தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223l4-3.4 திவ்வியப்பிரபந்தப் பகுப்பு

  • 3.4 திவ்வியப்பிரபந்தப் பகுப்பு
    திருமொழிகள், திருவாய்மொழிப் பாசுரங்களின் எண்ணிக்கை
    அடிப்படையில் நாதமுனிகள் பகுப்பு முறையில் ஒரு புதுமையை
    மேற்கொண்டிருப்பதும் இங்குச் சுட்டிக் காட்டத் தக்கதாகும்.
    பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பினைப் பத்து
    எனக்குறிக்கும் மரபினை ஐங்குறுநூற்றிலும் பதிற்றுப்பத்திலும்
    காணலாம். திவ்வியப்பிரபந்தத்தில் நூறு பாடல்கள் கொண்ட
    தொகுப்பைப் பத்து எனக்குறிக்கும் ஒரு புதிய மரபும்
    காணப்படுகின்றது.

    தனிப்பாடல் - செய்யுள் (அல்லது) பாசுரம் எனப்படும். 10
    அல்லது 11 தனிப்பாடல்கள் ஒரே பொருள் தொடராக அமைவது
    பதிகம், திருமொழி (அல்லது) திருவாய் மொழி எனப்படும்.
    பத்துப் பதிகங்கள் சேர்ந்து அமையும் நூறு பாடல்கள் சதகம்
    (சதம்=100) எனப்படும். இது நாலாயித் திவ்வியப் பிரபந்தத்தில்
    ஒரு பத்து எனவும் குறிக்கப்படுகிறது.

    சான்றாகத் திருவாய்மொழியில் 1-4 என்னும் குறியீடு, முதற்
    பத்து நான்காம் திருவாய்மொழியைக் குறிக்கும்; 1-4-1 என்பது
    முதற்பத்து நான்காம் திருவாய்மொழியில் முதலாம் பாசுரத்தைக்
    குறிக்கும். பெரியாழ்வார் திருமொழி, பெரிய திருமொழி
    ஆகியனவும் இத்தகைய     அமைப்புடையனவே. ஆனால்
    நாச்சியார் திருமொழியிலும், பெருமாள் திருமொழியிலும்
    பத்து
    என்னும் பெரும் பிரிவு கொள்ளப்படவில்லை. முறையே
    அவை 143, 105 பாசுரங்கள் கொண்டவை. ஆதலின் பத்து
    என்னும் பிரிவுக்கு     இடமில்லாமற்போயிற்று. நாச்சியார்
    திருமொழி
    14 திருமொழி கொண்டதாகவும், பெருமாள்
    திருமொழி
    10 திருமொழி கொண்டதாகவும் பகுக்கப்பட்டுள்ளன.
    இவ்விரண்டிலும் முதலில் நிற்கும் எண் திருமொழியையும்,
    அடுத்து நிற்பது அத்திருமொழியில் உள்ள பாசுரத்தையும்
    குறிக்கும். இங்கு 1-1 எனில், முதல் திருமொழி, முதற்பாசுரம்
    என்பது பொருளாகும்.

    நாதமுனிகள் இவ்வாறு பெயர் சூட்டுவதற்கும் (திருமொழி,
    திருவாய்மொழி), பாசுரங்களின் எண்ணிக்கையடிப்படையிலான
    புதிய பகுப்பு முறை அமைப்பதற்கும், முன்னர்க் காட்டியவாறு
    தமிழிலக்கியத்திலேயே முற்சான்றுகள் உள்ளன. எனினும், சிலர்
    வடமொழி வழக்கினை இதற்கு முன் உதாரணமாகக் காட்டுவர்.

    ஆழ்வார்களின்     அருளிச்செயல்களை     வடமொழி
    வேதங்கேளாடு மட்டும் ஒப்பிட்டுக் காணும் போக்கு வளர்ந்த
    காலத்தில் இத்தகைய முடிவுகள் தோன்றின என்று நாம்
    கருதலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:31:36(இந்திய நேரம்)