை - சங்கருடணணே, பொன்கட்பச்சை -
சிவந்த உடம்பினையுடைய காமனே, அதாவது பிரத்தியும்நனே,
பைங்கண்மால் - பசிய உடம்பினையுடைய அநிருத்தனே).
அடுத்தது பிறப்புநிலை, பிறந்து பெயர் படைத்தவன் திருமால்,
அவன் பிறப்பு நம்மைப்போல வினைவயப்பட்டுப் பிறப்பதன்று;
அவன் விருப்பம் அடியாக நிகழ்வது அது. ஆதலின், “பிறவாப்
பிறப்பிலை; பிறப்பித்தோர் இலையே” என்று
பரிபாடல் (3:72) சிறப்பித்துக்கூறும். அவன் பிறவிகள்
எண்ணற்றவையாயினும் அவற்றுள் பத்துச் சிறப்பானவை. அவை
தசாவதாரம் எனப்படும். மீன், ஆமை, வராகம் (பன்றி), கோளரி
(நரசிங்கம்), குறளன் (வாமனன்), பரசுராமன், இராமன், பலராமன்,
கிருட்டினன், கல்கி என்பன அப்பத்துப் பிறப்புகள். இவற்றுள்
வராகம், கோளரி, பலராமன், கிருட்டினன் ஆகியவை பற்றிய
குறிப்புகள் பரிபாடலில் (2:16-17). 4:12-17, 2:20-21, 3:31-32)
உள்ளன. கூர்மவதாரம் பற்றிப் பரிபாடல் திரட்டு (1:64-65)
சுட்டுகின்றது. பிற அவதாரக் குறிப்புகள் (மீன், குறளன், இராமன்,
கல்கி போல்வன) பரிபாடலில் காணப்படவில்லை.
முல்லைப்பாட்டில் (1-3) திருமால் உலகளந்த செய்தி
(வாமன அவதாரம்) பேசப்படுகிறது. இராமன், புறநானூற்றுச்
செய்யுள் ஒன்றில் (378) குறிக்கப்படுகின்றான். இவை தவிர மீன்,
கல்கி பற்றிய செய்திகள் சங்க நூல்களில் எங்கும்
காணப்படவில்லை.
மீன்
ஆமை
வராகம் (பன்றி)
கோளரி(நரசிங்கம்)
குறளன் (வாமனன்)
பரசுராமன்
இராமன்
பலராமன்
கிருட்டினன்
கல்கிநான்காவதான உள்ளுறை நிலையினை நாம் முன்னர்
குறித்த ‘தீயினுள் தெறல் நீ’ என்னும் பரிபாடல் அழகுற
விளக்குகின்றது.
இனி ஐந்தாவதான வழிபடுநிலையினை அக்காலத்தே
தமிழகத்தில் இருந்ததாகக் குறிக்கப்பெறும் திருமால்
திருக்கோயில்களால் நன்கு அறியலாம். திருமாலிருங்குன்றத்தில்
சேர்ந்து இருந்த கண்ணன் - பலராமன் ஆகியோர் உருவங்களை
மக்கள் வழிபட்டதைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது. அடியார்
மனத்தில் கருதும் உருவமே அவனுக்கு உருவம் என்பதையும்
அந்நூல் தெரிவிக்கின்றது.
மனக்கோள் நினக்குஎன வடிவுவேறு இலையே
(பரிபாடல் 4:56)(அன்பர் மனத்திற் கருதியதே உனக்குரிய வடிவமாம்.
உனக்கு என வேறு வடிவு உடையை அல்லை - என்பது இதன்
பொருளாகும்)
இப்பரிபாடல் அடி,தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானேஎன்னும் பொய்கையாழ்வார் வாக்கினை நினைவூட்டுகின்றது.
(தமர் = இத் திருமால் அடியார்)